புதுடெல்லி: வக்பு திருத்த மசோதா மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், மசோதாவுக்கு எதிராக வெளிநடப்பு செய்யாமல் விவாதத்தில் ஈடுபடவும், வாக்கெடுப்புக்கு வலியுறுத்தவும் எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
வக்பு திருத்த மசோதா மக்களவையில் இன்று மதியம் 12 மணிக்கு தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த மசோதா மீது 8 மணி நேரம் விவாதம் நடத்தப்படும் என்றும், தேவைப்படின் சூழலைப் பொறுத்து கூடுதல் நேரம் விவாதிக்கப்படும் என்றும் மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சரும் சிறுபான்மை நலத்துறை அமைச்சருமான கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார். இதன்பிறகு வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அவையில் கட்சிகளின் பலம்: மக்களவையில் மொத்தம் 543 எம்பிக்கள் உள்ளனர். வக்பு சட்ட திருத்த மசோதாவை நிறைவேற்ற 272 எம்பிக்களின் ஆதரவு தேவை. பாஜக மற்றும் பாஜக கூட்டணிக்கு 294 எம்பிக்களின் ஆதரவு உள்ளது. காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு 234 எம்பிக்களின் ஆதரவு உள்ளது. ஆளும் பாஜக கூட்டணிக்கு பெரும்பான்மை பலம் இருப்பதால் மக்களவையில் வக்பு சட்ட திருத்த மசோதா எளிதாக நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மாநிலங்களவையில் மொத்தம் 236 எம்பிக்கள் உள்ளனர். இதில் ஆளும் பாஜக கூட்டணிக்கு 121 எம்பிக்களும் காங்கிரஸ் கூட்டணிக்கு 85 எம்பிக்களும் உள்ளனர். இரு அணிகளை சேராத 30 எம்பிக்களும் உள்ளனர். மாநிலங்களவையில் வக்பு சட்ட திருத்த மசோதாவை நிறைவேற்ற 119 எம்பிக்களின் ஆதரவு தேவை. எனவே மாநிலங்களவையிலும் மசோதா எளிதாக நிறைவேற்றப்படும். ஏப்ரல் 4-ம் தேதி பட்ஜெட் தொடர் நிறைவடைகிறது. அதற்குள்ளாக இரு அவைகளிலும் மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு முனைப்பு காட்டுகிறது என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.
எதிர்க்கட்சிகள் வியூகம்: வக்பு திருத்த மசோதாவை எவ்வாறு எதிர்கொள்வது என்பது தொடர்பாக எதிர்க்கட்சிகள் நேற்று(ஏப். 1) ஆலோசனையில் ஈடுபட்டன. காங்கிரஸ், திமுக, திரிணமூல் காங்கிரஸ் உட்பட 22 எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 36 உறுப்பினர்கள் இதில் கலந்து கொண்டனர்.
அனைத்து எதிர்க்கட்சிகளும் தங்கள் உறுப்பினர்கள் அடுத்த 3 நாட்களுக்கு அவைக்கு தவறாமல் வருவதற்கு ஏற்ப கொரடா உத்தரவு பிறப்பிக்க முடிவு செய்யப்பட்டது. மேலும், மசோதாவுக்கு எதிராக போராட்டங்கள் அல்லது வெளிநடப்பு நடத்த வேண்டாம் என்றும் மசோதாக்களை நிறைவேற்றும் முன்பாக வாக்கெடுப்புக்கு விட அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும், இரு அவைகளிலும் மசோதாவுக்கு எதிராக ஒன்றிணைந்து வாக்களிக்க வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது.
இந்த மசோதாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் குரலாக முஸ்லிம் உறுப்பினர் ஒருவர் பேச வேண்டும் என்று தென்னிந்திய எம்பி ஒருவர் வலியுறுத்தியதாகவும், ஆனால் அந்த யோசனை நிராகரிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த மசோதா ஒரு மதத்துக்கு எதிரானது என்ற வாதத்தைவிட, அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்ற வாதத்தை முன்வைப்பதே உகந்தது என்ற முடிவு ஏற்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
திருத்தங்கள் என்ன?: பழைய சட்டத்தின்படி வக்பு வாரியம் உரிமை கோரும் நிலங்கள் தொடர்பான புகார்களை வக்பு தீர்ப்பாயம் மட்டுமே விசாரிக்க முடியும். தற்போதைய சட்ட திருத்தங்களின்படி வருவாய் நீதிமன்றம், உரிமையியல் நீதிமன்றம், உயர் நீதிமன்றங்களும் வக்பு வாரிய சொத்துகள் குறித்து விசாரணை நடத்த முடியும்.
பழைய சட்டத்தின்படி வக்பு தீர்ப்பாயத்தின் முடிவே இறுதியானது. இந்த முடிவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய முடியாது. புதிய சட்டத் திருத்தங்களின்படி வக்பு தீர்ப்பாயத்தின் முடிவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடியும்.
பழைய சட்டத்தின்படி ஓர் இடத்தில் மசூதி அல்லது முஸ்லிம் அமைப்புகளின் கட்டிடங்கள் இருந்தால் அந்த இடம் தானாகவே வக்பு வாரியத்துக்கு சொந்தமாகி விடும். புதிய சட்ட திருத்த மசோதாவின்படி, வக்பு வாரியத்துக்கு நிலம் தானமாக அளிக்கப்பட்டு இருந்தால் மட்டுமே அந்த நிலம் சட்டப்பூர்வமானது. வேறு இடத்தில் மசூதி கட்டப்பட்டு இருந்தால், அந்த இடம் வக்பு வாரிய சொத்தாக கருதப்படாது.
பழைய சட்டத்தின்படி பெண்கள் மற்றும் இதர மதங்களை சேர்ந்தவர்கள் வக்பு வாரியத்தில் உறுப்பினராக அனுமதி கிடையாது. புதிய சட்ட மசோதாவின்படி 2 பெண்கள் மற்றும் இதர மதங்களை சேர்ந்த 2 பேர் வக்பு வாரியத்தில் உறுப்பினராக இணைக்கப்படுவர்.
தாவூதி போரா உள்ளிட்ட பிரிவினருக்காக தனி வக்பு வாரியம் அமைக்கவும் வக்பு சட்ட திருத்த மசோதாவில் வழிவகை செய்யப்பட்டிருக்கிறது.
வக்பு வாரிய சொத்துகளை முறைப்படி பதிவு செய்ய வேண்டும். இந்த சொத்துகளின் விவரங்கள் மாவட்ட வருவாய் துறை இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் சட்ட திருத்த மசோதாவில் இடம்பெற்றுள்ளன.
முக்கிய செய்திகள்
இந்தியா
14 mins ago
இந்தியா
47 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
1 hour ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago