மறைந்த ஆந்திர முன்னாள் முதல்வர் என்.டி.ராமாராவின் மகன் ஹரிகிருஷ்ணா (61) நேற்று காலை தெலங்கானாவில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தார். அவரது உடலுக்கு அரசியல் மற்றும் சினிமா துறையைச் சேர்ந்த பலர் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். இன்று அவரது உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதி சடங்குகள் நடைபெற உள்ளன.
மறைந்த நடிகரும், தெலுங்கு தேச கட்சியின் நிறுவனருமான என்.டி.ராமாராவின் மகன் ஹரிகிருஷ்ணா (61). இவர் என்.டி.ஆரின் செல்லப்பிள்ளை என கூறுவர். இவர் தனது 4 வயது முதலே சினிமாவில் நடிக்கத் தொடங்கினார். அதன் பின்னர் இவர் பல படங்களில் கதாநாயகனாகவும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்தார். ஆந்திர அரசின் நந்தி விருதையும் பெற்றுள்ளார். இவருக்கு ஜானகிராம், கல்யாண் ராம், தாரக ராம் என்கிற மகன்களும், சுகாசினி என்கிற மகளும் உள்ளனர். இதில், மூத்த மகனான ஜானகிராம், சினிமா தயாரிப்பாளராக இருந்தார். இவர், கடந்த 2014-ல் காரில் சென்றுக்கொண்டிருந்தபோது, நல்கொண்டா மாவட்டத்தில் நடந்த கார் விபத்தில் உயிரிழந்தார்.
கல்யாண் ராமும், தாரக ராமும் (ஜூனியர் என்.டி.ஆர்) தற்போது தெலுங்கு திரைப்பட உலகின் முன்னணி நட்சத்திரங்களாக உள்ளனர். ஹரிகிருஷ்ணாவின் தம்பியான நடிகர் பாலகிருஷ்ணா, அனந்தபூர் மாவட்டம், இந்துப்பூர் எம்.எல்.ஏ. வாக உள்ளார்.
தனது ரசிகர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் ஹரிகிருஷ்ணா, நேற்று முன்தினம், தனது ரசிகரின் மகனின் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்ள தனது 2 நண்பர்களுடன் காரில் நெல்லூருக்குச் சென்றார். பின்னர், நேற்று காலை 4.30 மணிக்கு நெல்லூரிலிருந்து மீண்டும் காரில் புறப்பட்டு ஹைதராபாத் நோக்கி வந்து கொண்டிருந்தார். காரை ஹரிகிருஷ்ணாவே ஓட்டி வந்துள்ளார். அப்போது, தெலங் கானா மாநிலம், நல்கொண்டா மாவட்டம், அன்னேபர்த்தி எனும் இடத்தில் வந்தபோது, கார் திடீரென நிலை தடுமாறி, சாலையில் இருந்த தடுப்பு சுவர் மீது மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. இதில் ஹரிகிருஷ்ணா சுமார் 20 மீட்டர் தொலைவிற்கு தூக்கி எறியப்பட்டார். இதில் அவரது தலை, வயிற்றுப்பகுதிகளில் பலத்த காயங்கள் ஏற்பட்டன. இதில் அவர் ரத்த வெள்ளத்தில் உயிருக்காக போராடினார். உடனடியாக அங்கிருந்தவர்கள், மூவரையும் மீட்டு, நல்கொண்டாவில் உள்ள காமிநேனி மருத்துவமனையில் கொண்டுபோய் சேர்த்தனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி ஹரிகிருஷ்ணா உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்ததும், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, அவரது மகனும் அமைச்சருமான லோகேஷ், ஹரிகிருஷ்ணாவின் மகன்களான கல்யாண்ராம், ஜூனியர் என்.டி.ஆர், மற்றும் உறவினர்கள் மருத்துவமனைக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். ஹரிகிருஷ்ணாவின் உடலைப் பார்த்து அவரது 2 மகன்களும் கதறி அழுதனர். பின்னர், தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் மற்றும் தெலங்கானா, ஆந்திரா மாநில அமைச்சர்கள், சினிமா பிரமுகர்கள், நட்சத்திரங்கள் பலர் மருத்துவமனைக்கு சென்று அஞ்சலி செலுத்தினர். பிரேதப் பரிசோதனைக்கு பிறகு அவரது உடல் ஹைதராபாத்தில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு ஆளுநர் நரசிம்மன் உட்பட சினிமா மற்றும் அரசியல் பிரமுகர்கள் பலர் அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் மாலை ஹைதராபாத்தில் உள்ள தெலுங்கு தேச கட்சியின் தலைமை அலுவலகமான என்.டி.ஆர். பவனில் ஹரிகிருஷ்ணா வின் உடல், பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இங்கு ஆயிரக்கணக்கானோர் ஹரிகிருஷ்ணாவின் உடலைப் பார்த்து கண்ணீர் விட்டு கதறி அழுதனர். மேலும், சினிமா, அரசியல் வட்டாரங்களைச் சேர்ந்த பலரும் ஹரிகிருஷ்ணா உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இன்று ஹரிகிருஷ்ணாவின் இறுதி சடங்குகள் ஹைதராபாத் ஃபிலிம் சிட்டியில் அரசு மரியாதையுடன் நடைபெற உள்ளன.
