பசு பாதுகாப்பு என்ற பெயரில் நடைபெறும் வன்முறையை மாநிலங்கள் தடுக்க வேண்டும்: அவமதிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றம் கருத்து

By செய்திப்பிரிவு

பசு பாதுகாப்பு என்ற பெயரில் கட்டவிழ்த்துவிடப்படும் வன்முறைகளை தடுக்க வேண்டியது மாநில அரசுகளின் பொறுப்பு என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

உத்தரபிரதேசம், ஹரியாணா உள்ளிட்ட வட மாநிலங்களில், பசு பாதுகாப்பு என்ற பெயரில் கும்பலாகச் சேர்ந்து தாக்குவது, கொலை செய்வது போன்ற வன்முறைச் சம்பவங்கள் அதிக அளவில் நடைபெற்றன. குறிப்பாக, பசு வதையை தடுப்பதாகக் கூறிக்கொண்டு, கால்நடை வளர்ப்போர் மற்றும் வியாபாரிகள் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த வன்முறைச் சம்பவங்களுக்கு சிலர் பலியாகினர்.

இத்தகைய வன்முறைச் சம்பவங்களைத் தடுக்கக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் விசாரணைக்கு வந்தது.

அப்போது, பசு பாதுகாப்பு என்ற பெயரில் நடைபெறும் வன்முறைகளைத் தடுக்க மாநில அரசுகள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், இதற்காக, மாவட்டந்தோறும் பிரத்யேக கண்காணிப்பு அதிகாரிகளை நியமிக்குமாறும் மாநில அரசுகளுக்கு உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில், மேற்குறிப்பிட்ட உத்தரவை செயல்படுத்த தவறியதாகக் கூறி, ஹரியாணா, உத்தரபிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநில அரசுகளுக்கு எதிராக துஷார் காந்தி (மகாத்மா காந்தியின் பேரன்) என்பவர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடுத்தார்.

இந்த வழக்கு, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம். கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:

பசு பாதுகாப்பு என்ற பெயரில் கட்டவிழ்த்துவிடப்படும் வன்முறைகளை ஒருபோதும் ஏற்க முடியாது. இது மிகக் கடுமையான குற்றம். சட்டத்தை யாரும் கையில் எடுக்க முடியாது. இத்தகைய வன்முறைச் சம்பவங்கள், சட்டம் - ஒழுங்கு சம்பந்தப்பட்ட பிரச்சினை ஆகும்.

எனவே, இதுபோன்ற செயல்களைத் தடுக்க வேண்டியது முழுக்க முழுக்க மாநில அரசுகளின் பொறுப்பு. இதில் எந்த மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது. இந்த விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது விரைவில் தீர்ப்பளிக்கப்படும். இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவை செயல்படுத்தாத ராஜஸ்தான், உத்தரபிரதேசம், ஹரியாணா ஆகிய மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். - பிடிஐ

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்