புதுடெல்லி: வக்பு சட்ட திருத்த மசோதா மக்களவையில் அடுத்த வாரம் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருவதால், இந்த மசோதா தாக்கலாகும் போது அவையில் மீண்டும் கடும் அமளி ஏற்படும் எனத் தெரிகிறது.
நாடு முழுவதும் உள்ள வக்பு வாரிய சொத்துகளை பதிவு செய்து வெளிப்படைத்தன்மையுடன் நிர்வகிக்க வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதா கொண்டு வரப்பட்டு, மக்களவையில் கடந்தாண்டு ஆகஸ்ட் 8-ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. இது சிறுபான்மையினருக்கு எதிராக உள்ளது என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியதால், பாஜக எம்.பி. ஜெகதாம்பிகா பால் தலைமையிலான கூட்டுக் குழு ஆய்வுக்கு இந்த சட்ட திருத்த மசோதா அனுப்பப்பட்டது.
இதில் அனைத்து தரப்பினரின் கருத்துகளும் ஆலோசிக்கப்பட்டன. தே.ஜ கூட்டணி கட்சி உறுப்பினர்கள் தெரிவித்த 14 திருத்தங்களுக்கு கூட்டுக்குழு ஒப்புதல் அளித்தது. அதன்பின் 655 பக்க அறிக்கை தயாரானது. இதற்கு எதிர்க்கட்சியைச் சேர்ந்த 11 உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பெரும்பான்மை ஓட்டு அடிப்படையில் அந்த அறிக்கையை கூட்டுக் குழு ஏற்றுக்கொண்டது.
கூட்டுக் குழுவின் அறிக்கையை அதன் உறுப்பினரான பாஜக எம்.பி. மேதா விஷ்ராம் குல்கர்னி மாநிலங்களவையில் கடந்த மாதம் 13-ம் தேதி தாக்கல் செய்தார். அப்போது இதற்கு எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ‘‘கூட்டுக்குழு அறிக்கையில், பல உறுப்பினர்கள் தெரிவித்த அதிருப்தி கருத்துகள் நீக்கப்பட்டுள்ளன. பெரும்பான்மை உறுப்பினர்கள் தெரிவித்த கருத்துகளை மட்டும் அறிக்கையில் குறிப்பிடுவது சரியல்ல. இது கண்டனத்துக்குரியது, ஜனநாயகத்துக்கு விரோதமானது. இது போலி அறிக்கை. இந்த அறிக்கையை திரும்ப பெற்று, மீண்டும் கூட்டுக் குழுவுக்கு அனுப்ப வேண்டும். இந்த சட்டத் திருத்த மசோதாவில் ஒரு பிரிவினருக்கு அநீதி இழைக்கப்படுகிறது’’ என்றார்.
இதேபோல் தங்களது அதிருப்தி கருத்துக்கள் நீக்கப்பட்டதாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலர் குற்றம் சாட்டினர். இந்த குற்றச்சாட்டுகளை நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு திட்டவட்டமாக மறுத்தார். அவர் கூறியபோது, ‘‘கூட்டுக் குழு அறிக்கையில் இருந்து எந்த கருத்தும் நீக்கப்படவில்லை. அனைத்து குறிப்புகளும் கூட்டுக் குழு அறிக்கையின் இணைப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. எதுவும் நீக்கப்படவில்லை. நாடாளுமன்ற கூட்டுக் குழு மீதே அவதூறு கூறும் வகையில் உறுப்பினர்கள் கூறிய கருத்துகளை நீக்கும் அதிகாரம் கூட்டுக் குழு தலைவருக்கு உள்ளது. ’’ என்றார்.
இதேபோல் கூட்டுக்குழுவின் அறிக்கை மக்களவையிலும் தாக்கல் செய்யப்பட்டது. வக்பு வாரியத்தில்,முஸ்லிம் அல்லாத நபர்களை 4 பேர் வரை சேர்க்க கூட்டுக்குழு அறிக்கையில் ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரச்சினைகளை விசாரிக்கும் அதிகாரத்தை மாவட்ட ஆட்சியர்களிடம் இருந்து மாநில அரசால் நியமிக்கப்படும் மூத்த அதிகாரிக்கு மாற்றவும் கூட்டுக்குழு பரிந்துரை செய்துள்ளது. மாநில வக்பு வாரியங்கள், முஸ்லிம் ஓபிசி பிரிவில் இருந்து ஒரு உறுப்பினரை சேர்க்க முடியும். இதன் மூலம் அனைத்து தரப்பு பிரதிநிகளும் வக்பு வாரியத்தில் இடம் பெறுவது உறுதி செய்யப்படுகிறது. இந்த மாற்றங்கள் மூலம் கடுமையான விதிமுறைகளுடன், வக்பு வாரிய சொத்துக்கள் பதிவு செய்யப்பட்டு கண்காணிக்கப்படும்.
இதையடுத்து கூட்டுக்குழுவில் பரிந்துரைக்கப்பட்ட மாற்றங்கள் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவில் சேர்க்கப்பட்டன. இதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதையடுத்து, அடுத்த வாரம் இந்த மசோதா மக்களவையில் மீண்டும் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும் எனத் தெரிகிறது. மக்களவையில் இந்த மசோதாவை நிறைவேற்ற 272 ஓட்டுக்கள் தேவை. மக்களவையில் மொத்தம் உள்ள 543 உறுப்பினர்களில் தே.ஜ கூட்டணிக்கு 293 உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது. அதனால் மக்களவையில் இந்த மசோதா நிறைவேற்றப்படும். இதேபோல் மாநிலங்களவையிலும் வக்பு சட்ட திருத்த மசோதாவை நிறைவேற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படும். அப்போது இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் எதிர்க்கட்சியினர், ஆளும் கட்சியினரும் கடும் வாக்குவாதத்தில் ஈடபடலாம் எனத் தெரிகிறது.
முக்கிய செய்திகள்
இந்தியா
3 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago