இந்தியாவில் ஆங்கில ஆட்சிக் காலத்தில் முறையான வனத்துறை கட்டமைப்பு ஏற்படுவதற்கு முன்னால், 1806 ஆம் ஆண்டில் மலபார் பகுதியில் தேக்கு மரங்கள் வெட்டுவதை முறைபடுத்த முதன் முறையாக வனப்பாதுகாவலர் பதவி உருவாக்கப்பட்டது. கேப்டன் வாட்சன் என்கிற ஆங்கிலேயே போலீஸ் அதிகாரி இப்பதவியில் பணியமர்த்தப்பட்டார். 1823 இல் ஆண்டு வரை இப்பதவி நீடித்தது.
இந்தியாவிலேயே முதன் முறையாக முழு நேர வனப்பாதுகாவலர் பொறுப்பில் சென்னை மருத்துவக் கல்லூரியில் தாவரவியல் மற்றும் மருந்தியல் பேராசிரியராகப் பணியாற்றிய டாக்டர்.எச்.எப்.சி.கிளக்ஹார்ன் 16.12.1856 இல் நியமிக்கப்பட்டார். இவர் எழுதிய “தென்னிந்திய வனங்களும் தாவரவியல் பூங்காக்களும்“ (1861) என்கிற புத்தகம் இந்திய வனத்துறை வரலாற்றின் முதல் ஆவணமாகும். இவரைத் தொடர்ந்து சென்னை மாகாண வனப்பாதுகாவலராக ராணுவ அலுவலரான ரிச்சர்ட் ஹென்றி பெட்டோம் நியமிக்கப்பட்டார். இவர் தாவரவியலிலும், உயிரியலிலும் பல்வேறு ஆய்வுகள் மேற்கொண்டு எழுதிய “மரவகை தாவரங்கள்”, ”இந்திய பெரணிகள்” புத்தகங்கள் மிக முக்கியமானவை.
1856 இல் பர்மா பகுதியில் உள்ள தேக்கு வனங்களை முறையாக பேணுவதற்காக, தாவரவியலில் டாக்டர் பட்டமும், வனவியலில் பயிற்சியும் பெற்ற டாக்டர். டயட்ரிச் பிராண்டிஸ் என்கிற ஜெர்மானிய அறிஞர் வனக்கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டார். 1862 இல் பஞ்சாப் மாகாணத்தில் வனங்கள் சீரமைக்கும் பணியிலும் டாக்டர். கிளக்ஹார்ன் ஈடுபட்டார். 1865 இல் டாக்டர். பிராண்டிஸ் மற்றும் டாக்டர். கிளக்ஹார்ன் ஆகிய இருவரையும் பிரிட்டீஸ் இந்திய அரசு “இந்திய வனவியலின் தந்தை” என்று பாராட்டு சான்றிதழ் வழங்கி சிறப்பித்தது.
இம்பீரியல் வனப்பணி (1866-1919)
இந்திய பணியானது இம்பீரியல் வனப்பணி என அப்போது அழைக்கப்பட்டது. இம்பீரியல் வனப்பணி அலுவலர்களுக்கான பயிற்சி ஆரம்ப காலத்தில் பிரான்சு - ஜெர்மனியில் வழங்கப்பட்டது. ஏனெனில், இந்த இரு நாடுகளில்தான் புகழ்பெற்ற வன அறிவியல் நிறுவனங்கள் மற்றும் நடைமுறை பயிற்சிக்காக நன்கு நிர்வகிக்கப்பட்ட வனங்கள் இருந்தன. டாக்டர்.பிராண்டிஸ் 1865ம் ஆண்டு இந்திய வனச்சட்டம் உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்தார். இவர் பின்னாளில் எழுதிய ”இந்திய மரங்கள்” (1907) இந்திய வனத்துறை பதிப்புகளில் மிக முக்கியமானதாகும்.
ஜெர்மனியில் பயிற்சி பெற்று, சென்னை மாகாணத்தில் பணியாற்றிய இ.பி.போபர்ட், எச்.ஏ.காஸ் ஆகியோர் குறிப்பிடத்தக்க வனப்பாதுகாவலர்கள். எச்.ஏ.காஸ் முதன் முறையாக சென்னை மாகாணத்தில் “வன அருங்காட்சியம் (கோவை)” ஏற்படுத்துவதற்கு முக்கிய பங்காற்றினர். இது தற்போது கோவை வனக்கல்லூரி வளாகத்தில் அவர் பெயரில் செயல்பட்டு வருகிறது.
இம்பீரியல் வனப்பணி பயிற்சியானது 1905 இல் முதல் பிரிட்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு, கேம்பிரிட்ஜ் மற்றும் எடின்பரோ பல்கலைக்கழகங்களுக்கு மாற்றப்பட்டு 1919 இல் முடிய நடைபெற்றது. கூப்பர்ஸ் ஹில் பயிற்சி மையத்திலிருந்து தொடர்ச்சியாக ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திற்கு டாக்டர்.வில்லியம் ஸ்லிட்ச் பேராசிரியராக நியமிக்கப்பட்டு 1919 முடிய பணியாற்றி ஓய்வு பெற்றார். தன்னுடைய வாழ்நாளில் 55 ஆண்டுகள் வனப்பாதுகாவலர், இன்ஸ்பெக்டர் ஜெனரல், பேராசிரியர் என பணியாற்றி இந்திய வனப்பணி அலுவலர் பயிற்சிக்கு வலுவான அடித்தளம் அமைத்தவர்.
இந்திய வனப்பணி (1920-1932)
இந்திய அரசு சட்டம் (1919) சிவில் பணிகளில் இந்தியர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்க வழிவகை செய்தது. இதன் விளைவாக, இம்பீரியல் வனப்பணி, இந்திய வனப்பணி என பெயர் மாற்றம் பெற்றது. அதன்படி, நேரடித் தேர்வின் மூலமும், பதவி உயர்வின் மூலமும் இந்திய வனப்பணிக்கு தேர்வு செய்யும் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. 1920ம் ஆண்டுக்கு முன்னால் இம்பீரியல் வனப்பணியாக இருந்தபோது இந்தியர்களில் மிகச் சிலரே அப்பணியில் சேர்ந்தனர். 1867லிருந்து 1919 வரை மொத்தம் ஆறு இந்தியர்களே இம்பீரியல் வனப்பணியில் இடம் பெற்றிருந்தனர். அவர்களில் முதலில் எப்.ஆர்.தேசாய் (மும்பை), டாக்டர்.என்.குஸ்டாப் (பஞ்சாப்) ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். இதில் சென்னை மாகாணத்துக்கு ஒதுக்கப்பட்ட இந்தியர்கள் எப்.ஆர்.மதன் மற்றும் டி.எஸ்.சாத்தே ஆவர்.
1920 இல் இஸ்லிங்டன் கமிசன் பரிந்துரையின்படி ஒவ்வொரு மாகாணத்திலும் இந்திய வனப்பணி நேரடி நியமனம் தொடங்கப்பட்டது. பணி நியமனத்தில் 40 % இந்தியர்களுக்கு வழங்கப்பட்டது. பதவி உயர்வின் மூலம் தகுதியுள்ள கூடுதல் துணை வனப்பாதுகாவலர்களுக்கு 12.5 சதவீதம் வழங்கப்பட்டது. இதன்படி, சென்னை மாகாணத்தில் ஏழு தகுதி வாய்ந்த கூடுதல் துணை வனப்பாதுகாவலர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களில் முக்கியமானவர்கள் இராவ்பகதூர், கே.ஆர்.வெங்கடரமண அய்யர் ஆவார். இவர் எழுதிய ”வனச்சரக நடைமுறை”, ”சந்தனமர வெட்டு விதிகள்” ஆகிய புத்தகங்கள் இன்றளவும் உபயோகத்தில் உள்ளன. இவர் இந்திய வனப்பணியில் வனப்பாதுகாவலராக ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய வனப்பணி என பெயர் மாற்றம் பெற்ற பின்பும் பயிற்சியானது இந்தியாவில் நடைபெறவில்லை. தொடர்ந்து பிரிட்டனில் உள்ள மூன்று பல்கலைக்கழகங்களிலேயே நடைபெற்றது. இந்திய வனப்பணி பயிற்சி முதன்முறையாக இந்தியாவுக்கு 1926 இல் மாற்றப்பட்டு, டேராடூனில் இருக்கும் வன ஆராய்ச்சி நிறுவனத்தில் 1926 - 1932 வரை நடைபெற்றது. இங்கு பயிற்சி பெற்ற அனைவரும் இந்தியர்களே.
இந்திய அரசு சட்டம் (1935) வனங்களை மாநிலங்கள் பட்டியலில் சேர்த்தது. இந்திய வனப்பணிக்கு பதிலாக உயர் மாநில வனப்பணி தோற்றுவிக்கப்பட்டு 1938ம் ஆண்டிலிருந்து 1966ம் ஆண்டு வரை உயர் மாநில வனப்பணி (Superior Forest Service ) டேராடூனில் தோற்றுவிக்கப்பட்ட இந்திய வனக் கல்லூரியில் அலுவலர்கள் பயிற்சி பெற்றனர்.
நவீன இந்திய வனப்பணி (1966 முதல் இன்று வரை)
சுதந்திர இந்தியாவில் இந்திய வனப்பணியை மீண்டும் உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்தவர் ஹரிசிங். இவர் எடின்பரோ பல்கலைக்கழகத்தில் பி.எஸ்.சி. (வனவியல்) பயின்று, 1936 இல் பம்பாய் மாகாண வனத்துறையில் நேரடியாக துணை வனப்பாதுகாவலராக பணியைத் தொடங்கினார். 1960 இல் குஜராத் மாநில தலைமை வனப்பாதுகாவலராக பணிபுரிந்து பின்னர் 1964 ஜனவரியில் மாநில வனப்பணி உயர் அலுவலராக இன்ஸ்பெக்டர் ஜெனரல் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டு 1969, ஜனவரி வரை பணியாற்றினார். இவரது பணிக்காலத்தில், சீரிய முயற்சியில் 01.07.1966 முதல் இந்திய வனப்பணி மீட்டுருவாக்கம் பெற்றது. 01.10.1966 இல் இந்தியாவின் அனைத்து மாநிலத்திலும் பணியாற்றிய மாநில வனப்பணி உயர் அலுவலர்கள் தகுதியடிப்படையில் நவீன இந்திய வனப்பணியின் தொடக்க உறுப்பினர்களாக (Initial Recruits) நியமிக்கப்பட்டனர்.
1967ம் ஆண்டிலிருந்து வருடந்தோறும் இந்திய வனப்பணிக்கு மத்திய பணியாளர் தேர்வாணையம் மூலம் நேரடி நியமன நடவடிக்கை தொடங்கப்பட்டது. நேரடி நியமனம் மற்றும் பதவி உயர்வு 2:1 விகிதாச்சாரத்தில் நடைபெறுகிறது. நவீன இந்திய வனப்பணி அலுவலர் பயிற்சி 1968 இல் தொடங்கி இன்று வரை இந்திய வனக்கல்லூரியில் நடைபெறுகிறது. நவீன இந்திய வனப்பணியின் தொடக்க கால உறுப்பினர்களில் முதலிடம் பிடித்தவர் ஹரிசிங்.
இந்திய வனப்பணி கடந்த 160 வருடங்களாக இந்தியாவில் வனக்கல்வி, வன ஆராய்ச்சி, வன மேலாண்மையில் பணியாற்றி வருகிறது. 1970-களுக்குப் பிறகு மத்திய அரசின் ”புலிகள் திட்டம்”, ”யானைகள் திட்டம்” போன்ற பல்வேறு வன உயிரின திட்டங்களையும், வன உயிரினச் சட்டம் (1972), வனப்பாதுகாப்புச்சட்டம் (1980), சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் (1986), பல்லுயிர் பாதுகாப்புச் சட்டம் (2002), வன உரிமைச் சட்டம் (2006) ஆகியவற்றை திறம்பட செயல்படுத்தி வருகிறது. எதிர்காலத்தில் பசுமை பரப்பை கூட்டுவதிலும், காலநிலை மாறுபாட்டால் வரக் கூடிய சவால்களையும் இந்திய வனப்பணி எதிர் கொண்டு வெற்றிப்பாதையில் பயணிக்கும் என்பதில் ஐயமில்லை.
கட்டுரையாளர்கள்
வே. கணேசன் - தமிழ்நாடு வன உயர் பயிற்சியக இயக்குநர் (ஓய்வு).
ஆ. பெரியசாமி தலைமை வனப்பாதுகாவலர்,
விழுப்புரம் வன மண்டலம், விழுப்புரம்.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago