ஏமனில் கேரள நர்ஸுக்கு மரண தண்டனை உறுதி - நிமிஷா பிரியாவுக்கான கடைசி வாய்ப்புதான் என்ன?

By பாரதி ஆனந்த்

கேரளாவின் பாலாக்காட்டைச் சேர்ந்த 36 வயது செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு ஒரு மாத காலத்துக்குள் மரண தண்டனையை நிறைவேற்ற அனுமதி கொடுத்துள்ளார் ஏமன் நாட்டு அதிபர். மகளை எப்படியாவது உயிரோடு மீட்டுவிட வேண்டும் என்று மாதக்கணக்கில் அங்கே தங்கியிருகிறார் 57 வயதான அவரது தாய். “உத்தரவுகளை அறிந்தோம்; தேவையான அனைத்து உதவிகளையும் செய்வோம்” என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் உறுதியளித்துள்ளது. இந்த வழக்கின் தன்மையைப் பார்த்து யார் இந்த நிமிஷா பிரியா என்ற கேள்வி எழாமல் இருக்காது.

யார் இந்த நிமிஷா பிரியா? - 2011-ஆம் ஆண்டு கேரளாவின் பாலக்காட்டில் இருந்து ஏமன் தலைநகர் சனாவுக்கு குடும்பத்துடன் செல்கிறார் செவிலியர் சனா. 2014 வரை அங்கே குடும்பத்துடன் இருந்த நிலையில், நிதி நெருக்கடிகளால் கணவர், மகளை தாயகத்துக்கு அனுப்பிவிட்டு அவர் மட்டும் அங்கேயே பணியைத் தொடர்கிறார். இந்தச் சூழலில் ஏமனில் உள்நாட்டுக் கலவரம் வலுக்க, நிமிஷா பிரியாவுக்கு தாயகம் திரும்புவது கடினமாகிறது. ஆனாலும், பிழைத்தாக வேண்டுமே. வழிகளை, வாய்ப்புகளைத் தேடுகிறார். அப்போது தான் அவர் அங்கு ஏமனைச் சேர்ந்த தலால் அப்தோ மஹ்தியை சந்திக்கிறார். அவருடன் சேர்ந்து அங்கு ஒரு கிளினிக் திறக்க திட்டமிடுகிறார். ஏமனில் வெளிநாட்டவர்கள் இவ்வாறாக கிளினிக் தொடங்க வேண்டுமானால், சட்டப்படி அந்நாட்டவருடன் இணைந்தே அதை செய்ய இயலும். அதனால், தலால் அப்தோ மஹ்தியுடன் கூட்டாக நிமிஷா கிளினிக் ஆரம்பிக்கிறார்.

கூடவே, அவருக்கான சிக்கல்களும் ஆரம்பித்துள்ளன. நிமிஷாவின் ஆவணங்களைப் பெற்ற மஹ்தி, தான் அவரைத் திருமணம் செய்து கொண்டது போல் தகவல்களை மாற்றுகிறார். அதுமட்டுமல்லாது நிமிஷாவை உடல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் துன்புறுத்துகிறார். நிமிஷா பிரியாவின் கூற்றுப்படி, அவருடைய பாஸ்போர்ட்டையும் மஹ்தி கைப்பற்றிக் கொள்கிறார். கிளினிக்கில் இருந்து கிடைக்கும் வருமானத்தையும் சுரண்டிக் கொள்கிறார். இத்தனையையும் எளிதாக சாதிக்க நிமிஷாவை போதை வஸ்துகளைக் கொடுத்து அடிமையாக்கிக் கொள்கிறார். ஒரு கட்டத்தில் நிமிஷா உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கிறார். ஆனால், மஹ்தி மீது நடவடிக்கை எடுக்காமல் நிமிஷாவை போலீஸார் கைது செய்கின்றனர்.

இப்படி போராட்டங்களுடன் நகர்ந்த நிமிஷாவின் வாழ்வில் 2017-ல் பெரிய துயரம் நேர்கிறது. எப்படியாவது மஹ்தியிடமிருந்து பாஸ்போர்ட்டைப் பெற வேண்டும், கொடூரச் சூழலில் இருந்து தப்பிக்க வேண்டும் என முடிவு செய்கிறார். சிறைச்சாலை வார்டன் ஒருவரின் உதவியை நாடுகிறார். அவர் சொல்லியபடி மஹ்தியை மயக்கமடையச் செய்துவிட்டு பாஸ்போர்ட்டை எடுத்துக் கொண்டு தப்ப வேண்டும் என்பதே நிமிஷாவின் திட்டம். ஆனால், துரதிர்ஷ்டவசமாக அவர் கொடுத்த மயக்க மருந்து ஓவர் டோஸ் ஆகிவிடவே மஹ்தி இறந்துவிடுகிறார். தொடர்ந்து நிமிஷா கைது செய்யப்படுகிறார். அதன் பின்னர் அவர் மீதான குற்றச்சாட்டும் நிரூபிக்கப்பட்டு அவருக்கு அந்நாட்டு உச்ச நீதிமன்றம் மரண தண்டனை விதிக்கிறது. கொலைக் குற்றத்துக்காக கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் சிறையில் இருக்கும் அவரது தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்கிறது.

ஒரு தாயின் நீண்ட போராட்டம்: அன்று தொடங்கி ஒரு நீண்ட பாசப் போராட்டத்தை முன்னெடுத்தார் நிமிஷாவின் தாயார் பிரேமா குமாரி (57). ஏமனில் நடைபெறும் உள்நாட்டுக் கலவரத்தால் அங்கே இந்தியர்கள் செல்ல தடை நிலவியதால் ஏமன் செல்வதற்கே பிரேமா குமாரி படாத பாடுபட்டார். முதலில் அவர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் தன்னை ஏமன் செல்ல அனுமதிக்கக் கோரி ஒரு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், மத்திய அரசு உதவ அறிவுத்தியது. அதன் பேரில் அவருக்கு ஏமன் செல்லவும் அனுமதி கிடைத்தது.

சாமுவேன் ஜெரோம் (இடது ஓரம்), பிரேமா குமாரி (இடமிருந்து வலமாக 3-வது நபர்)

ஏமன் சென்ற பிரேமா குமாரி அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் மகளின் மரண தண்டனையை நிறுத்தக் கோரி மேல்முறையீடு செய்தார். ஆனால், அவரது மேல்முறையீட்டு மனு நிராகரிக்கப்பட்டது. பிரேமாவுக்கு ஏமனில் வசிக்கும் இந்தியரான சாமுவேல் ஜெரோம் பாஸ்கரன் உதவ முன்வந்தார். இப்போது அங்கே ‘சேவ் நிமிஷா இண்டர்நேஷனல் கவுன்சில்’ என்றொரு அமைப்பு கூட தொடங்கப்பட்டுள்ளது. அந்தக் கவுன்சிலில் சாமுவேல் பாஸ்கரன் உறுப்பினராக இருக்கிறார். அவருடைய உதவியுடன் பிரேமா குமாரி பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார். இதுவரை அவருக்குக் கிடைத்த ஒரே வெற்றி, ஒருமுறை அவரால் சிறையில் தன் மகள் நிமிஷாவை நேரில் சந்தித்தார். 11 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் தன் மகளை நேரில் சந்தித்தார். எப்படியாவது மகளை மீட்டுவிட வேண்டும் என்று நம்பிக்கையோடு காத்திருக்கிறார்.

ரத்தத்துக்கு பதில் பணம் - பல்வேறு முயற்சிகளுக்கு இடையே நிமிஷாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை நிறைவேற்ற ஏமன் அதிபரும் ஒப்புதல் வழங்கி விட்டார். இந்தச் சூழலில் நிமிஷாவை மீட்க மஹ்தியின் குடும்பத்தினர் மனது வைத்தால் மட்டுமே முடியும் என்கிறார் சாமுவேல். மஹ்தியின் குடும்பத்தினர் நிம்ஷா குடும்பத்தினர் இழப்பீடாக பணம் கொடுத்தால் மன்னிக்கத் தயார் எனக் கூறியிருந்தனர். இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடந்து வந்தன.

அமைதிப் பேச்சுவார்த்தையில் தற்போது திடீரென தொய்வு ஏற்பட்டுள்ளது. இதற்குக் காரணம், நிமிஷா பிரியா சார்பில் ஆஜராகும் ஏமன் வழக்கறிஞருக்கான கட்டணத்தின் இரண்டாம் தவணை தடைபட்டதே எனக் கூறப்படுகிறது. நிமிஷாவின் வழக்கறிஞர் 40 ஆயிரம் டாலர் கோரியிருந்தார். முதல் தவணையாக 20 ஆயிரம் டாலர் வழங்கப்பட்டு விட்டது. இரண்டாம் தவணை அவருக்குச் சென்று சேராத நிலையில், அவர் மஹ்தி குடும்பத்தினர் மற்றும் உள்ளூர் பழங்குடியின தலைவர்களிடம் நிமிஷா சார்பில் சமரச முயற்சிகளை மேற்கொள்வதில் தொய்வு ஏற்பட்டுள்ளது. எஞ்சிய பணத்தைக் கொடுத்தால் மட்டுமே அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தையைத் தொடர்வேன் எனத் திட்டவட்டமாகக் கூறிவிட்டார்.

