புதுடெல்லி: “மும்மொழிக் கொள்கை அதிக நெகிழ்வுத்தன்மை உடையதாக இருக்கிறது. அதாவது. எந்த மாநிலத்தின் மீதும் எந்த மொழியும் திணிக்கப்படாது,” என்று திமுக எம்.பி. கனிமொழி எழுப்பிய கேள்விக்கு மத்திய கல்வி இணை அமைச்சர் ஜெயந்த் சௌத்ரி பதிலளித்துள்ளார்.
திமுக துணைப் பொதுச் செயலாளரும், திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவருமான கனிமொழி எம்.பி., கல்வித் துறை தொடர்பான சில கேள்விகளை எழுத்துபூர்வமாக கேட்டிருந்தார். அதில், “நாடு முழுவதும் மும்மொழிக் கொள்கையின் கீழ் மாநில வாரியாக கற்பிக்கப்படும் மொழிகளின் விவரங்கள் என்னென்ன? இந்த மொழிகளைப் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை விவரங்கள் என்ன? இந்தி பேசும் மாநிலங்களில் இந்தி அல்லாத இந்திய மொழிகளைப் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை மாநில வாரியாக என்ன?
தமிழகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தற்போது பணிபுரியும் தமிழ், இந்தி மற்றும் சமஸ்கிருத ஆசிரியர்களின் எண்ணிக்கை எவ்வளவு? மாணவர்களுக்கு தாய்மொழிகளில் கற்பிக்க கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஏதேனும் திட்டங்களை வகுத்துள்ளதா? அவ்வாறு இருப்பின், அதன் விவரங்கள் என்ன? இல்லையென்றால், அதற்கான காரணங்கள் என்ன?” என்பது உள்ளிட்ட கேள்விகளைக் கேட்டிருந்தார்.
இதற்கு மத்திய கல்வித் துறையின் இணையமைச்சர் ஜெயந்த் சௌத்ரி அளித்த பதிலின் விவரம்: “தேசிய கல்விக் கொள்கையின் பத்தி எண் 4.13-ல், அரசியலமைப்பு விதிகளைக் கருத்தில் கொண்டு மக்கள், மாநிலங்கள் மற்றும் மத்திய அரசின் விருப்பங்கள் மற்றும் பன்மொழித் தன்மையை மேம்படுத்துவதன் அவசியம், தேசிய ஒற்றுமையை மேம்படுத்துவதை மனதில் கொண்டு மும்மொழிக் கொள்கை தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்று கூறுகிறது.
எனினும், மும்மொழிக் கொள்கை அதிக நெகிழ்வுத்தன்மை உடையதாக இருக்கிறது. அதாவது, எந்த மாநிலத்தின் மீதும் எந்த மொழியும் திணிக்கப்படாது. மூன்று மொழிகளில் குறைந்தது இரண்டு, இந்தியாவை பூர்விகமாகக் கொண்டதாக இருக்கும் வரை குழந்தைகள் கற்றுக்கொள்ளும் மூன்று மொழிகளும் மாநிலங்களுடைய தேர்வாகவே இருக்கும். இன்னும் சொல்லப் போனால் நிச்சயமாக மாணவர்களின் விருப்பங்களாக இருக்கும்.
குறிப்பாக, தாங்கள் படிக்கும் மூன்று மொழிகளில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டவற்றை மாற்ற விரும்பும் மாணவர்கள், மேல்நிலைப் பள்ளியின் இறுதிக்குள் (இலக்கிய மட்டத்தில் இந்தியாவின் ஒரு மொழி உட்பட) அடிப்படைத் தேர்ச்சியை நிரூபிக்க முடிந்தால், 6 அல்லது 7-ம் வகுப்பில் அவ்வாறு செய்யலாம். புதிய கல்விக் கொள்கை 2020-ன் தொடர்ச்சியாக, பள்ளிக் கல்விக்கான தேசிய பாடத்திட்டக் கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவில் மொழிக் கல்வி குறித்த முன்னேற்றத்துக்கான வழிகாட்டுதலை வழங்குகிறது.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஒரு மொழி பயிற்றுவிக்கும் 23,280 பள்ளிகளும், இரு மொழி பயிற்றுவிக்கும் 20,693 பள்ளிகளும், மும்மொழி பயிற்றுவிக்கும் 21,114 பள்ளிகளும் இயங்கி வருகின்றன. மத்தியப் பிரதேச மாநிலத்தில் ஒரு மொழி பயிற்றுவிக்கும் 11,428 பள்ளிகளும், இரு மொழி பயிற்றுவிக்கும் 43,596 பள்ளிகளும், மும்மொழி பயிற்றுவிக்கும் 68,388 பள்ளிகளும் இயங்கி வருகின்றன.
தமிழகத்தில் ஒரு மொழி பயிற்றுவிக்கும் 21,725 பள்ளிகளும், இருமொழி பயிற்றுவிக்கும் 35,092 பள்ளிகளும், மும்மொழி பயிற்றுவிக்கும் 1,905 பள்ளிகளும் இயங்கி வருகின்றன. கல்வி உரிமைச் சட்டத்தில் (RTE) வரையறுக்கப்பட்டுள்ளபடி கேந்திரிய வித்யாலயாக்களுக்கு ‘குறிப்பிட்ட வகை’ என்ற அந்தஸ்து அளிக்கப்பட்டுள்ளன. இப்பள்ளிகள் சீரான கல்வித் திட்டத்தைக் கொண்டிருக்க வேண்டும் என்ற கட்டளையுடன் நிறுவப்பட்டுள்ளன.
எனவே, அனுமதிக்கப்பட்ட மொழி ஆசிரியர் பதவிகள் இந்தி, ஆங்கிலம் மற்றும் சமஸ்கிருதம் மட்டுமே. இருப்பினும், கேந்திரிய வித்யாலயாவுக்கான கல்விச் சட்டத்தின் பிரிவு 112-ன் படி, ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை விருப்பமுள்ள மாணவர்களுக்கு பிற மொழிகளைக் கற்பிப்பதற்கான ஒரு வழிமுறை உள்ளது. இந்த விதியின்படி, 15 அல்லது அதற்கு மேற்பட்ட மாணவர்கள் தேர்வு செய்தால், ஒரு ஆசிரியரை பகுதி நேர ஒப்பந்த அடிப்படையில் ஈடுபடுத்தலாம்.
தமிழகத்தில் கேந்திரிய வித்யாலயாக்களில் தமிழ் கற்பிப்பதற்காக பகுதி நேர ஒப்பந்த அடிப்படையில் 24 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். கூடுதலாக, 21 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் மொழியை கற்க ஆர்வமுள்ள மாணவர்களுக்காக தமிழகத்தில் உள்ள ஒரு தன்னாட்சி அமைப்பான தமிழ் மெய்நிகர் அகாடமி (TVA) மூலம் மேற்கொள்ளப்படுகிறது. தற்போது தமிழகத்தில் 86 இந்தி மற்றும் 65 சமஸ்கிருத ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்” என்று அமைச்சர் பதிலளித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago