சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சல் தீவிரவாதிகள் நேற்று நடத்திய கண்ணிவெடி தாக்குதலில் 8 பாதுகாப்புப் படை வீரர்கள் உட்பட 9 பேர் உயிரிழந்தனர்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் மொத்தம் 33 மாவட்டங்கள் உள்ளன. இதில் 13-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் நக்சல் தீவிரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வந்தனர். இந்த பிரச்சினைக்கு தீர்வு காண சத்தீஸ்கர் காவல் துறை சார்பில் கடந்த 2008-ம் ஆண்டில் மாவட்ட ரிசர்வ் குரூப் (டிஆர்ஜி) என்ற சிறப்பு படைப்பிரிவு உருவாக்கப்பட்டது. இதில் தற்போது 3,500 வீரர்கள் உள்ளனர்.
டிஆர்ஜி படைப் பிரிவு வீரர்கள், வனப்பகுதிகளில் முகாம் அமைத்து நக்சல் தீவிரவாதிகளை வேட்டையாடி வருகின்றனர். இதன்காரணமாக கடந்த 2008-ம் ஆண்டு முதல் இதுவரை சத்தீஸ்கரில் 80 சதவீத நக்சல் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டு உள்ளனர். கடந்த ஆண்டில் மட்டும் 90-க்கும் மேற்பட்ட என்கவுன்ட்டர்கள் நடத்தப்பட்டன. இதில் சுமார் 200-க்கும் மேற்பட்ட நக்சல் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
கடந்த சனிக்கிழமை சத்தீஸ்கரின் நாராயண்பூர், தண்டேவாடா மாவட்ட எல்லைப் பகுதிகளில் சுமார் 1,000-க்கும் மேற்பட்ட டிஆர்ஜி படை வீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அபுஜ்மாத் வனப்பகுதியில் நக்சல் தீவிரவாதிகள் மறைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இருதரப்புக்கும் இடையே நள்ளிரவு வரை துப்பாக்கி சண்டை நடைபெற்றது. இதில் 5 நக்சல் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். டிஆர்ஜி படையின் தலைமை காவலர் சன்னு கரம் வீரமரணம் அடைந்தார்.
அபுஜ்மாத் வனப்பகுதியில் என்கவுன்ட்டர் நடத்திய டிஆர்ஜி படை வீரர்களில் ஒரு பிரிவினர் நேற்று பிஜாப்பூர் மாவட்ட வனப்பகுதியில் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். தனியார் காரில் அம்பிலி பகுதியில் அவர்கள் சென்றபோது சாலையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கண்ணிவெடி வெடித்துச் சிதறியது. இதில் கார் தூக்கி வீசப்பட்டது. காரில் பயணம் செய்த 8 டிஆர்ஜி வீரர்கள், ஓட்டுநர் உயிரிழந்தனர்.
இதுகுறித்து பஸ்தர் பகுதி காவல் துறை ஐஜி சுந்தர்ராஜ் கூறியதாவது: கடந்த 3 நாட்களாக மாநில காவல் துறையும் டிஆர்ஜி வீரர்களும் இணைந்து நக்சல் தீவிரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டு இருந்தனர். இதில் ஒரு பிரிவினர் காரில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். சனிக்கிழமை பிற்பகல் 2.15 மணிக்கு அவர்களின் கார் கண்ணிவெடியில் சிக்கியது. காரின் பாகங்கள் சுமார் 30 அடி தொலைவுக்கு வீசப்பட்டு உள்ளன. சுமார் 25 அடி உயரம் உள்ள மரத்தின் கிளைகளில் இருந்தும் காரின் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டிருக்கிறது. கண்ணிவெடி வெடித்த இடத்தில் 10 மீட்டர் ஆழத்துக்கு மிகப்பெரிய பள்ளம் உருவாகி உள்ளது. சம்பவ இடத்துக்கு கூடுதல் படைகள் அனுப்பப்பட்டு உள்ளன. வனப்பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்படுகிறது. இவ்வாறு ஐஜி சுந்தர்ராஜ் தெரிவித்தார்.
சத்தீஸ்கர் முதல்வர் விஷ்ணு தியோ கூறும்போது, “நக்சல் தீவிரவாதிகள் விரக்தியில் உள்ளனர். இதனால் கோழைத்தனமான தாக்குதலை நடத்தி உள்ளனர். உயிரிழந்த வீரர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். நக்சல் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை தீவிரப்படுத்தப்படும்" என்று தெரிவித்தார்.
சத்தீஸ்கர் துணை முதல்வர் அருண் கூறும்போது, “நக்சல் தீவிரவாதிகள் கோழைத்தனமாக தாக்குதல் நடத்தி உள்ளனர். உயிரிழந்த டிஆர்ஜி வீரர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். அவர்களின் உயிர்த்தியாகம் வீணாகாது. நக்சல் தீவிரவாதிகளுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும். சத்தீஸ்கரில் நக்சல் தீவிரவாதம் வேரறுக்கப்படும்" என்று தெரிவித்தார்.
சத்தீஸ்கர் தலைநகர் ராய்ப்பூரில் உள்ள தேசிய புலனாய்வு அமைப்பை (என்ஐஏ) சேர்ந்த வெடிகுண்டு நிபுணர்கள், கண்ணிவெடி நேரிட்ட பகுதிக்கு சென்று ஆய்வு நடத்தினர். தாக்குதலுக்கு என்ன வகையான வெடிபொருட்கள் பயன்படுத்தப்பட்டன என்பது குறித்து மாநில காவல் துறையிடம் அவர்கள் விரிவான அறிக்கை சமர்ப்பிக்க உள்ளனர். முதல்கட்ட விசாரணையில், கண்ணிவெடி தாக்குதலுக்கு சுமார் 100 கிலோ வெடிபொருட்கள் பயன்படுத்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
9 mins ago
இந்தியா
13 mins ago
இந்தியா
29 mins ago
இந்தியா
42 mins ago
இந்தியா
3 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
23 hours ago