புதுடெல்லி: அடுத்த மாதம் 3ம் தேதி முதல் 6ம் தேதி வரை இரண்டு நாடுகளுக்கான பயணமாக தாய்லாந்து மற்றும் இலங்கைக்கு பிரதமர் நரேந்திர மோடி செல்கிறார். இந்திய வெளியுறவுத்துறை இதனை உறுதிப்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தாய்லாந்து பிரதமர் பேடோங்டார்ன் ஷினவத்ராவின் அழைப்பின் பேரில், பிரதமர் நரேந்திர மோடி, ஏப்ரல் 3 முதல் 4 வரை தாய்லாந்தின் பாங்காக்கிற்கு பயணம் மேற்கொள்கிறார். தற்போதைய பிம்ஸ்டெக்(BIMSTEC) அமைப்பின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் தாய்லாந்து, 6வது பிம்ஸ்டெக் உச்சிமாநாட்டை ஏப்ரல் 4 ஆம் தேதி நடத்துகிறது. அதில், பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொள்கிறார். பிரதமர் மோடி, தாய்லாந்துக்கு மேற்கொள்ளும் மூன்றாவது பயணம் இது.
2018 ஆம் ஆண்டு நேபாளத்தின் காத்மாண்டுவில் நடந்த 4வது பிம்ஸ்டெக் உச்சிமாநாட்டிற்குப் பிறகு பிம்ஸ்டெக் தலைவர்களின் முதல் நேரடி சந்திப்பாக இது இருக்கும். கடைசியாக, அதாவது 5வது பிம்ஸ்டெக் உச்சிமாநாடு மார்ச் 2022 இல் இலங்கையின் கொழும்பில் காணொளி காட்சி வாயிலாக நடைபெற்றது.
தற்போது நடைபெற உள்ள 6வது உச்சிமாநாட்டின் கருப்பொருள் "வளமான, நெகிழ்ச்சியான மற்றும் வெளிப்படையான பிம்ஸ்டெக்" என்பதாகும். உச்சிமாநாட்டின் போது பிம்ஸ்டெக் ஒத்துழைப்புக்கு அதிக உத்வேகத்தை ஏற்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து தலைவர்கள் ஆலோசிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
» காஷ்மீரில் என்கவுன்ட்டர்: 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை; காவலர்கள் மூவர் மரணம்
» யார் இந்த இரானி கொள்ளையர்கள்? - சென்னை என்கவுன்ட்டர் பின்புலம்
BIMSTEC கட்டமைப்பிற்குள் ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகள் குறித்தும் தலைவர்கள் விவாதிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாதுகாப்பை மேம்படுத்துதல்; வர்த்தகம் மற்றும் முதலீட்டை எளிதாக்குதல்; டிஜிட்டல் இணைப்பை நிறுவுதல்; உணவு, எரிசக்தி, காலநிலை மற்றும் மனித பாதுகாப்பில் ஒத்துழைத்தல்; திறன் மேம்பாட்டை ஊக்குவித்தல்; மக்களிடையேயான உறவுகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட பிராந்திய ஒத்துழைப்பு மற்றும் கூட்டாண்மையை வலுப்படுத்த BIMSTEC இல் இந்தியா பல முயற்சிகளை எடுத்து வருகிறது.
பிரதமர் ஏப்ரல் 3 அன்று தாய்லாந்து பிரதமருடன் பிரதமர் மோடி ஒரு சந்திப்பை நடத்த உள்ளார். இந்த சந்திப்பின் போது, இரு பிரதமர்களும் இருதரப்பு ஒத்துழைப்பை மதிப்பாய்வு செய்து, நாடுகளுக்கு இடையிலான எதிர்கால கூட்டாண்மைக்கான வழியை வகுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவும் தாய்லாந்தும் கலாச்சார, மொழியியல் மற்றும் மத உறவுகளால் பிணைக்கப்பட்ட பகிரப்பட்ட நாகரிக பிணைப்புகளைக் கொண்ட கடல்சார் அண்டை நாடுகளாகும்.
தாய்லாந்திலிருந்து பிரதமர் மோடி ஏப்ரல் 4 முதல் 6 வரை இலங்கை அதிபர் அனுர குமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில் அந்நாட்டுக்கு அரசு முறைப் பயணமாக பயணம் மேற்கொள்வார்.
இந்தப் பயணத்தின் போது, இலங்கை அதிபரின் இந்திய அரசு முறைப் பயணத்தின் போது ஏற்றுக்கொள்ளப்பட்ட "பகிரப்பட்ட எதிர்காலத்திற்கான கூட்டாண்மைகளை வளர்ப்பது" என்ற கூட்டுத் தொலைநோக்குப் பார்வையில் ஒப்புக் கொள்ளப்பட்ட ஒத்துழைப்புத் துறைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை மறுஆய்வு செய்வதற்காக, பிரதமர் மோடி இலங்கை அதிபருடன் கலந்துரையாடல்களை நடத்துவார். மூத்த பிரமுகர்கள் மற்றும் அரசியல் தலைவர்களுடனும் பிரதமர் மோடி சந்திப்புகளை மேற்கொள்வார். இந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக, இந்திய நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும் மேம்பாட்டுத் திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்காக பிரதமர் அனுராதபுரத்திற்கும் செல்வார்.
கடந்த 2019ல் பிரதமர் மோடி கடைசியாக இலங்கைக்கு பயணம் செய்தார். முன்னதாக, இலங்கை அதிபர் அனுர குமார திசாநாயக்க பதவியேற்ற பிறகு தனது முதல் வெளிநாட்டு பயணமாக இந்தியாவுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டார். இந்தியாவும் இலங்கையும் வலுவான கலாச்சார மற்றும் வரலாற்று இணைப்புகளுடன் நாகரிக பிணைப்புகளைப் பகிர்ந்து கொள்கின்றன. இந்தப் பயணம் நாடுகளுக்கு இடையேயான வழக்கமான உயர் மட்ட ஈடுபாடுகளின் ஒரு பகுதியாகும். மேலும் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான பன்முக கூட்டாண்மையை ஆழப்படுத்துவதில் மேலும் உத்வேகத்தை அளிக்கும்.
பிரதமரின் தாய்லாந்து மற்றும் இலங்கை பயணம் மற்றும் 6வது பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டில் அவர் பங்கேற்பது, 'அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை' கொள்கை, 'கிழக்கு நோக்கி செயல்படுங்கள்' கொள்கை, 'மஹாசாகர்' (பிராந்தியங்கள் முழுவதும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கான பரஸ்பர மற்றும் முழுமையான முன்னேற்றம்) தொலைநோக்கு பார்வை மற்றும் இந்தோ-பசிபிக் தொலைநோக்கு பார்வை ஆகியவற்றில் இந்தியாவின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago