புதுடெல்லி: “இந்தியாவில் சனாதனம் அல்லது இந்து என்று குறிப்பிடும்போது அது புரிந்துகொள்ள முடியாத அளவுக்கு குழப்பமான, முரண்பாடான, வேதனையான எதிர்வினைகளை தூண்டுகிறது” என்று குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் தெரிவித்துள்ளார்.
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் உள்ள மாநாட்டு மையத்தில் இன்று நடைபெற்ற வேதாந்தாவின் 27-வது சர்வதேச மாநாட்டில் தொடக்க உரையாற்றிய தன்கர், "நமது நாகரிகம் பழமையான நாகரிகங்களில் ஒன்று. இது பல்வேறு வழிகளில் தனித்துவமானது; ஈடு இணையற்றது. இந்தியாவில் சனாதனம் அல்லது இந்து என்று குறிப்பிடும்போது அது புரிந்துகொள்ள முடியாத அளவுக்கு குழப்பமான, முரண்பாடான, வேதனையான எதிர்வினைகளை தூண்டுகிறது. இந்த வார்த்தைகளின் அர்த்தத்தைப் புரிந்துகொள்வதற்குப் பதிலாக, சிலர் அதற்கு எதிரான மனநிலையில் உள்ளனர்.
இந்த ஆன்மிக பூமியில் இருக்கும் சிலர், வேதாந்தம், சனாதனம் தொடர்பான நூல்களை பிற்போக்குத்தனமானவை என்று நிராகரிக்கின்றனர். அவர்கள் அது குறித்து அறிந்து கொள்ளாமலேயே அதனை நிராகரிக்கின்றனர். இந்த நிராகரிப்பு பெரும்பாலும் வக்கிரமான காலனிய மனநிலைகளை கொண்டதாகவும், நமது அறிவுசார் பாரம்பரியத்தைப் பற்றிய புரிதல் இல்லாத தன்மையையும் எடுத்துரைக்கின்றன. இந்த ஆன்மாக்கள் ஆபத்தான சுற்றுச்சூழல் அமைப்பால் இயக்கப்படுகின்றன. இது மிகவும் ஆபத்தானது. இத்தகைய தவறான செயல்களை நியாயப்படுத்த மதச்சார்பின்மை கேடயமாக பயன்படுத்தப்படுகிறது. இதனை அம்பலப்படுத்துவது ஒவ்வொரு இந்தியனின் கடமையாகும்.
வேதாந்தம் கேள்விகளுக்கு மட்டும் பதிலளிக்காது. இது கேள்விகளுக்கு பதிலளிப்பதைத் தாண்டியது. இது உங்கள் சந்தேகங்களை நீக்குகிறது. இது உங்கள் ஆர்வத்தின் தாகத்தை பூர்த்தி செய்கிறது. இது உங்களை முழு நம்பிக்கையுடனும் பக்தியுடனும் ஒன்றிணைய அழைத்துச் செல்கிறது. நாம் நமது கலாச்சார வேர்களுக்குத் திரும்ப வேண்டும். நமது தத்துவ பாரம்பரியத்திற்கு நாம் உயிர்ப்புடன் இருக்க வேண்டும். நமது இந்தியாவை விட எந்த நாடு அனைத்தையும் உள்ளடக்குவதை வரையறுக்க முடியும்? நமது மதிப்புகள், நமது செயல்கள், நமது தனிப்பட்ட வாழ்க்கை அதனை வரையறுக்கிறது. நமது சமூக வாழ்க்கை அதை வரையறுக்கிறது.
» “எனக்காக ஒரு மாளிகையை கட்டியிருக்கலாம்; ஆனால்...” - புதிய வீடுகள் வழங்கும் விழாவில் பிரதமர் பேச்சு
வேதாந்த ஞானத்தை தந்த கோபுரங்களிலிருந்து வகுப்பறைகளுக்கு நாம் கொண்டு செல்ல வேண்டும். சமூகத்தின் ஒவ்வொரு மூலையிலும் அது சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும். வேதாந்தம் என்பது கடந்த காலத்தின் நினைவுச்சின்னம் அல்ல. அது எதிர்காலத்திற்கான ஒரு வரைபடமாகும். நாம் முன்னோடியில்லாத உலகளாவிய சவால்களை எதிர்கொள்ளும் நிலையில், அது நிலையான வளர்ச்சி, நெறிமுறை மற்றும் இணக்கமான சகவாழ்வுக்கான நடைமுறை தீர்வுகளை வழங்குகிறது.
உலகில் உள்ள அனைவருக்கும் கருத்து தெரிவிக்கும் உரிமை இருக்க வேண்டும். கருத்துரிமை என்பது தெய்வீக வரம். எந்த ஒரு காரணியாலும் அது நீர்த்துப்போவது ஆரோக்கியமானதல்ல. கருத்து தெரிவிப்பது மற்றும் உரையாடல் இரண்டும் கைகோர்த்துச் செல்ல வேண்டும். கருத்தை வெளிப்படுத்துவதும், உரையாடலும் நாகரிகத்திற்கு இன்றியமையாதவை.
இவ்விஷயத்தை உறுதிப்படுத்த மாநிலங்களவைத் தலைவராக என்னால் முடிந்தவரை முயற்சி செய்கிறேன். மாநிலங்களவை என்பது மூத்தோர் சபை. ஆனால், அங்கே நாங்கள் ஒருபோதும் உரையாடலில் ஈடுபடுவதில்லை. நாடாளுமன்ற உறுப்பினர்கள் வேதாந்த தத்துவத்தைப் படிக்க வழிவகுத்தால், அவர்கள் நிச்சயமாக அதை வரவேற்பார்கள் என்று நான் நம்புகிறேன்.
இவ்விஷயத்தில் நான் மக்களையும் ஏதோ ஒரு வகையில் பொறுப்பாக்குவேன். கடமையைச் செய்யத் தவறியவர்கள் மீது மக்கள் அழுத்தத்தை உருவாக்க வேண்டும். ஒரு மருத்துவர் கடமையைச் செய்யாதபோது, ஒரு வழக்கறிஞர் கடமையைச் செய்யாதபோது, ஒரு அரசு ஊழியர் கடமையைச் செய்யாதபோது மக்கள் அவர்களுக்கு அழுத்தத்தைக் கொடுக்கிறார்கள். ஆனால் உங்கள் பிரதிநிதிகள் தங்கள் கடமையைச் செய்யாதபோது நீங்கள் ஏன் அமைதியாக இருக்க வேண்டும்?
மற்ற கண்ணோட்டங்களைக் கருத்தில் கொள்ள மறுப்பது தற்போது பொது உரையாடலில் ஆதிக்கம் செலுத்துகிறது. இந்த சகிப்பின்மை முதலில் நமது ஜனநாயக விழுமியங்களை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது. இரண்டாவதாக, சமூகத்தில் நல்லிணக்கத்தை சீர்குலைக்கிறது. மூன்றாவதாக, இது உற்பத்தித்திறனை தடுக்கிறது. எல்லா வகையிலும், இது பேரழிவுக்கும், தோல்விக்குமே வழிவகுக்கிறது.
நான் உங்கள் பேச்சைக் கேட்க மாட்டேன்; உங்கள் கருத்துக்கு என்னிடம் எந்த மதிப்பும் இல்லை; நான் அதைக் கருத்தில் கொள்ள மாட்டேன் என்னும் அணுகுமுறை ஏற்கத்தக்கதல்ல. இது ஒரு மாதிரியாக மாறிவிட்டது. உலகம் முழுவதும் உள்ள மக்களிடையே பெரும் அமைதியின்மைக்கு இது காரணமாக உள்ளது" என்று தெரிவித்தார்.
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் சாந்திஸ்ரீ துளிப்புடி பண்டிட், அமெரிக்காவின் ஹவாய் பல்கலைக்கழகத்தின் எமரிட்டஸ் பேராசிரியர் அரிந்தம் சக்ரபர்த்தி, மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பிற முக்கியஸ்தர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
31 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago