கொல்கத்தா: பெண் மருத்துவர் கொலை வழக்கில் குற்றவாளி சஞ்சய் ராய்-க்கான தண்டனை மதியம் 2.45 மணிக்கு அறிவிக்கப்படும் என்று கொல்கத்தா விசாரணை நீதிமன்றம் அறிவித்துள்ளது.
மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவில் ஆர்.ஜி.கர் அரசு மருத்துவமனையில் இரவு பணியில் இருந்த பெண் மருத்துவர் (31) கடந்த ஆகஸ்ட் 9-ம் தேதி சடலமாக மீட்கப்பட்டார். அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்டது பிரேத பரிசோதனையில் தெரியவந்தது.
பெண் மருத்துவரின் கண்கள், உதடு, கழுத்து, வயிறு, தோள்பட்டை, விரல்கள், பிறப்பு உறுப்பில் பலத்த காயங்கள் ஏற்பட்டிருந்தன. இந்த கொடூர கொலை தொடர்பாக, காவல் துறையில் தன்னார்வலராக பணியாற்றிய சஞ்சய் ராய் கடந்த ஆகஸ்ட் 10-ம் தேதி கைது செய்யப்பட்டார்.
இந்த கொலை வழக்கை முதலில் மேற்குவங்க போலீஸார் விசாரித்தனர். மாநில போலீஸாரின் விசாரணை குறித்து மருத்துவ மாணவர்கள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினர். இதைத் தொடர்ந்து மேற்குவங்க உயர் நீதிமன்ற உத்தரவின்படி வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டது.
» காதலனை கொன்ற கேரள பெண்ணுக்கு மரண தண்டனை: நீதிமன்றம் தீர்ப்பு
» நல்லிணக்கம், ஒற்றுமையை வளர்க்கும் கும்பமேளா - ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பெருமிதம்
இந்த வழக்கு மீதான விசாரணை கொல்கத்தாவில் உள்ள விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கில் 81 சாட்சிகள் சேர்க்கப்பட்டனர். அவர்களில் 50 பேரிடம் நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டது. கடந்த அக்டோபர் 7-ம் தேதி சிபிஐ தரப்பில் விசாரணை நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. பெண் மருத்துவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பதாக மருத்துவ மாணவர்கள் குற்றம் சாட்டினர். ஆனால் சிபிஐ குற்றப்பத்திரிகையில் சஞ்சய் ராய் மட்டுமே குற்றத்தில் ஈடுபட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது.
கடந்த 9-ம் தேதி அனைத்து தரப்பு விசாரணைகளும் நிறைவடைந்து தேதி குறிப்பிடப்படாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்த வழக்கில் நீதிபதி அனிபர் தாஸ் கடந்த 18ம் தேதி தீர்ப்பினை வழங்கினார். அப்போது, சிபிஐ முன்வைத்த ஆதாரங்களின் அடிப்படையில் சஞ்சய் ராய் குற்றவாளி என்று நீதிபதி தீர்ப்பளித்தார்.
தண்டனை விவரம் இன்று (ஜன. 20) அறிவிக்கப்படும் என அறிவித்தார். மேலும், "பிஎன்எஸ் பிரிவுகள் 64, 66 மற்றும் 103(1) இன் கீழ் குற்றம் சாட்டப்பட்டவர் குற்றவாளி. இதற்கு அதிகபட்சமாக மரண தண்டனையும், குறைந்தபட்சமாக ஆயுள் தண்டனையும் இருக்கும்" என்று நீதிபதி கூறினார்.
இந்த பின்னணியில், இன்று நீதிமன்றம் கூடியதும், சஞ்சய் ராய் தனது கருத்தை தெரிவிக்க வாய்ப்பு வழங்கப்பட்டது. அப்போது, "நான் எந்த தவறும் செய்யவில்லை. என் மீது பொய்யாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. என் குடும்பத்தைச் சேர்ந்த யாரும் என்னைச் சந்திக்க வரவில்லை. காவல்துறையினரால் நான் தாக்கப்பட்டேன்” என்று சஞ்சய் ராய் கூறினார்.
சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார். "இது அரிதினும் அரிதான குற்றம். சமூகத்திற்கு சேவை செய்து கொண்டிருந்த மருத்துவர் கொல்லப்பட்டுள்ளார். இந்தக் குற்றம் மரண தண்டனையைக் கோருகிறது” என்று சிபிஐ வழக்கறிஞர் கேட்டுக்கொண்டார். அதேநேரத்தில், குற்றம் சாட்டப்பட்ட சஞ்சய் ராய் தரப்பு வழக்கறிஞர் மரண தண்டனையை விதிக்கப்படக்கூடாது என வலியுறுத்தினார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, "சிறை தண்டனை முதல் மரண தண்டனை வரை தண்டனை இருக்கலாம்" என குற்றவாளியிடம் தெரிவித்தார். குற்றவாளியின் தற்காப்புக்கான விசாரணை நிறைவடைவதாகத் தெரிவித்த அவர், பிற்பகல் 2.45 மணிக்கு தண்டனை அறிவிக்கப்படும் என கூறினார்.
முன்னதாக, தண்டனை குறித்த தீர்ப்பு அளிக்கப்படுவதை முன்னிட்டு குற்றவாளி சஞ்சய் ராய் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நீதிமன்றத்துக்கு கொண்டுவரப்பட்டார். நீதிமன்ற வளாகத்திலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. 2 துணை ஆணையர்கள், 5 உதவி ஆணையர்கள், 14 ஆய்வாளர்கள், 31 துணை ஆய்வாளர்கள், 39 உதவி துணை ஆய்வாளர்கள், 299 கான்ஸ்டபிள்கள், 80 பெண் போலீசார் என நீதிமன்ற வளாகம் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
முன்னதாக, கொல்கத்தா பெண் மருத்துவரின் தந்தை செய்தியாளர்களிடம் பேசும்போது, “கடந்த சனிக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சஞ்சய் ராய் ஏதோ பேச முயன்றார். நீதிமன்றம் அவரை திங்கட்கிழமை பேசச் சொன்னது. அவர் ஒரு குற்றவாளி, அவருடன் வேறு சிலருக்கும் தொடர்பு இருக்கிறது. என்னைப் பொறுத்தவரை முதல்வர் மம்தா பானர்ஜி, மேற்குவங்க போலீஸார், சிபிஐ விசாரணை திருப்திகரமாக இல்லை. எனது மகளின் கொலையோடு தொடர்புடைய அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும். அதுவரை நீதிமன்றத்தின் கதவுகளை தட்டிக் கொண்டே இருப்பேன். எனக்கும் எனது குடும்பத்துக்கும் பொதுமக்களே ஆதரவு அளிக்க வேண்டும், பாதுகாப்பு வழங்க வேண்டும்.” என்று தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
5 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
2 days ago
இந்தியா
2 days ago
இந்தியா
2 days ago