அரசியல் வாழ்க்கை
தனது தந்தையாரான மறைந்த என்.டி.ராமாராவ், கட்சி தொடங்குவ தாக அறிவித்த பின்னர் ஆந்திர மாநிலம் முழுவதும் கிராமம் கிராமமாக திறந்த வேனில் சூறாவளி பிரச்சாரத்தை ஹரிகிருஷ்ணா மேற்கொண்டார். இதனால் என்.டி.ஆர், கட்சி தொடங்கி வெறும் 9 மாதங்களிலேயே ஆந்திராவில் ஆட்சியை பிடித்து சாதனை படைத்தார். இந்த தீவிர பிரச்சாரத்தில், என்.டி.ராமாவிற்கு இரவும், பகலும் வேன் ஓட்டியவர் ஹரிகிருஷ்ணாதான்.
சினிமா நடிகர், தயாரிப்பாளர் என தீவிரமாக இருந்தபோதும், அனைத்தையும் ஒதுக்கி விட்டு, தனது தந்தைக்காக தொடக்கத்தில் பாடுபட்டவர் ஹரிகிருஷ்ணா. அதன் பின்னர், இவர், 1992-ல் சட்டப் பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு, மாநில அமைச்சரானார். தொடர்ந்து 5 ஆண்டுகள், அதாவது, 1996 வரை இவர் மாநில அமைச்சராக பணியாற்றினார். அதன் பின்னர், இவர் மாநிலங்களவை உறுப்பினராகவும் பதவி வகித்தார். தனது தந்தையாருக்கு மிகவும் நெருக்கமாக, செல்லப் பிள்ளையாக, நம்பிக்கைக்கு உகந்தவராக பணியாற்றினார் ஹரிகிருஷ்ணா.
தாய்மொழியில்தான் பேசுவேன்
இவர் மாநிலங்களவை உறுப்பினராக பதவி வகித்தபோது, ஆந்திர மாநில பிரிவினை குறித்து மாநிலங்களவையில் தீவிர விவாதம் நடைபெற்றது. அப்போது ஹரிகிருஷ்ணா, ஒன்றுபட்ட தெலுங்கு மக்களை பிரிக்கக்கூடாது என மாநிலங் களவையில் தெலுங்கில் தனது கருத்தை தெரிவித்தார். ஆனால், வேற்றுமொழியில் பேச முன் கூட்டியே அனுமதி பெற வேண்டு மென சபாநாயகர் கூறி இவரை தடுத்தார். இதற்கு ஹரிகிருஷ்ணா ஒப்புக்கொள்ளாமல், தெலுங்கு எனது தாய்மொழி, எனக்கு, ஆங்கிலம், ஹிந்தி என பிறமொழிகள் தெரிந்திருந்தாலும், தாய்மொழியில் பேசுவதையே நான் அதிகம் விரும்புவேன். அப்போதுதான் எனது உணர்வுகளை நான் தெளிவாக பிறருக்கு உணர்த்த முடியும் என வாதாடினார். அவருக்கு அப்போது மாநிலங்களவை உறுப்பினராக இருந்த தற்போதைய துணை குடியரசு தலைவர் வெங்கய்ய நாயுடு ஆதரவாக பேசி, இவரது பேச்சை மொழி பெயர்த்தார்.
கை நழுவிய முதல்வர் பதவி
மக்கள் செல்வாக்கு அதிகம் பெற்ற என்.டி.ராமாராவ், லட்சுமி பார்வதியை திருமணம் செய்து கொண்டபோது, ஹரிகிருஷ்ணா வும் இதனை எதிர்த்தார். அப்போது, மருமகனான சந்திரபாபு நாயுடு, தெலுங்கு தேச கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏக்களை ஹைதராபாத்தில் உள்ள ஒரு நட்சித்திர ஓட்டலில் மிகவும் பாதுகாப்பாக தங்க வைத்தார். அதன் பின்னர், நம்பிக் கையில்லா தீர்மானம் கொண்டு வந்து, தனது ஆதரவு எம்.எல்.ஏக் களுடன் ஆட்சியை பிடித்து முதல்வரானார் சந்திரபாபு நாயுடு. ஆனால், என்.டி.ஆரின் வாரிசான ஹரிகிருஷ்ணா தீவிர அரசியலில் இறங்கி இருந்தால், அப்போதே ஆந்திர முதல்வராக பதவி பொறுப்பேற்றிருக்கலாம். ஆனால் அவர் அதைச் செய்யவில்லை. இதனால், ஆந்திர முதல்வராகும் வாய்ப்பு ஹரிகிருஷ்ணாவுக்கு கை நழுவியது.
முக்கிய செய்திகள்
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago