மகாராஷ்டிராவில் 100+ பாதிப்பு, ஒரு ‘சந்தேக’ மரணம் - ‘கில்லியன் பேர் சிண்ட்ரோம்’ நோய் என்றால் என்ன?

By செய்திப்பிரிவு

மும்பை: மகாராஷ்டிராவில் 'கில்லியன் பேர் சிண்ட்ரோம்' நோய் பாதிப்பு ஏற்பட்டு ஒருவர் உயிரிழிந்திருப்பதாக முதற்கட்ட மருத்துவ ஆய்வுகள் அடிப்படையில் சந்தேகிக்கப்படுகிறது. இதற்கிடையில் புனேவில் இந்நோய் பாதிப்பு ஏற்பட்டவர்கள் எண்ணிக்கை 100-ஐ கடந்துள்ளது.

5 நாள் சிகிச்சைக்குப் பின்.. மகாராஷ்டிராவின் சோலாபூர் மாவட்டத்தில் இந்த மரணம் நிகழ்ந்துள்ளது. குறிப்பிட்ட அந்த நபர் தனிப்பட்ட வேலைகளுக்காக சொந்த கிராமத்துக்குச் சென்றுள்ளார். அங்கு அவருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆரம்பத்தில் சளி, இருமல் தொந்தரவு ஏற்பட்டு பின்னர் மூச்சுத் திணறல் ஆகியுள்ளது. அதற்காக ஜனவரி 18 ஆம் தேதி சோலாப்பூரில் ஒரு தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். முதலில் ஐசியூவிலும் பின்னர் வார்டிலும் சிகிச்சை பெற்றுவந்துள்ளார். ஆரம்பத்தில் உடல்நலம் தேறியுள்ளது பின்னர் மீண்டும் மூச்சித் திணறல் ஏற்பட அவர் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவர் உயிரிழப்பதற்கு முன்னர் அவருக்கு பக்கவாதமும் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து மகாராஷ்டிரா மாநிலம் சோலாபூர் மருத்துவக் கல்லூரி டீன் டாக்டர் சஞ்சீவ் தாக்கூர் கூறுகையில், “சோலாபூரில் ஒரு தனியார் மருத்துவமனையில் 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அவரது உடல் மருத்துவக் கூராய்வுக்காகக் கொண்டு வரப்பட்டது. முதற்கட்ட ஆய்வின்படி அவர் கில்லியன் - பேர் சிண்ட்ரோமால் இறந்ததாகத் தெரிகிறது.

அந்த நபருடைய மருத்துவ சிகிச்சை அறிக்கையை நான் பரிசோதித்தேன். அவர் ஐந்து நாள் சிகிச்சை பெற்றும் கூட நோய்க்கு பலியாகியுள்ளார். உடற்கூராய்வுடன் கிளினிக்கல் கூராய்வையும் நாங்கள் மேற்கொண்டோம். அது மரணத்துக்கான காரணத்தை மருத்துவ ரீதியாக அறியும் கூராய்வு. அப்போது இரண்டு உயிரியல் நிபுணர்கள் மற்றும் நோய்த்தொற்று அறியும் நிபுணர்கள் இருந்தனர். எங்கள் நால்வரின் அறிக்கையின் படி கில்லியன் - பேர் சிண்ட்ரோம் ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது.

செரிப்ரோ ஸ்பைனல் ஃப்ளூயிட் (சிஎஸ்எஃப்) ரத்த மாதிரிகள் பாலிமெரேஸ் செயின் ரியாக்‌ஷன் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. அந்த ஆய்வு முடிவுகள் வருவதற்கு 5 முதல் 6 நாட்கள் ஆகும்.” என்றார். இதற்கிடையில் புனேவில் மட்டும் 100-க்கும் மேற்பட்டோர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

'கில்லியன் பேர் சிண்ட்ரோம்' என்றால் என்ன? மனித உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம், தவறுதலாக உடலின் ஆரோக்கியமான செல்களை தாக்குவது 'ஆட்டோ இம்யூன் நோய்' என்று அழைக்கப்படுகிறது. அத்தகைய நோய்களில் 'கில்லியன் பேர் சிண்ட்ரோமும்' ஒன்றாகும். மகாராஷ்டிராவின் புனே நகரில் அண்மைக்காலமாக இந்த நோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது.

