யார் இந்த இரானி கொள்ளையர்கள்? - சென்னை என்கவுன்ட்டர் பின்புலம்

By செய்திப்பிரிவு

சென்னையில் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட மகாராஷ்டிர கொள்ளையன் ஜாபர் குலாம் உசேன் இரானியின் சொந்த ஊரில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.

கடந்த 25-ம் தேதி காலை சென்னையின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து 6 இடங்களில் வழிப்பறி நடைபெற்றது. இந்த கொள்ளையில் ஈடுபட்ட மகாராஷ்டிராவை சேர்ந்த ஜாபர் குலாம் உசேன் இரானி, அவரது கூட்டளிகள் சல்மான் உசேன் இரானி, மிசம்சா மேசம் இரானி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். திருடிய நகைகள், திருட்டுக்கு பயன்படுத்திய பைக்கை மீட்க 3 பேரும் சென்னை தரமணி பகுதிக்கு கடந்த 26-ம் தேதி அதிகாலை அழைத்துச் செல்லப்பட்டனர்.

அப்போது பைக்கில் மறைத்து வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியை எடுத்து போலீஸார் மீது ஜாபர் குலாம் உசேன் இரானி 2 முறை சுட்டார். போலீஸார் தற்காப்புக்கு சுட்டபோது அவர் உயிரிழந்தார். இதன்காரணமாக இரானியின் சொந்த ஊரான மகாராஷ்டிராவின் ஆம்பிவளி பகுதியின் பாட்டீல் நகரில் பதற்றம் எழுந்திருக்கிறது. அந்த பகுதியில் மகாராஷ்டிர போலீஸார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

இதுகுறித்து மகாராஷ்டிர போலீஸார் கூறியதாவது: மகாராஷ்டிராவின் கல்யாண் அருகேயுள்ள ஆம்பிவளி பகுதி திருடர்கள், கொள்ளையர்களின் கூடாரமாக கருதப்படுகிறது. மும்பை உட்பட மகாராஷ்டிராவின் முக்கிய நகரங்களில் நடைபெறும் 60 சதவீத திருட்டுகளில் ஆம்பிவளி பகுதி கொள்ளையர்களுக்கு தொடர்பு இருக்கிறது.

இந்த பகுதி கொள்ளையர்களை கைது செய்வது கடினம். போலீஸார் கைது செய்ய சென்றால் கல்வீச்சு தாக்குதல் நடத்தப்படும். பெண்கள் ஒன்றுகூடி பெரும் போராட்டங்களில் ஈடுபடுவார்கள்.

கடந்த 2009-ம் ஆண்டில் ஒரு திருடனை பிடிக்க மகாராஷ்டிர போலீஸார் ஆம்பிவளி பகுதிக்கு சென்றனர். அப்போது போலீஸார் மீது மிகப்பெரிய தாக்குதல் நடத்தப்பட்டது. போலீஸார் தற்காப்புக்காக சுட்டபோது 2 பேர் உயிரிழந்தனர். 5 போலீஸார் படுகாயம் அடைந்தனர்.

கடந்த 2015 ஜூலையில் ஆம்பிவளி பகுதியில் போலீஸார் மீது நடத்தப்பட்ட கல்வீச்சு தாக்குதலில் 2 போலீஸார் படுகாயம் அடைந்தனர். கடந்த 2017 ஏப்ரலில் 2 திருடர்களை பிடிக்க 25 போலீஸார் ஆம்பிவளிக்கு சென்றனர். அப்போது அப்பகுதி மக்கள் போலீஸார் மீது மண்எண்ணெயை ஊற்றினர். அவர்களை தீ வைத்து எரித்துவிடுவதாக மிரட்டினர். இதனால் போலீஸார் வெறுங்கையோடு திரும்பினர். திருடர்களை பிடிக்க முடியவில்லை.

கடந்த 2023 ஏப்ரலில் வழிப்பறி திருடனை பிடிக்க சென்ற போலீஸார் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டது. கடந்த டிசம்பரில் செயின்பறிப்பு திருடனை பிடிக்க சென்ற மும்பை போலீஸார் மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 2 போலீஸார் படுகாயம் அடைந்தனர்.

தற்போது சென்னை போலீஸார் நடத்திய என்கவுன்ட்டரில் ஆம்பிவளி பகுதியை சேர்ந்த ஜாபர் குலாம் உசேன் இரானி சுட்டுக் கொல்லப்பட்டு உள்ளார். இதனால் பதற்றமான சூழல் எழுந்திருக்கிறது. சட்டம், ஒழுங்கை நிலைநாட்ட ஆம்பிவளி பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டு உள்ளனர். இவ்வாறு மகாராஷ்டிர போலீஸார் தெரிவித்தனர்.

மகாராஷ்டிராவின் கல்யாண் பகுதி போலீஸ் டிசிபி அதுல் கூறும்போது, “என்கவுன்ட்டரில் கொல்லப்பட்ட ஜாபர் குலாம் உசேன் இரானி மீது 8 வழிப்பறி வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சிறையில் இருந்து விடுதலையான அவர், பல்வேறு மாநிலங்களில் வழிப்பறியில் ஈடுபட்டு உள்ளார். அவர் ஒரு கும்பலின் தலைவராக செயல்பட்டு இருக்கிறார்" என்று தெரிவித்தார்.

இரானி கொள்ளையர்கள் யார்? - மகாராஷ்டிர தலைநகர் மும்பையில் இருந்து 60 கி.மீ. தொலைவில் ஆம்பிவளி அமைந்துள்ளது. இங்கு சுமார் 15,000-க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இவர்களது மூதாதையர்கள் கடந்த 16-ம் நூற்றாண்டில் ஈரான், பாகிஸ்தானில் இருந்து இடம்பெயர்ந்து ஆம்பிவளியில் குடியேறினர்.

ஷியா முஸ்லிம் பிரிவை சேர்ந்த இவர்கள் ஆரம்பத்தில் மூக்கு கண்ணாடி விற்பனை உள்ளிட்ட வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தனர். ஆனால் தற்போதைய தலைமுறையினர் திருட்டு, வழிப்பறி, கொள்ளையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த 2,000-க்கும் மேற்பட்டோர் திருட்டை பிரதான தொழிலாக கொண்டுள்ளனர்.

ஈரானை பூர்விகமாகக் கொண்டவர்கள் என்பதால் அனைவரின் பெயர்களின் கடைசியில் இரானி என்ற அடைமொழி சேர்க்கப்படுகிறது. இதனால் ஆம்பிவளி பகுதி திருடர்கள், இரானி கொள்ளையர்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.

கடந்த 2017ம் ஆண்டு ஜனவரியில் ஆம்பிவளியை சேர்ந்த தேஜி ஷா இரானி என்பவருக்கு திருமணம் நடைபெற்றது. இவரது திருமணத்தில் டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, பெங்களூரு உட்பட நாடு முழுவதும் இருந்து 1,000 திருடர்கள் பங்கேற்றனர். வடமாநிலங்கள், தென்மாநிலங்கள் முழுவதும் ஆம்பிவளி திருடர்களுக்கு தொடர்பு இருக்கிறது.

பல்வேறு மாநிலங்களின் தலைநகர்களுக்கு விமானங்களில் செல்லும் இரானி திருடர்கள் வழிப்பறி, கொள்ளையில் ஈடுபடுகின்றனர். அவர்கள் கொள்ளையடிக்கும் நகை, ரொக்க பணம் ஆகியவை ரயில்கள் மூலம் மகாராஷ்டிராவுக்கு கொண்டு செல்லப்படுகிறது. வழிப்பறி, கொள்ளையில் ஈடுபடும் இரானி திருடர்கள் விமானங்கள் மூலம் மகாராஷ்டிராவுக்கு பாதுகாப்பாக திரும்புகின்றனர்.

ஆம்பிவளியை சேர்ந்த ஜாபர் குலாம் உசேன் இரானியை சென்னை போலீஸார் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொன்றிருப்பதால் இரானி கொள்ளையர்களிடையே அச்சம் எழுந்திருக்கிறது. தமிழக போலீஸாரை பின்பற்றி மற்ற மாநிலங்களின் போலீஸாரும் என்கவுன்ட்டர் நடத்தக்கூடும் என்பதால் ஈரானி கொள்ளையர்கள் தலைமறைவாகி உள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

22 hours ago

மேலும்