தொகுதி மறுவரையறை, நீதிபதி விவகாரத்தால் அமளி: இரு அவைகளும் ஒத்திவைப்பு; நாடளுமன்றத்தில் நடந்தது என்ன?

By செய்திப்பிரிவு

நாடாளுமன்ற கர்நாடக அரசு ஒப்பந்தங்களில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதாக குற்றம்சாட்டியதால் பாஜக - காங்கிரஸ் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

புதுடெல்லி: தொகுதி மறுவரையறை, நீதிபதி வீட்டில் பணம் சிக்கியது ஆகிய விவகாரங்களால் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. கர்நாடகாவில் முஸ்லிம்கள் இடஒதுக்கீடு தொடர்பாக பாஜக - காங்கிரஸ் எம்.பி.க்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால், நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு நடைபெற்று வருகிறது. இதில், தொகுதி மறுவரையறை விவகாரம் தொடர்பாக மக்களவையில் விவாதிக்க வேண்டும் என திமுக எம்.பி. கனிமொழியும், மாநிலங்களவையில் விவாதிக்க கோரி திமுக எம்.பி. வில்சனும் நோட்டீஸ் அளித்தனர். அனைத்து நிகழ்வுகளையும் ஒத்திவைத்துவிட்டு, தொகுதி மறுவரையறை குறித்து விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தி மாநிலங்களவையில் திமுக எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், கர்நாடகாவில் மத அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கப்படுவதாக கண்டனம் தெரிவித்து பாஜகவினர் குரல் எழுப்பினர்.

கர்நாடகாவில் அரசு ஒப்பந்த பணிகளில் முஸ்லிம்களுக்கு 4% இடஒதுக்கீடு வழங்குவதற்கு ஏற்ப அரசியலமைப்பில் திருத்தம் செய்யப்படும் என்று துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் பேசியதாக கூறி மாநிலங்களவையில் காங்கிரஸ் கட்சி மீது பாஜகவினர் குற்றம் சாட்டினர். அப்போது நடைபெற்ற வாதம்:

நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு: காங்கிரஸார் அம்பேத்கர் புகைப்படத்தை கையில் ஏந்திக்கொண்டு, மறுபுறம் அரசியலமைப்பு சட்டத்தை மாற்றப்போவதாக பேசுகின்றனர். முஸ்லிம் இடஒதுக்கீடு தொடர்பான பிரச்சினையில் அரசியலமைப்பு சட்டத்தை எவ்வாறு திருத்த காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது? மிக தீவிரமான இந்த விஷயத்தில் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டை எதிர்க்கட்சி தலைவர் தெளிவுபடுத்த வேண்டும்.

மத்திய அமைச்சர் நட்டா: மத அடிப்படையில் ஒருபோதும் இடஒதுக்கீடு வழங்கப்பட கூடாது என்பதை பாபா சாகேப் அம்பேத்கர் மிக தெளிவாக குறிப்பிட்டுள்ளார். இது அடிப்படை கொள்கை. ஆனால், அதுவே தெரியாமல் கர்நாடக அரசின் பொது ஒப்பந்தங்களில் சிறுபான்மையினருக்கு 4 சதவீத இடஒதுக்கீட்டை காங்கிரஸ் அரசுஅமல்படுத்தியுள்ளது. முஸ்லிம் இடஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டிய தேவை ஏற்படுமானால் அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்யலாம் என கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் பகிரங்கமாக அறிவித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே: பாஜகவின் குற்றச்சாட்டுகளை வன்மையாக மறுக்கிறேன். அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாப்பதில் காங்கிரஸ் உறுதியுடன் இருக்கிறது. அம்பேத்கர் உருவாக்கிய அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது. கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரையிலான எங்களது இந்திய ஒற்றுமை யாத்திரை அரசியலமைப்பை பாதுகாப்பதை முக்கிய நோக்கமாக கொண்டது. இவ்வாறு அவர்கள் பேசினர்.

இந்த விவகாரத்தில் பாஜக - காங்கிரஸ் உறுப்பினர்கள் இடையே வாக்குவாதம் அதிகரித்ததால், கடும் அமளி நிலவியது. இதையடுத்து, அவையை ஒத்திவைப்பதாக மாநிலங்களவை தலைவர் ஜகதீப் தன்கர் அறிவித்தார்.

இதற்கிடையே, டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் வீட்டில் பாதி எரிந்த நிலையில் பணம் கைப்பற்றப்பட்டது குறித்து மக்களவையில் விவாதிக்க கோரி எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. இதற்கு சபாநாயகர் ஓம்பிர்லா அனுமதி மறுத்த நிலையில், சமாஜ்வாதி கட்சியினர் பதாகைகளை ஏந்தியபடி சபாநாயகர் இருக்கை அருகே வந்து அமளியில் ஈடுபட்டனர். கூச்சல், குழப்பம் நிலவியதால், சபாநாயகர் அவையை ஒத்திவைத்தார்.

கர்நாடக துணை முதல்வர் விளக்கம்: இதற்கிடையே, இடஒதுக்கீடு விவகாரம் குறித்து கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் நேற்று கூறியபோது, ‘‘முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்கு ஏற்ப அரசியலமைப்பு சட்டத்தில் மாற்றம் செய்யப்படும் என நான் கூறவில்லை. திரித்து கூறும் பாஜகவினருக்கு எதிராக வழக்கு தொடர்வேன்’’ என்றார்.
பணம் சிக்கிய விவகாரத்தில், நீதிபதி யஷ்வந்த் வர்மாவிடம் இருந்து நீதித் துறை பணிகள் வாபஸ் பெறப்பட்டுள்ளதாக டெல்லி உயர் நீதிமன்றம் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

எம்.பி.க்கள் சம்பளம் ரூ.1.24 லட்சமாக உயர்வு: நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம், அலவன்ஸ், ஓய்வூதியம் ஆகியவற்றை 2023 ஏப்ரல் 1-ம் தேதி முதல் மத்திய அரசு முன்தேதியிட்டு உயர்த்தியுள்ளது. இதற்கான அறிவிக்கையை நாடாளுமன்ற விவகார அமைச்சகம் நேற்று வெளியிட்டது. இதன்படி மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்களின் சம்பளம் ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.1.24 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. நாடாளுமன்ற கூட்டத்தில் கலந்துகொள்ளும் நாட்களுக்கு வழங்கப்படும் அலவன்ஸ் ரூ.2,000-ல் இருந்து ரூ.2,500 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதுபோல, முன்னாள் எம்.பி.க்களின் ஓய்வூதியம் ரூ.25 ஆயிரத்தில் இருந்து ரூ.31 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், 5 ஆண்டுகளுக்கு மேல் ஒவ்வொரு ஆண்டு சேவைக்குமான கூடுதல் ஓய்வூதியம் ரூ.2,000-ல் இருந்து ரூ.2,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. எம்.பி.க்களின் சம்பளம், ஓய்வூதியம் ஆகியவை இதற்கு முன்பு கடந்த 2018 ஏப்ரலில் உயர்த்தப்பட்டது. அதன்படி எம்.பி.க்கள் தொகுதி அலவன்ஸ் ரூ.70 ஆயிரம், அலுவலக அலவன்ஸ் ரூ.60 ஆயிரம் பெற்று வந்தனர். அதுவும் தற்போது உயர்த்தப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

மேலும்