தொலைக்காட்சி விவாதத்தில் ராமர் குறித்து அவதூறாக பேசியதால் தெலுங்கு ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் முதல் பாகத்தில் பங்கேற்ற ‘கத்தி’ மகேஷ், ஹைதராபாத் நகரில் இருந்து 6 மாதத்துக்கு தெலங்கானா போலீஸாரால் வெளியேற்றப்பட்டுள்ளார்.
கடந்த ஆண்டு, தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இதில், குறும்பட தயாரிப்பாளரும், இயக்குநரும், நடிகரும் சினிமா விமர்சகருமான ‘கத்தி’ மகேஷ் பங்கேற்றார். இந்நிகழ்ச்சி மூலம் பிரபலமானார். கடவுள் நம்பிக்கை இல்லாதவராக தன்னை அடையாளம் காட்டிக்கொண்ட மகேஷ், பல தனியார் தெலுங்கு தொலைக்காட்சிகளில் நடைபெறும் விவாத மேடைகளில் பங்கேற்றார்.
இந்நிலையில், ‘காலா’ படத்தில் வரும் ஒரு பாடல் காட்சியில் ராவணன் தொடர்பாக இடம்பெற்ற கருத்துகள் குறித்து தெலுங்கு தொலைக்காட்சிகளில் விவாதம் நடைபெற்றது. இதில் மகேஷும் கலந்து கொண்டு ராமருக்கு எதிராக பல கருத்துகளை கூறினார். இதனால் இவர் மீது சில இந்து அமைப்பினர் ஹைதராபாத் மாதப்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதுகுறித்து 13 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்து மகேஷிடம் விசாரணை நடத்தினர். இந்நிலையில், ஸ்ரீபீடம் பீடாதிபதி பரிபூரணானந்தா சுவாமிகள் வெளியிட்ட அறிக்கையில், “இந்து மதத்தைச் சேர்ந்த பல கோடி பேர் வணங்கும் ராமரை ‘கத்தி’ மகேஷ் விமர்சித்ததால், இந்துக்கள் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் மகேஷை கைது செய்யும் வரை ஆன்மீக யாத்திரை நடத்தப்படும்” என கூறியிருந்தார். இதனால் ஹைதராபாத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் இரவு ஹைதராபாத் போலீஸார் ‘கத்தி’ மகேஷை கைது செய்தனர். உடனடியாக இவரை 6 மாதங்கள் வரை ஹைதராபாத் நகருக்குள் நுழைய தடை விதிப்பதாக தெலங்கானா டிஜிபி மஹேந்தர் ரெட்டி உத்தரவு பிறப்பித்தார். இதன்படி போலீஸார் மகேஷை ஒரு வேனில் ஏற்றி, அவரது சொந்த ஊரான சித்தூரில் கொண்டுபோய் இறக்கிவிட்டனர். இதுகுறித்து தெலங்கானா டிஜிபி மஹேந்தர் ரெட்டி ஹைதராபாத்தில் நேற்று கூறியதாவது:
தெலங்கானா மாநிலத்தில் கடந்த 4 ஆண்டுகளாக மதக் கலவரமோ, ஜாதி பிரச்சினைகளோ எழவில்லை. ஆனால், தற்போது ‘கத்தி’ மகேஷ் கடந்த ஓராண்டாக பலரை விமர்சனம் செய்து வருகிறார். சமீபத்தில் ராமரைப் பற்றி இந்துக்களின் மனம் புண்படும் வகையில் பேசியுள்ளார். இதனால், அவர் ஹைதராபாத் நகருக்குள் நுழைய 6 மாதங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பிய தொலைக்காட்சிக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அவர்களுடைய பதிலைப் பொறுத்து நடவடிக்கை எடுக்கப்படும். பத்திரிக்கைகள், சமூக வலைதளங்களிலும் சமூக பிரச்சினை எனும் பேரில் மதக் கலவரங்களைத் தூண்டினாலோ அல்லது இனம், ஜாதி, அமைப்பினரை விமர்சித்தாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு டிஜிபி மஹேந்தர் கூறினார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
23 hours ago