புதுடெல்லி: நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நிகழ்த்திய உரை குறித்த காங்கிரஸ் முக்கியத் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தியின் கருத்துகளுக்கு குடியரசுத் தலைவர் மாளிகை கடும் எதிர்வினையாற்றியுள்ளது. ‘உயர் பதவியின் கண்ணியத்தைக் காயப்படுத்தும் வகையில் தெரிவிக்கப்பட்ட கருத்துகளை எற்றுக்கொள்ள முடியாது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்து குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் நிகழ்த்திய உரை குறித்து ஊடகங்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் சில முக்கியமான தலைவர்கள், உயர் பதவியின் கண்ணியத்தைக் காயப்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்துள்ளனர். இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. அந்தத் தலைவர்கள், “உரையின் இறுதியில் குடியரசுத் தலைவர் மிகவும் சோர்வடைந்து விட்டார். அவரால் பேச முடியவில்லை” என்று தெரிவித்துள்ளனர்.
இந்தக் கருத்து உண்மைக்கு மாறானது. எந்த நிலையிலும் குடியரசுத் தலைவர் சோர்வடையவில்லை. விளிம்புநிலை மக்களுக்காக, பெண்களுக்காக, விவசாயிகளுக்காக பேசும்போது சோர்வு ஏற்படாது என்று குடியரசுத் தலைவர் நம்புவது போல, அவர் தனது உரையை வாசிக்கும்போது ஒருபோதும் சோர்வடையமாட்டார். இந்தி போன்ற இந்திய மொழிகளில் உள்ள சொல் வழக்குகளை இந்தத் தலைவர்கள் அறிந்திருக்கவில்லை என்பதால் தவறான எண்ணத்தை உருவாக்கியிருக்கலாம் என்று குடியரசுத் தலைவர் மாளிகை நம்புகிறது. எனினும், எந்த நிலையிலும் இதுபோன்ற கருத்துகள் மிகவும் மோசமான ரசனை, துரதிருஷ்டவசமானது, முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டியது" என்று தெரிவித்துள்ளது.
சோனியா சர்ச்சைக் கருத்து: நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவின் உரைக்கு பின்பு செய்தியாளர்களிடம் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி கூறும்போது, “குடியரசுத் தலைவர், உரையின் இறுதிப் பகுதியை வாசிக்கும்போது மிகவும் சோர்வடைந்து விட்டார். அவரால் பேச முடியவில்லை. பாவம்” என்று வருத்தப்பட்டிருந்தார். அப்போது காங்கிரஸ் எம்.பி.க்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி இருவரும் உடன் இருந்தனர்.
சோனியா காந்தியின் பதிலைத் தொடர்ந்து, அவரது கருத்துக்கு ஆதரவளிக்கும் விதமாக பேசிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, “சலிப்பானது. திரும்பத் திரும்ப சொன்னதையே சொல்கிறார்” என்று தெரிவித்திருந்தார். இந்தக் கருத்துகளை “இழிவானது” என்று பாஜக கடுமையாக சாடியுள்ளது.
இதுகுறித்து மத்திய அமைச்சரும், பாஜகவின் தேசிய தலைவருமான ஜெ.பி.நட்டா கூறுகையில், "குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு குறித்து சோனியா காந்தி ‘பாவம்’ என்று கூறியிருப்பதை நானும், ஒவ்வொரு பாஜக தொண்டனும் கண்டிக்கிறோம். வேண்டுமென்ற பயன்படுத்தப்பட்ட இதுபோன்ற வார்த்தைகள் காங்கிரஸ் கட்சியின் மேட்டுக்குடி, ஏழைகளுக்கு எதிரான, பழங்குடியினருக்கு எதிரான மனநிலையை காட்டுகிறது" என்று தெரிவித்துள்ளார்.
பாஜக எம்.பி. சம்பத் பத்ரா கூறுகையில், “சோனியா காந்தியின் கருத்து மிகவும் பொருத்தமற்றது. தனது உரையின்போது குடியரசுத் தலைவர் சோர்வடைந்து விட்டதாக தெரிவித்துள்ளார். அவரை பாவம் என்று சோனியா காந்தி அழைத்துள்ளார். நான் ஒன்றைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். குடியரசுத் தலைவர் பாவம் இல்லை. இந்தியா குடியரசு மற்றும் மிகப் பெரிய ஜனநாயக நாடு" என்று தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago