மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் தராமல் பரிந்துரை செய்தது சட்டவிரோதம்: உச்ச நீதிமன்ற தீர்ப்பின் முழு விவரம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: தமிழக அரசின் 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் அவற்றை ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை செய்தது சட்டவிரோதம் என அறிவித்துள்ள உச்ச நீதிமன்ற நீதிபதிகள், அந்த 10 மசோதாக்களும் சட்டமாகி அமலுக்கு வந்துவிட்டதாக அறிவித்துள்ளனர்.

பல்கலைக்கழகங்களின் வேந்தராக முதல்வரை நியமிக்கும் மசோதா, துணைவேந்தர்கள் நியமன மசோதா, பல்வேறு பல்கலைக்கழகங்களின் திருத்த மசோதாக்கள் என மொத்தம் 12 மசோதாக்களை தமிழக அரசு ஆளுநர் ஆர்.என்.ரவியின் ஒப்புதலுக்காக அனுப்பியது. ஆனால் துணைவேந்தர்கள் நியமனம் உள்ளிட்ட தமிழக அரசின் மசோதாக்கள் மற்றும் தமிழக அரசின் கொள்கை முடிவுகள் சார்ந்த பல்வேறு திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் கிடப்பில் போட்டதை எதிர்த்தும், இந்த மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநருக்கு காலவரம்பை நிர்ணயம் செய்யக்கோரியும் தமிழக அரசு கடந்த 2023-ல் ஆளுநருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த நிலையில், 10 மசோதாக்களை, ஆளுநர், தமிழக அரசுக்கு மீண்டும் திருப்பி அனுப்பினார். அந்த 10 மசோதாக்களையும் தமிழக அரசு மீண்டும் சட்டப்பேரவையில் மறுநிறைவேற்றம் செய்து ஆளுநருக்கு 2-வது முறையாக அனுப்பியது. ஆனால் அந்த மசோதாக்களை ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை செய்தார்.

இதையடுத்து ஆளுநருக்கு எதிராக தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் கூடுதல் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், மறுநிறைவேற்றம் செய்து ஆளுநருக்கு 2-வது முறையாக அனுப்பி வைக்கப்பட்ட சட்ட மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அவசரகதியில் பரிந்துரைத்திருப்பது சட்டவிரோதமானது எனக் கூறியிருந்தது. இந்த வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வில் நடந்து வந்தபோது, ‘இந்த மசோதாக்களை கிடப்பில் போட்டு ஆளுநர் 3 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்?' என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். பின்னர் இதுதொடர்பாக இருதரப்பிலும் சந்தித்துபேசி பரஸ்பரம் சுமூக தீர்வு காண வேண்டும் என்றும், இல்லையென்றால் உச்ச நீதிமன்றம் தலையிட்டு தீர்வு காண வேண்டிய நிலை ஏற்படும் எனவும் நீதிபதிகள் அறிவுறுத்தியிருந்தனர். அதன்படி தமிழக ஆளுநரை, முதல்வர் ஸ்டாலின் மூத்த அமைச்சர்களுடன் நேரில் சந்தித்து பேசியும் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கவில்லை.

இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்து வந்தது. அப்போது தமிழக அரசின் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் அபிஷேக் மனு சிங்வி, பி.வில்சன், முகுல் ரோஹ்தகி, ராகேஷ் திவேதி ஆகியோர் ஆஜராகி, ‘ஆளுநருக்கும், தமிழக அரசுக்கும் இடையிலான மோதல் போக்கு தொடர்கதையாகவே உள்ளது. ‘கூடிய விரைவில்’ என்ற வார்த்தையை வைத்துக்கொண்டு ஆளுநர் காலவரையின்றி இவ்வாறு மசோதாக்களையும், கோப்புகளையும் இஷ்டம்போல தேக்கி வைக்க அனுமதித்தால் மாநிலங்களில் நிர்வாக முடக்கம் ஏற்பட்டுவிடும். மாநில அரசு மற்றும் அமைச்சர்களின் ஆலோசனை அடிப்படையில்தான் ஒரு ஆளுநர் செயல்பட முடியும்' என வாதிட்டனர்.

ஆளுநர் தரப்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் ஆர்.வேங்கடரமணி மற்றும் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆகியோர், யுஜிசி விதிகளுக்கு கட்டுப்பட்டு செயல்படும் துணைவேந்தர்களின் பொறுப்பை மாநில அரசு ஆக்கிரமிக்க முயல்கிறது. 2020 முதல் தற்போது வரை பெறப்பட்ட 181 சட்ட மசோதாக்கள், அரசாணைகள் உள்ளிட்ட கோப்புகளில் 152-க்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். இதேபோல டிஎன்பிஎஸ்சி-க்கு உறுப்பினர்கள் மற்றும் தலைவரை நியமிக்கும் பரிந்துரையில் வெளிப்படைத்தன்மை இல்லை என்பதாலும், பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிக்கும் தேடுதல் குழு நியமனத்தில் உரிய வழிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்பதாலும் அதுதொடர்பான கோப்புகளுக்கு ஆளுநர் ஒப்புதல் அளி்க்கவில்லை' என்றனர்.

