‘அனைவரும் அமைதி காக்கவும்’ - மீண்டும் வெடித்த வன்முறையால் மம்தா வேண்டுகோள்!

By செய்திப்பிரிவு

கொல்கத்தா: மாநிலத்தில் அமைதி நிலவ அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றும், வன்முறை போராட்டங்கள் மூலம் பொறியில் சிக்காதீர்கள் என்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வக்பு சட்ட திருத்தத்தை எதிர்த்து முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் மேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாத் மாவட்டத்தின் துலியன் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை போராட்டங்கள் நடைபெற்றன. இதில் மூன்று பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். இதையடுத்து, இந்தப் போராட்டம் இரு தரப்பினரிடையேயான மோதலாக உருவெடுத்தது. மாநிலத்தின் வேறு சில பகுதிகளிலும் வன்முறைச் சம்பவங்கள் நடந்தன.

இதனிடையே, மேற்கு வங்கத்தின் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள பங்கரில் காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே நேற்று (திங்கள்கிழமை) ஏற்பட்ட மோதலில் பலர் காயமடைந்தனர், பல போலீஸ் வாகனங்கள் எரிக்கப்பட்டன.

வக்பு திருத்தச் சட்டம் மேற்கு வங்கத்தில் அமல்படுத்தப்படாது என்று கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்த மம்தா பானர்ஜி மாநிலத்தின் அமைதிக்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். நேற்று நடந்த வன்முறையை அடுத்து, அனைவரும் அமைதி காக்க வேண்டும் என்ற மீண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளார் மம்தா பானர்ஜி.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள மம்தா பானர்ஜி, “மதத்தின் பெயரால், மதத்துக்கு தொடர்பற்ற விளையாட்டுகளை யாரும் விளையாடக்கூடாது. பக்தி, பாசம், மனிதநேயம், அமைதி, நட்பு, கலாச்சாரம், நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமை ஆகியவற்றையே தர்மம் குறிக்கிறது. மனிதர்களை நேசிக்க வேண்டும் என்பதே அனைத்து மதங்களின் உயர்ந்த கருத்தாக உள்ளது. நாம் தனியாகப் பிறக்கிறோம், தனியாகவே இறக்கிறோம்; பிறகு ஏன் சண்டையிட வேண்டும்? கலவரங்கள், போர், அமைதியின்மை ஆகியவை எதற்கு?

அனுமதி பெற்று அமைதியான முறையில் போராட்டங்களை நடத்த அனைவருக்கும் உரிமை உண்டு. ஆனால், யாராக இருந்தாலும் சரி, சட்டத்தை தங்கள் கைகளில் எடுத்துக்கொள்ள அனுமதி கிடையாது. சட்டத்தின் பாதுகாவலர்களாக நாங்கள் இருக்கிறோம். சட்டத்துக்கு அப்பாற்பட்டு செயல்படுபவர்கள் எங்களுக்குத் தேவையில்லை. அதனால்தான் கூறுகிறேன், யாராவது உங்களைத் தூண்டிவிட முயற்சிக்கும்போது, ​​பொறியில் சிக்கிக்கொள்ள வேண்டாம் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.

ஆத்திரமூட்டல்களுக்கு மத்தியில் மனதை அமைதியாக வைத்திருப்பவர்கள்தான் உண்மையான வெற்றியாளர்கள். அதுதான் உண்மையான வெற்றி" என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், முர்ஷிதாபாத்தில் நிலைமை படிப்படியாக இயல்பு நிலைக்குத் திரும்பி வருவதாகவும், கடைகள் மீண்டும் திறக்கப்பட்டு, இடம்பெயர்ந்த குடும்பங்கள் திரும்பி வரத் தொடங்கியுள்ளன என்றும் மேற்கு வங்க காவல்துறை தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்