இதுகுறித்து மகாராஷ்டிர சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது: 'கில்லியன் பேர் சிண்ட்ரோம்' நோயால் பாதிக்கப்பட்டவர்களின் கை, கால் தசைகள் வலுவிழக்கும். நரம்பு மண்டலங்களில் பாதிப்பு ஏற்படும். நோயாளிகளால் எழுந்து நடக்க முடியாது. நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலில் குதிங்காலில் வலி ஏற்படும். அதன்பிறகு பாதம் முழுவதும் வலி பரவும். இதன்பிறகு கால்கள், பின்னர் உடல் முழுவதும் வலி பரவும். இதய துடிப்பு, ரத்த அழுத்தம், ஜீரண மண்டலம் பாதிக்கப்படும்.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் புனே நகரில் 73 பேர் 'கில்லியன் பேர் சிண்ட்ரோம்' நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 14 பேர் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொற்று நோய் கிடையாது. எனினும் கேபிலோக்பாக்டர் ஜெஜூனி என்ற பாக்டீரியா தொற்று காரணமாக புனே மக்களுக்கு 'கில்லியன் பேர் சிண்ட்ரோம்' பாதிப்பு ஏற்பட்டிருக்கக்கூடும் என்று சந்தேகிக்கிறோம். டெங்கு, ஜிகா வைரஸ் பாதிப்பு காரணமாகவும் இந்த நோய் பாதிப்பு ஏற்படக்கூடும். தடுப்பூசி, அறுவைச் சிகிச்சை காரணமாகவும் நோய் பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

பாதிக்கப்பட்டவர்களின் மாதிரிகள் ஐசிஎம்ஆர் ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டு உள்ளன. ஆய்வக அறிக்கை கிடைத்த பிறகே தெளிவான பதில் கிடைக்கும். தற்போதைய நிலையில் 'கில்லியன் பேர் சிண்ட்ரோம்' நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிளாஸ்மா மாற்று சிகிச்சை மற்றும் இம்யூனோகுளோபுலின் சிகிச்சை அளித்து வருகிறோம். உரிய நேரத்தில் சிகிச்சை பெறவில்லை என்றால் நோயாளி உயிரிழக்கும் அபாயம் உள்ளது.

யாரைத் தாக்கும்? பொதுவாக 30 வயது முதல் 50 வயதுக்கு உட்பட்டவர்கள் நோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். நோய் முற்றினால் பக்கவாதம், நுரையீரல் செயலிழப்பு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படக்கூடும். ஆரோக்கியமான நபர்கள் 3 வாரங்களில் முழுமையாக குணமாகி விடுவார்கள். சிலருக்கு ஓராண்டு வரைகூட பாதிப்புகள் நீடிக்கலாம். நோயாளி குணமான பிறகு இயல்பான வாழ்க்கையை வாழ முடியும்.

கடந்த 2023-ம் ஆண்டு ஜூன், ஜூலையில் தென் அமெரிக்க நாடான பெருவில் சுமார் 180 பேருக்கு 'கில்லியன் பேர் சிண்ட்ரோம்' நோய் பாதிப்பு ஏற்பட்டது. அப்போது அந்த நாட்டில் 90 நாட்கள் மருத்துவ அவசர நிலை அமல் செய்யப்பட்டது. தேவைப்பட்டால் புனேவில் மருத்துவ அவச நிலை அமல் செய்யப்படும்.

மகாராஷ்டிர தலைநகர் மும்பையில் இருந்து சிறப்பு மருத்துவக் குழுக்கள் புனேவுக்கு வந்துள்ளனர். அந்த குழுவினர் தீவிர ஆய்வுகளை நடத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களில் புனே நகரின் 7,200 வீடுகளில் நேரடியாக கள ஆய்வு நடத்தப்பட்டு உள்ளது. நோய் அறிகுறி உள்ளவர்கள் உடனடியாக மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு வருகின்றனர். இவ்வாறு மகாராஷ்டிர சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

7 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்