திருமலையில் ஆழ்வார் திருமஞ்சனம்; ஏகாதசி ஏற்பாடுகள் நிறைவு: திருப்பதி தேவஸ்தானம் தகவல்

By என். மகேஷ்குமார்

வைகுண்ட ஏகாதசிக்கான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி சியாமள ராவ் தெரிவித்துள்ளார்.

ஆந்திர மாநிலம், திருமலையில் உள்ள அன்னமைய்யா பவனில் நேற்று தேவஸ்தான நிர்வாக அதிகாரி சியாமள ராவ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

வைகுண்ட ஏகாதசியையொட்டி வரும் 10-ம் தேதி முதல், 19-ம் தேதி வரை திருமலையில் பக்தர்கள் அனைவருக்கும் சொர்க்கவாசல் தரிசன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆதலால் இந்த 10 நாட்களில் மட்டும் 7 லட்சம் பக்தர்கள் சொர்க்க வாசல் தரிசனம் செய்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.

வரும் 10-ம் தேதி அதிகாலை கோயில் கைங்கர்யங்கள் செய்த பின்னர், 4.30 மணி முதல் சொர்க்கவாசல் தரிசனம் தொடங்கும். காலை 9 மணி முதல் 11 மணி வரை தங்க தேரில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் மலையப்பர் பக்தர்களுக்கு அருள் புரிவார்.

இதனை தொடர்ந்து பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை திருமலை வாகன மண்டபத்தில் மலையப்பர் பக்தர்களுக்கு காட்சியளிப்பார். மறுநாள் வைகுண்ட துவாதசியையொட்டி அதிகாலை கோயில் அருகே உள்ள குளத்தில் 5.30 மணி முதல் 6.30 மணிக்குள் சக்கர ஸ்நான நிகழ்ச்சி நடைபெறும்.

தற்போது வரை 1.40 லட்சம் பக்தர்களுக்கு ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகளும், 19,500 பேருக்கு ஸ்ரீவாணி அறக்கட்டளை தரிசன டிக்கெட்டுகளும் ஆன்லைன் மூலம் விநியோகம் செய்யப்பட்டு விட்டன.

வரும் 9-ம் தேதி திருப்பதியில் 8 இடங்களில் 91 கவுண்ட்டர்கள் ஏற்பாடு செய்யப்பட்டு, சர்வ தரிசன டோக்கன்கள் விநியோகம் செய்யப்பட உள்ளன. மேற்கண்ட 10 நாட்களுக்கு விஐபி பிரேக் தரிசனத்துக்கான சிபாரிசு கடிதங்கள் ஏற்கப்பட மாட்டாது.

அதுமட்டுமல்லாமல் மூத்த குடிமக்கள், மாற்று திறனாளிகள், கைக்குழந்தையுடன் வரும் பெற்றோர், வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு என வழங்கப்படும் சிறப்பு தரிசனங்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுகின்றன.

இதேபோன்று ஸ்ரீவாரி மெட்டு பகுதியில் மலையேறி வரும் பக்தர்களுக்கு வழக்கமாக வழங்கப்படும் திவ்ய தரிசன டிக்கெட்டுகள் கூட 10 நாட்களுக்கு நிறுத்தப்படுகிறது. திருமலை சிஆர்ஓ அலுவலகத்தில் சாமானிய பக்தர்களுக்கு தங்கும் அறைகள் வழங்கப்படும்.

12 ஆயிரம் வாகனங்கள் நிறுத்த திருமலையில் பார்க்கிங் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. தர்ம தரிசன டோக்கன்கள் வழங்கும் இடங்கள் குறித்து திருப்பதி நகரில் பல இடங்களில் கூகுள் வரை படங்களுடன் கூடிய பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.

பக்தர்கள் அந்தந்த இடங்களுக்கு சென்று ஆதார் அட்டையை காண்பித்து இலவச தரிசன டோக்கன்களை பெறலாம். பக்தர்களின் பாதுகாப்பை கருதி சுமார் 3,000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இவ்வாறு சியாமள ராவ் தெரிவித்தார்.

கோயில் ஆழ்வார் திருமஞ்சன சேவை: வரும் 10-ம் தேதி வைகுண்ட ஏகாதசி வருவதையொட்டி, திருமலையில் வைகானச ஆகம விதிகளின்படி நேற்று காலை ஏழுமலையான் கோயில் முழுவதையும் வாசனை திரவியங்களால் சுத்தப்படுத்தப்படும் ஆழ்வார் திருமஞ்சன சேவை வெகு சிறப்பாக நடைபெற்றது.

பன்னீர், பச்சை கற்பூரம், மஞ்சள், குங்குமம், சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் மூலம் கோயில் கற்ப கிரகம், சுவர்கள், பலிபீடம், கொடிக்கம்பம், உப சன்னிதிகள், கோயில் கோபுரம், முகப்பு வாசல் என அனைத்து இடங்களும் சுத்தம் செய்யப்பட்டன. இதனை தொடர்ந்து, மதியம் 12 மணிக்கு பிறகே பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்ய அனுமதித்தனர்.

மகாகும்பமேளாவில் ஏழுமலையானின் மாதிரி கோயில்: உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜ் பகுதியில் ஜனவரி 13-ம் தேதி முதல் பிப்ரவரி 26-ம் தேதி வரை மகா கும்பமேளா நடைபெற உள்ளது. இதில் திருப்பதி தேவஸ்தானம் சார்பில் 2.89 ஏக்கர் பரப்பளவில் ஏழுமலையானின் மாதிரி கோயில் கட்டப்படுகிறது. இங்கு, திருமலையில் நடைபெறும் சுப்ரபாத சேவை முதற்கொண்டு ஏகாந்த சேவை வரை அனைத்து சேவைகளும் மேற்கண்ட பிப்ரவரி 26-ம் தேதி வரை தொடர்ந்து நடைபெறும். சுவாமியின் திருக்கல்யாண நிகழ்ச்சி வரும் ஜனவரி 18, 26 மற்றும் பிப்ரவரி 3,12 ஆகிய தேதிகளில் நடைபெறும். இதற்கான தர்ம ரதம் இன்று 8-ம் தேதி காலை 7 மணிக்கு திருமலையில் இருந்து உத்தரபிரதேச மாநிலத்துக்கு புறப்பட உள்ளது என்பது குறிப்பிட தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

33 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்