நாடு முழுவதும் ஒரே நேரம் தேர்தல்- சாத்தியமா?

By ஸ்ரீ அருண்குமார்

மீபகாலமாகப் பெரிதும் பேசப்படும் ஒரு விஷயம் ஒரே தேசம் - ஒரே நேரத்தில் தேர்தல். இந்தியா போன்ற மிகப்பெரிய நாட்டில் ஒவ்வொரு வருடமும் ஏதாவது சில மாநிலங்களில் தேர்தல்கள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கும். மத்தியில் ஆளும்கட்சியானது இத்தகைய மாநிலத் தேர்தல்களையும் கருத்தில்கொண்டு பட்ஜெட் முதலான பல கொள்கை முடிவுகளை எடுக்க வேண்டியுள்ளது. சமீபத்தில் நடந்த கர்நாடகத் தேர்தலுக்கு முன்னர் சில நாட்களுக்கு பெட்ரோல் டீசல் விலை உயர்வு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது அனைவருக்கும் நினைவிருக்கும். மத்தியில் ஓர் அரசு பதவிக்கு வந்த புதிதில் மக்களைக் கவரக்கூடிய திட்டங்களையும் இரண்டாம் ஆண்டுக்குப் பிறகு பொருளாதாரத்தை உயர்த்தக்கூடிய சிறிது கடுமையான திட்டங்களையும் கடைசி ஆண்டில் மீண்டும் மக்களைக் கவரக்கூடிய திட்டங்களையும் நடைமுறைப்படுத்துவது வாடிக்கை. ஆனால் ஒவ்வொரு ஆண்டும் முக்கியமான மாநிலங்களில் தேர்தல் நடைபெறுவதும் அந்தத் தேர்தல்களில் வெற்றியை நோக்கமாகக் கொண்டு சீர்திருத்த நடவடிக்கைகளைத் தள்ளிப் போடுவதும் நாட்டின் வளர்ச்சியை பாதிக்கிறது. இதனால் தேர்தல் முறைகளில் சீர்திருத்தம் வேண்டும். அதாவது நாடு முழுவதும் மாநில சட்டசபைகளுக்கும் மத்தியில் நாடாளுமன்றத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தினால் அரசாங்கத்தின் செலவும் பன்மடங்கு குறையும். அதே சமயத்தில் கொள்கை முடிவுகளையும் சீர்திருத்தங்களையும் முன்னெடுத்துச் செல்ல சரியான வழிமுறையாகவும் இருக்கும் என்பதே இதற்கு முக்கிய காரணமாகச் சொல்லப்படுகிறது.

ஆனால் இந்தியா முழுவதும் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே தேர்தல் என்பது சாத்தியமா? நாடாளுமன்றத்துக்கும் சட்டப்பேரவைக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் என்பது தமிழகம் உட்பட பல மாநிலங்களில் நாம் கண்ட ஒன்றுதான். இந்தியக் குடிமகன் எப்போதுமே மாநிலத்தில் யார் ஆள வேண்டும் மத்தியில் யார் ஆள வேண்டும் என்பதில் தெளிவாகவே முடிவெடுக்கிறார். மாநிலத் தேர்தல்களில் பெரும்பாலும் உள்ளூர் பிரச்சினைகளே மக்களின் தேர்வுக்குக் காரணமாகின்றன. ஆனால் நாடாளுமன்றத்துடன் சட்டசபைக்கும் தேர்தல் நடந்தால் அது மத்தியில் ஆளுங்கட்சிக்கு மாநிலத்திலும் செல்வாக்கு அதிகரிக்க உதவும் என்று அரசியல் கட்சிகள் நினைக்கின்றன. 1991 மற்றும் 1996-ம் ஆண்டுகளில் தமிழகத்திலே சட்டசபைக்கும் நாடாளுமன்றத்திற்கும் ஒரே சமயத்தில் தேர்தல் நடந்தது. ஆனால் இரண்டு தேர்தல்களுமே மத்தியில் ஆட்சியில் இருந்த கட்சிக்கு எதிரான முடிவாகவே இருந்தது. 2014 தேர்தலில் நாடெங்கும் மோடி அலை வீசியபோதும் ஒரிஸாவில் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதாதளம் கட்சியே வெற்றி பெற்றது.

இந்த ஆண்டின் இறுதியில் மத்தியபிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த மூன்று மாநிலங்களிலும் மத்திய ஆளுங்கட்சியான பாஜகவே ஆட்சியில் இருக்கிறது. இந்த மூன்று மாநிலங்களில் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் பாஜகவிற்கு உள்ளது. ஒருவேளை இந்த மூன்று மாநிலங்களிலுமே அல்லது ஒரு மாநிலத்திலோ கூட பாஜக தோல்வி அடைந்தால் பாஜகவிற்கு எதிராக ஒரு மாற்று அடையாளப்படுத்தப்படும். இதன் மூலம் எதிர்த்து நிற்க வலுவான கட்சி இல்லாததால் வெற்றி என்ற நிலை மாறும். இதனைத் தவிர்க்கவே ஒரே தேசம் ஒரே தேர்தல் என்ற கோஷம் பாஜகவால் முன்வைக்கப்படுகிறது என்ற கருத்தும் நிலவுகிறது.

எந்தக் கட்சிக்கு எது சாதகம் என்று பார்ப்பதை விடுத்து பொதுவான நன்மைகளைப் பார்க்கலாமா? தேர்தல் செலவுகள் குறையுமா என்பதை இப்போதே கூற முடியாது. ஐந்து ஆண்டுகளில் செய்யக்கூடிய செலவை ஒரே ஆண்டில் செலவழித்து விட்டு, மீதி நான்கு ஆண்டுகளுக்கு செலவேயில்லை என்று கூறலாம். ஆனால் நாடு முழுவதும் பரவியிருக்கின்ற கட்சிகளான பாஜக, காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள் மற்றும் பகுஜன் சமாஜ் போன்றவற்றுக்கு இது செலவைக் குறைக்க உதவலாம். நாடாளுமன்றத் தேர்தலுக்கான செலவிலேயே மாநில தேர்தல்களையும் சந்தித்து விடலாமே! ஐந்து வருடங்களில் இரண்டு தேர்தல்களுக்கு செலவு செய்வதைத் தடுப்பதால் மாநிலக் கட்சிகளுக்கும் இதனால் செலவு குறையும். தேர்தல்களை நம்பியிருக்கும் பல தொழிற்கூடங்களுக்கு இது பெருத்த பாதிப்பை ஏற்படுத்தும் என்பதையும் வேலைவாய்ப்புகளை பாதிக்கும் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் நாடாளுமன்றத்துக்குத் தேர்தல் நடக்கும்போது மட்டுமே எல்லா மாநிலங்களுக்கும் தேர்தல் நடத்தப்படும் என்று உறுதியாக நம்பலாம். ஒருவேளை 2019 பாராளுமன்றத் தேர்தலின்போது இது நடைமுறைப்படுத்தப்பட்டால் 2015-ல் தேர்ந்தெடுக்கப்பட்ட பிஹார் சட்டப் பேரவை முதல் கடந்த மாதம் தேர்ந்தெடுக்கப்பட்ட கர்நாடக சட்டப்பேரவை மற்றும் இந்த வருடக் கடைசியில் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சத்தீஸ்கர் போன்ற மாநில சட்டசபைகள் ஐந்தாண்டுகளைப் பூர்த்தி செய்வதற்கு முன்னரே கலைக்கப்படுமா? ஒருவேளை அரசியல் கட்சிகளிடையே கருத்தொற்றுமை ஏற்பட்டு எல்லா மாநில சட்டசபைகளும் கலைக்கப்பட்டு, ஒரே நேரத்தில் நாடெங்கும் சட்டசபைகளுக்கும் நாடாளுமன்றத்திற்கும் தேர்தல் நடப்பதாக வைத்துக் கொள்வோம். ஒரு சில மாநிலங்களில் தொங்கு சட்டசபை ஏற்பட்டு எந்தக் கட்சியும் ஆட்சி அமைக்க முடியாத நிலையில் மீண்டும் தேர்தல் நடத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டால் என்ன ஆவது? தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டசபைகள் ஓரிரு வருடங்களில் கட்சிப் பிளவு, கட்சித்தாவல், அணி மாற்றங்கள் போன்ற காரணங்களால் கலைக்கப்பட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டால் ஐந்து வருடங்களில் மீதமுள்ள காலத்தில் மத்திய அரசே ஆட்சிப் பொறுப்பை கவர்னர் மூலம் ஏற்றுக் கொள்வது ஜனநாயகத்துக்கு எதிரான தாகாதா?

மாநிலத்தில் ஒரு ஆட்சி கவிழ்ந்தாலோ அல்லது பிற காரணங்களுக்காக சட்டசபை கலைக்கப்பட்டாலோ மத்திய அரசு நேரடியாக ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொள்ள முடியும். ஆனால் மத்தியில் ஆளும் அரசே ஒருவேளை கவிழ நேர்ந்தால்? 1977, 1989 மற்றும் 1996-ம் ஆண்டுகளில் பதவியேற்ற கூட்டணி அரசுகள் தங்களது பதவிக்காலத்தை முடிக்கும் முன்னரே நாடாளுமன்றத்தைக் கலைத்து தேர்தலை சந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. மாநிலங்களில் கவர்னர் ஆட்சி போல மத்தியில் ஜனாதிபதி ஆட்சிக்கு அரசியல் சட்டத்தில் இடமில்லை. அதனால் மீண்டும் நாடாளுமன்றத்துக்குத் தேர்தல் நடத்த வேண்டும். அப்போது மீண்டும் எல்லா மாநில சட்டசபைகளும் கலைக்கப்படுமா? இது ஸ்திரத்தன்மையை பாதித்து மாநில அரசு நிர்வாகத்தை முடக்கி விடாதா? இந்தியா போன்ற ஒரு கூட்டாட்சியமைப்பில் இது மாநிலங்களுக்கான உரிமைகளைப் பறிப்பதாகாதா?

அமெரிக்கா போல மக்கள் நேரடியாகத் தங்களை ஆளுபவரைத் தேர்ந்தெடுக்கும் அதிபர் முறைக்கு மாறினால் மட்டுமே இது என்பது சாத்தியப்படும். நேரடியாக பிரதமரையும் முதல்வரையும் தேர்ந்தெடுப்பது என்பது சர்வாதிகார முறையல்ல. இந்திய ஜனநாயகம் என்பது பல கட்சி ஜனநாயகம் என்று கூறிக்கொண்டாலும் தனிநபர்களைப் பொறுத்தே இந்திய அரசியல் சுழல்கிறது. இதுவரை நடந்த தேர்தல்களை உன்னிப்பாகக் கவனித்தால் மக்களைக் கவரக்கூடிய வெகுஜனத் தலைவர் இருக்கும்போது காங்கிரஸ் அல்லது பாஜகவும் அவ்வாறான தலைவருக்கான வெற்றிடம் இருந்த போதோ அல்லது வெகுஜனத் தலைவர்கள் செல்வாக்கு இழந்த நிலையிலோ கூட்டணி ஆட்சி ஏற்பட்டதையும் காணலாம். மாநிலத் தேர்தல்களைப் பொறுத்தவரைக்கும் பெரும்பாலான மாநிலங்களில் ஒரு தனி மனிதரை நம்பியே கட்சியும் ஆட்சியும் மாறுவதைக் காணலாம்.

கொள்கை முடிவுகளை நடைமுறைப்படுத்துவதில் சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்களின் அழுத்தங்களுக்குப் பெரிதும் ஆளாக வேண்டாம். கூட்டணிக் கட்சிகளின் நிர்பந்தத்துக்குப் பணிய வேண்டாம். நாடாளுமன்றம், சட்டப் பேரவைகளில் ஆரோக்கியமான விவாதங்கள் அதிகரிக்கும். கட்சி சார்பில்லாமல் கொள்கைகளின் அடிப்படையில் நாட்டை பாதிக்கும் விஷயங்களில் முடிவு எடுக்கலாம். இவையெல்லாம் அதிபர் ஆட்சி முறையினால் உண்டாகக்கூடிய நன்மைகள். ஆனால் இதற்கு அரசியல் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும். நாடாளுமன்றத்தில் இரண்டில் மூன்று பங்கு ஆதரவுடன் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். மற்றும் மாநிலங்களும் இதனை ஏற்றுக் கொள்ள வேண்டும். இவையெல்லாம் 2019 தேர்தலுக்குள் சாத்தியமே கிடையாது. அதுவரை இதைப் பற்றிய ஆக்கப்பூர்வமான விவாதங்கள் ஒரு கருத்துருவாக்கத்துக்குப் பெரிதும் உதவும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்