அமராவதி(ஆந்திரப் பிரதேசம்): “நாட்டின் சமூக மற்றும் அரசியல் நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் திறன் கொண்ட பிரச்சினை என்பதால், இதன் தீவிரத்தை கருத்தில் கொண்டு வழிகாட்ட வேண்டும், உங்களின் ஒரு உத்தரவாதம் பல மாநிலங்களின் அச்சங்களைப் போக்க பெரிதும் உதவும்" என்று தொகுதி மறுவரையறை தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் (YSRCP) தலைவர் ஜகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
தொகுதி மறுவரையறை தொடர்பான கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டம் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சென்னையில் நடைபெற்று வரும் நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக ஆந்திர முன்னாள் முதல்வரும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஜகன் மோகன் ரெட்டி, பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அவர் தனது கடிதத்தில், "2021 ஆம் ஆண்டு நடைபெறவிருந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு செயல்முறை, கோவிட்-19 தொற்றுநோய் பரவல் காரணமாக தாமதமானது. மக்கள் தொகை கணக்கெடுப்பு செயல்முறை 2026 ஆம் ஆண்டுக்குள் நிறைவடையும் என்று பரவலாக அறியப்படுகிறது. மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைமுறைக்குப் பிறகு, அதன் அடிப்படையில் மாநிலங்களுக்கு மக்களவையில் இடங்களை ஒதுக்கும் தொகுதி மறுவரையறைப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை அரசியலமைப்பு கட்டமைப்பு கட்டாயமாக்குகிறது.
ஏற்கனவே நீட்டிக்கப்பட்ட தொகுதி மறுவரையறைக்கான காலக்கெடு 2026 ஆம் ஆண்டில் முடிவுக்கு வருகிறது. மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை மேற்கொள்ளப்படும்போது பல மாநிலங்களுக்கு, குறிப்பாக தென் மாநிலங்களுக்கு, தங்கள் பிரதிநிதித்துவம் குறைந்துவிடும் என்ற அச்சம் கடுமையான பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
1971 முதல் 2011 வரையிலான 40 ஆண்டு காலத்தில் நாட்டின் மக்கள்தொகையில் தென் மாநிலங்களின் பங்கு குறைந்துள்ளது. கடந்த 14 ஆண்டு காலத்தில் இந்தப் பங்கு மேலும் குறைந்துள்ளதாக நாங்கள் நம்புகிறோம். தேசிய முன்னுரிமையாக இருந்த மக்கள்தொகை கட்டுப்பாட்டுத் திட்டத்தை செயல்படுத்துவதில் தென் மாநிலங்கள் காட்டிய நேர்மையின் விளைவாக இந்தப் பங்கு குறைந்துள்ளது.
இன்றைய நிலையில் மாநிலங்களின் மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்பட்டால், தேசிய கொள்கை உருவாக்கம் மற்றும் நாடாளுமன்ற செயல்பாட்டில் தென் மாநிலங்களின் பங்கேற்பு கணிசமாகக் குறையும். தொகுதி மறுவரையறை பயிற்சி மேற்கொள்ளப்படும் என்ற உள்துறை அமைச்சரின் உறுதிமொழிக்கு நான் நன்றி கூறுகிறேன்.
அனைத்து மாநிலங்களுக்கும் விகிதாசாரப்படி இடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். எனவே, அதற்கேற்ப ஒவ்வொரு மாநிலத்திற்கும் விகிதாசார இடங்களின் அதிகரிப்பை நடைமுறைப்படுத்த அரசியலமைப்பை திருத்த வேண்டியது மிகவும் அவசியம். மொத்த இடங்களில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒதுக்கப்பட்ட இடங்களின் பங்கின் அடிப்படையில், தொகுதி மறுவரையறை மேற்கொள்ளப்பட்டால் எந்த மாநிலமும் மக்களவையில் அதன் பிரதிநிதித்துவத்தில் எந்த குறைப்பையும் சந்திக்க வேண்டியது இருக்காது.
இந்த விஷயத்தில் நான் பணிவுடன் உங்கள் ஆதரவை நாடுகிறேன். நாட்டின் சமூக மற்றும் அரசியல் நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் திறன் கொண்ட பிரச்சினையின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, இந்த முக்கியமான கட்டத்தில் உங்கள் தலைமையும் வழிகாட்டுதலும் மிக முக்கியமானவை. உங்கள் தரப்பில் இருந்து வரும் ஒரு உத்தரவாதம், பல மாநிலங்களின் அச்சங்களைப் போக்க பெரிதும் உதவும்" என்று தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago