தமிழக ரயில்வே திட்டங்கள் தாமதமாவது ஏன்? - பட்டியலிட்டு ரயில்வே அமைச்சர் விளக்கம்

By ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: “தமிழகத்தில் ரயில்வே திட்டங்கள் தாமதமாவது ஏன்?” என்று திமுக எம்பி கனிமொழி எழுப்பிய கேள்விக்கு மக்களவையில் ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விரிவான பதிலளித்தார்.

இது தொடர்பாக ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் எழுத்துபூர்வமாக அளித்த பதிலின் விவரம்: “தமிழகத்தில் முக்கியமான ரயில்வே உட்கட்டமைப்பு திட்டங்களை செயல்படுத்துவதில் தாமதம் ஏற்படுகிறது. இதற்கு முழுமையாகவோ அல்லது பகுதி அளவோ காரணமாக இருப்பது ரயில்வே திட்டங்களுக்கான நிலம் கையகப்படுத்துதல் தான். தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் ரயில்வே திட்டங்களுக்காக தேவைப்படும் நிலத்தின் அளவு 4 ஆயிரத்து 288 ஹெக்டேர். இவற்றில் 991 ஹெக்டேர் நிலம்தான் கையகப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது மொத்த தேவையில் 23 சதவீத நிலம்தான் கையகப்படுத்தப்பட்டுள்ளது. மீதி 77 சதவீதம் அதாவது 3,297 ஹெக்டேர் நிலம் இன்னும் கையகப்படுத்த வேண்டியிருக்கிறது.

ரயில்வே திட்டங்களுக்கு நிலம் கையகப்படுத்துதலை விரைவுபடுத்த மாநில அரசின் உதவி பெரிதும் தேவைப்படுகிறது. திண்டிவனம் - திருவண்ணாமலை புதிய வழித்தடம் 71 கிலோ மீட்டர் கொண்டது. இதற்காக 273 ஹெக்டேர் நிலம் தேவைப்படும் நிலையில், இதுவரை 33 ஹெக்டேர் நிலம் மட்டுமே கையகப்படுத்தப்பட்டுள்ளது. 88 கிலோ மீட்டர் நீளம் கொண்ட அத்திப்பட்டு - புத்தூர் புதிய ரயில் தடத்துக்கு 189 ஹெக்டேர் நிலம் தேவை. இத்திட்டத்துக்காக இன்னும் எந்த நிலமும் கையகப்படுத்தப்படவில்லை.

36 கிலோ மீட்டர் நீளம் கொண்ட மொரப்பூர் - தர்மபுரி புதிய ரயில் தடத்துக்கு 93 ஹெக்டேர் நிலம் தேவைப்படுகிறது. மன்னார்குடி - பட்டுக்கோட்டை புதிய ரயில் பாதைத் திட்டத்தை 41 கிலோ மீட்டரில் செயல்படுத்த 152 ஹெக்டேர் நிலம் தேவைப்படுகிறது. தஞ்சாவூர்-பட்டுக்கோட்டை புதிய ரயில் பாதை 52 கிலோ மீட்டரில் செயல்படுத்திட 196 ஹெக்டேர் நிலம் தேவைப்படுகிறது.

மேற்குறிப்பிட்ட புதிய ரயில் திட்டங்களுக்கு தேவையான நிலம் ஒரு ஹெக்டேர் கூட இன்னும் கையகப்படுத்தப்படவில்லை. மத்திய அரசு திட்டங்களை நிறைவேற்ற தயாராக உள்ளது. இருப்பினும் வெற்றி என்பது தமிழக அரசின் ஆதரவைப் பொறுத்தது. ரயில்வேயின் திட்டங்கள் மாநில எல்லைகளுக்கு அப்பால் பரவக்கூடும் என்பதால் இத்திட்டங்களின் ஆய்வு, அனுமதி, செயல்படுத்துதல் ஆகியவை மண்டல வாரியாகவே நடைபெறுகின்றன. மாநில வாரியாக இல்லை.

காரணம், ரயில்வே திட்டங்கள் சில முக்கிய காரணிகளின் அடிப்படையில் அனுமதி கொடுக்கப்படுகின்றன. அதாவது சம்பந்தப்பட்ட வழித் தடத்தால் வருவாய் கிடைக்கும். எதிர்கால போக்குவரத்து, கடைசி மைல் இணைப்பு, மாற்று வழித்தடங்களை மேம்படுத்துதல், அதிக தேவை கொண்ட வழித்தடங்கள், நிறைவுற்ற பாதைகளை மேம்படுத்துதல் போன்றவற்றின் அடிப்படையில் தான் ரயில்வே திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகின்றன.

இந்தப் பட்டியலில் மாநில அரசுகள், மத்திய அமைச்சகங்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிற பொது பிரதிநிதிகள், ரயில்வேயின் சொந்த செயல்பாட்டுத் தேவை, சமூக பொருளாதார பரிசீலனைகள் ஆகியவையும் அடங்கி உள்ளன. நடந்து கொண்டிருக்கும் திட்டங்களின் வேகம் மற்றும் கிடைக்கும் திட்ட நிதியின் தன்மையைப் பொறுத்தும் ரயில்வே திட்டங்கள் அனுமதிக்கப்படுகின்றன.

ஏப்ரல் 01, 2024 நிலவரப்படி, தமிழகத்தில் மொத்தம் 2,587 கி.மீ நீளமுள்ள 22 திட்டங்கள் உள்ளன. அதாவது 10 புதிய பாதைகள், 3 கேஜ் உயர்த்தும் திட்டங்கள், 9 இரட்டைப் பாதைத் திட்டங்கள் ஆகியன ரூ.33,467 கோடி ரூபாய் செலவில் உள்ளன. தமிழகத்தில் முழுமையாகவோ, பகுதியாகவோ திட்டமிடல் மற்றும் செயல்படுத்தலின் பல்வேறு கட்டங்களில் உள்ளன.

அவற்றில் 665 கி.மீ நீளம் தொடங்கப்பட்டு, மார்ச் 2024 வரை ரூ.7,154 கோடி செலவிடப்பட்டுள்ளது. அதாவது 872 கிலோ மீட்டர் நீளமுள்ள 10 புதிய ரயில் திட்டங்களில் இதுவரை 24 கிலோ மீட்டரில் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதற்காக ரூ.1,223 கோடி செலவிடப்பட்டுள்ளது. கேஜ் மாற்றம் அல்லது கேஜ் தரம் உயர்த்தும் 3 திட்டங்கள் 748 கிலோ மீட்டர் நீளத்துக்கு திட்டமிடப்பட்டு 604 கிலோ மீட்டரில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

967 கி.மீ தூரத்துக்கு 9 திட்டங்கள்: இரட்டைப் பாதை மற்றும் அதை விட அதிக பாதைகளாக்கும் 9 திட்டங்கள் 967 கிலோ மீட்டர் நீளத்துக்கு திட்டமிடப்பட்டுள்ளன. இவற்றில் 37 கிலோ மீட்டர் நீளத்துக்கு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக ரூ.3,267 கோடி செலவிடப்பட்டுள்ளது. அதேபோல் மணியாச்சி வழியிலான மதுரை - தூத்துக்குடி இரட்டைப் பாதைத் திட்டம் ஜூலை 2025 க்குள் முடிக்கப்பட்டுவிடும். இதற்காக ரூ.2,664 கோடி செலவிடப்பட்டுள்ளது.

அகலப்பாதைகளில் 96 சதவீதம் மின்மயம்: இன்றுவரை, தமிழகத்தில் அமைந்துள்ள அகலப் பாதைகளில் சுமார் 96 சதவீதம் மின் மயமாக்கப்பட்டுள்ளது. மீதியுள்ள இருப்புப் பாதைகளில் மின்மயமாக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சட்டபூர்வ அனுமதி: எந்தவொரு ரயில்வே திட்டத்தையும் நிறைவேற்றுவதற்கு மாநில அரசின் விரைவான நிலம் கையகப்படுத்தல் முக்கியம். வனத்துறை அனுமதி, மாநில அரசின் செலவுப் பங்கினை வைப்புத்தொகையாக வைத்தல், திட்டங்களின் முன்னுரிமை, தவிர திட்டங்களுக்கு பல்வேறு சட்டப்பூர்வ அனுமதிகளும் தேவைப்படுகின்றன.

பல காரணிகள்: இவை மட்டுமின்றி, சம்பந்தப்பட்ட பகுதியின் புவியியல் மற்றும் நிலப்பரப்பு தன்மைகள், சட்டம் - ஒழுங்கு நிலைமை மற்றும் காலநிலை காரணமாக குறிப்பிட்ட திட்டப் பகுதியில் திட்டமிடப்பட்ட காலத்துக்குள் வேலை நடக்கும் மாதங்களின் எண்ணிக்கை மாறுபடும்.

ஏழரை மடங்கு நிதி: தமிழகத்தில் ரயில்வே உட்கட்டமைப்புத் திட்டங்கள் மற்றும் பாதுகாப்பு பணிகளுக்காக 2009 - 2014 வரையிலான ஐந்து ஆண்டுகளில் ரூ.879 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால், 2025 - 26 ஆண்டில் மட்டும் சுமார் ஏழரை மடங்கு அதிகமாக ரூ.6,626 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

8 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்