டெல்லி சட்டப்பேரவைக்கு பிப்.5-ல் தேர்தல்: 70 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக வாக்குப்பதிவு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: டெல்லி சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக பிப்ரவரி 5-ம் தேதி தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஈரோடு கிழக்கு, உத்தர பிரதேசத்தின் மில்கிபூர் ஆகிய தொகுதிகளுக்கும் அதே நாளில்தான் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. பிப். 8-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: டெல்லி சட்டப்பேரவைக்கு மொத்தம் உள்ள 70 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பிப்ரவரி 5-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் ஜன.10-ம் தேதி தொடங்குகிறது. வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஜன.17. வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை ஜன.18-ம் தேதி நடைபெறும். வேட்பு மனுக்களை திரும்ப பெறுவதற்கான கடைசி தேதி ஜன.20 ஆகும். இதில் பதிவான வாக்குகள் பிப்.8-ம் தேதி எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படும்.

100 கோடி வாக்காளர்கள்: டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் மொத்தம் 1.55 கோடி பேர் வாக்களிக்க உள்ளனர். இதில், ஆண் வாக்காளர்கள் 83.49 லட்சம். பெண் வாக்காளர்கள் 71.74 லட்சம். இளம் வாக்காளர்கள் (20-29 வயது) 25.89 லட்சம், முதல் முறை வாக்காளர்கள் (18-19 வயது) 2.08 லட்சம் பேர் உள்ளனர். இந்தியாவின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 99 கோடியை கடந்து 100 கோடியை நெருங்கியுள்ளது.

தங்கத்தின் தரம் நம் தேர்தல்: தங்கத்தின் தரம் போன்ற தேர்தல் முறைகளை கொண்டது இந்தியா. இது, நமது தேர்தல்களில் பொதுவான பாரம்பரியமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. எனவே, ஆணையத்தில் எந்த முறைகேடுகளும் நடக்க வாய்ப்பில்லை. ஏனெனில் தேர்தல் நடைமுறைகள் அவ்வளவு புள்ளிவிவரத்துடன் உள்ளது. தனிப்பட்ட நபர்கள் தவறு செய்தால் தண்டிக்க நாங்கள் தயாராக உள்ளோம்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் குறைபாடுகள் மற்றும் நம்பகத்தன்மைக்கு எதிராக எந்த ஆதாரங்களும் இல்லை. செல்லாத வாக்குகள் என்ற கேள்விக்கும் இடமில்லை. அதேபோன்று மோசடி செய்வதும் சாத்தியமில்லை. இதனை, உச்ச நீதிமன்றமே தெளிவுபடுத்தியுள்ளது. பல்வேறு மாநில உயர் நீதிமன்றங்களும் இதே கருத்தையே தெரிவித்துள்ளன. எனவே, மீண்டும் வாக்குச் சீட்டு தேர்தல் முறைக்கு திரும்ப முடியாது. அதற்கான சாத்தியக்கூறுகளும் இல்லை. வெளிப்படைத்தன்மைதான் இந்திய தேர்தல் ஆணையத்தின் முக்கிய தூண். இவ்வாறு ராஜீவ் குமார் தெரிவித்தார்.

ஈரோடு இடைத்தேர்தல்: ஈரோடு கிழக்கு தொகுதிக்கு 2021-ம் ஆண்டு நடந்த தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட திருமகன் ஈவெரா வெற்றி பெற்றார். அவரது மறைவுக்கு பிறகு, 2023 பிப்ரவரி 27-ம் தேதி நடந்த இடைத்தேர்தலில், திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெற்றார். உடல்நலக்குறைவால், கடந்த ஆண்டு டிச.14-ம் தேதி ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைந்தார். இதையடுத்து, ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இங்கு பிப்.5-ல் இடைத்தேர்தல் நடைபெறும் என நேற்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன.

இதுகுறித்து, ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், மாநகராட்சி ஆணையருமான மணீஷ் கூறியது: வேட்புமனு தாக்கல் ஜன.10-ல் தொடங்கி ஜன.17-ல் நிறைவடைகிறது. 18-ம் தேதி மனுக்கள் மீதான பரிசீலனை நடக்கும். 20-ம் தேதிக்குள் வேட்புமனுக்களை திரும்ப பெறலாம். பிப்.8-ம் தேதி வாக்குகள் எண்ணப்படும். வாக்குப்பதிவுக்காக மொத்தம் 53 இடங்களில், 237 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும்.இங்கு 2 லட்சத்து 26 ஆயிரத்து 433 வாக்காளர்கள் உள்ளனர். இவ்வாறு கூறினார்.

உ.பி.யில் இடைத்தேர்தல்: உத்தர பிரதேச மாநிலம் மில்கிபூர் தொகுதி எம்எல்ஏவாக இருந்த சமாஜ்வாதி கட்சியின் அவதேஷ் பிரசாத் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இருப்பினும், இந்த தொகுதி தொடர்பான ரிட் மனு, நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்ததால் கடந்த அக்டோபரில் இந்த தொகுதிக்கான இடைத்தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில், லக்னோ உயர்நீதிமன்ற அமர்வு ரிட் மனுவை நவ.25-ம் தேதி தள்ளுபடி செய்தது. இதையடுத்து, மில்கிபூர் தொகுதிக்கும் பிப்5-ல் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

6 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்