இதையடுத்து நீதிபதிகள் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்திருந்தனர். இந்நிலையில் நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, ஆர்.மகாதேவன் ஆகியோர் நேற்று பிறப்பித்த தீர்ப்பு விவரம்: அரசியல் சாசன பிரிவு 200-ன் படி ஆளுநர் தனக்குரிய அதிகாரத்தை தாண்டி வேறு முடிவுகளை எடுக்க முடியாது. ஆளுநருக்கென முழுமையான வீட்டோ அதிகாரமோ, அல்லது தன்னிச்சையான பாக்கெட் வீட்டோ அதிகாரமோ கிடையாது. அவர் அமைச்சரவையின் ஆலோசனைப்படியே நடக்க கடமைப்பட்டவர்.

முதல்முறையாக அனுப்பி வைக்கப்படும் மசோதாவை ஆளுநர் நிறுத்தினால் அவர் அரசியல் சாசன பிரிவு 200-ன் நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும். ஒரு மசோதாவுக்கு ஒப்புதல் வழங்க மறுப்பதாக வெறுமனே அறிவிக்க முடியாது. ஒரு மசோதா மறுநிறைவேற்றம் செய்து அனுப்பி வைக்கப்பட்டால் அதை குடியரசுத் தலைவரின் முடிவுக்கு அனுப்பி வைக்க முடியாது. அதேநேரம் இரண்டாவது முறையாக அனுப்பி வைக்கப்பட்ட மசோதா, முன்னர் சமர்ப்பிக்கப்பட்ட மசோதாவில் இருந்து வேறுபட்டால் மட்டுமே அதை விதிவிலக்காக கருதி குடியரசுத் தலைவருக்கு அனுப்ப முடியும். சட்டப்பேரவை நிறைவேற்றிய ஒரு மசோதாவை நிறுத்திவைத்து குடியரசுத் தலைவருக்கு அனுப்ப ஆளுநர் முடிவு செய்தால் அது தொடர்பாக அமைச்சரவை ஆலோசனைப்படி ஒரு மாத காலத்துக்குள் ஆளுநர் முடிவு எடுக்க வேண்டும்.

அமைச்சரவையின் ஆலோசனைக்கு புறம்பாக அந்த மசோதாக்களை நிறுத்திவைப்பதாக இருந்தால், ஆளுநர் அதிகபட்சமாக 3 மாதங்களுக்குள் அவற்றை திருப்பி அனுப்ப வேண்டும். அதேவேளை அந்த மசோதாக்கள் மாநில சட்டப்பேரவையில் மறுநிறைவேற்றம் செய்யப்பட்டு மீண்டும் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டால் அந்த மசோதாக்கள் மீது ஒரு மாதத்துக்குள் ஒப்புதல் அளிக்க வேண்டும். எனவே பேரவையில் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பப்பட்ட 10 மசோதாக்களையும் ஆளுநர் கிடப்பில் போட்டதும், அதை குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை செய்ததும் சட்டவிரோதம் மட்டுமல்ல, சரியான செயல்பாடும் அல்ல.

ஆளுநரின் இந்த முடிவு சட்டரீதியாக நீதிமன்றத்தின் ஆய்வுக்கு உட்பட்டதே. இந்த 10 மசோதாக்கள் மீது குடியரசுத் தலைவர் எடுக்கும் எந்தவொரு எதிர்முடிவுகளும் ஏற்றுக்கொள்ள முடியாதவை. ஆளுநர் இந்த மசோதாக்களை ஆண்டு கணக்கில் கிடப்பில் போட்டு தாமதப்படுத்தியதை கருத்தில் கொண்டு, 10 மசோதாக்களும் ஆளுநருக்கு அனுப்பப்பட்டபோதே அவை சட்டமாகி நடைமுறைக்கு வந்துவிட்டன என உச்ச நீதிமன்றத்தின் தனிப்பட்ட அதிகாரத்தை பயன்படுத்தி அறிவிக்கிறோம். இதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை. அதேநேரம் ஆளுநர் மீதும், ஆளுநர் அலுவலகத்தின் மீதும் உச்ச நீதிமன்றம் நல்மதிப்பை வைத்துள்ளது. அவர் அரசின் ஆலோசகராக, மாநில அரசுடன் இணைந்து நடக்க வேண்டுமென்பதே எங்களின் விருப்பம். இவ்வாறு தீர்ப்பளித்துள்ளனர்.

வரலாற்று சிறப்​புமிக்க தீர்ப்பு: உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து சட்​டப்​பேர​வை​யில் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் பேசி​ய​தாவது: இரண்​டாவது முறை சட்​டப்​பேரவை நிறைவேற்​றிய சட்ட முன்​வடிவு​களுக்கு ஆளுநர் ஒப்​புதல் அளித்தே ஆக வேண்​டும் என்று அரசி​யல் சட்​டம் வரையறுத்​திருந்த போதும், அவற்​றுக்கு ஒப்​புதல் அளிக்​காமல் ஆளுநர் காலம் தாழ்த்தி வந்​தார். அதற்கு தனக்கு அதி​காரம் இருப்​ப​தாக​வும் தெரிவித்து வந்​தார். எனினும், வரலாற்று சிறப்​புமிக்க தீர்ப்பை உச்ச நீதி​மன்​றம் வழங்​கி​யுள்​ளது. இந்த தீர்ப்பு தமிழகத்​துக்கு மட்​டுமின்​றி,இந்​தியா​வில் உள்ள அனைத்து மாநில அரசுகளுக்​கும் கிடைத்த மாபெரும் வெற்​றி​ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்