வெளியுறவு அமைச்சகம் விளக்கம்: இந்நிலையில், நிமிஷா பிரியாவின் நிலை குறித்து தொடர்ச்சியாக ஊடகங்கள் இந்திய வெளியுறவு அமைச்சகத்துக்கு கேள்விகள் எழுப்பின. வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாள ரன்தீர் ஜெய்ஸ்வால் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஏமனில் நிமிஷா பிரியாவுக்கான தண்டனை நிலவரம் குறித்து நாங்கள் அறிந்திருக்கிறோம். நிமிஷா பிரியாவின் குடும்பத்தினர் அவரை மீட்க பொருத்தமான வழிவகைகளைக் கண்டறிந்து வருகின்றனர். அரசாங்கம் இந்தப் பிரச்சினையில் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

நிமிஷாவுக்கான கடைசி நிமிட வாய்ப்புகள் என்ன? - ஏமன் நாட்டில் ஷாரியா சட்டமே அமலில் உள்ளது. அந்தச் சட்டத்தின்படி பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் பணத்தைப் பெற்றுக் கொண்டு மன்னிப்பு வழங்கினால் உச்ச நீதிமன்ற மரண தண்டனை தள்ளுபடியாகிவிடும் என்று சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர். இவ்வாறாக ரத்ததுக்கு பணம் பெறுவதை ‘தியா’ ரொக்கம் (diya money) என்று ஏமன் மக்கள் கூறுகின்றனர்.

ஆனால், ஏமனில் நிலவும் அரசியல் நிச்சயமற்ற சூழலால் இந்தப் பேச்சுவார்த்தையில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மஹ்தி குடும்பத்தினருடன் நிமிஷாவின் குடும்பத்தினர் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு கெடுபிடிகள் நிலவுகின்றன என்று விவரமறிந்தவர்கள் கூறுகின்றனர்.

ஹவுத்திக்கள் பிடியில் ஏமன்: ஏமன் நாட்டின் அதிகாரபூர்வப் பெயர் ஏமன் குடியரசு. தென் மேற்கு ஆசியாவில் உள்ள ஓர் அரபு நாடு இது. அரேபிய தீபகற்பத்தின் இரண்டாவது மிகப் பெரிய நாடு. (முதலாவது - சவுதி அரேபியா). வடக்கே சவுதி அரேபியா, தெற்கே அரபிக் கடல், மேற்கே செங்கடல், கிழக்கே ஓமன் என்று இந்த நாட்டின் எல்லைகள் வரையறுக்கப்பட்டுள்ளன. சனா என்பது ஏமன் நாட்டின் தலைநகர். ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் ஆசியா ஆகியவை சந்திக்கும் இடமாக ஏமன் உள்ளது.

ஏமனில் நடைபெறும் கலவரங்களுக்கு முக்கியக் காரணம் வேறு இரண்டு நாடுகளுக்குள் உண்டான பகைமை என்றும் கூறலாம். அவை சவுதி அரேபியா, ஈரான். கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் ஏமன் தலைநகர் சனாவை ஹவுத்தி கிளிர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது. 2017-ல் ஏமன் அதிபர் கொல்லப்பட்டு ஹவுத்திகள் கையில் ஆட்சி அதிகாரம் சென்றது. அன்று தொட்டு எதற்கெடுத்தாலும் உள்நாட்டுக் கலவரங்களில் சிக்கியிருக்கும் ஏமனில், ஓர் அமைதிப் பேச்சுவார்த்தையை சுமுகமாக முடிப்பதென்பது மிகப் பெரிய சவால் ஆகும்.

இத்தனை கலவரங்கள், சர்வதேச சிக்கல்களுக்கு இடையே ஒரு தாயின் பாசப் போராட்டம் வெற்றி பெறுமா என்பதற்கான காலக்கெடு வெறும் 30 நாட்கள்தான். அந்தப் போராட்டம் என்னவாகும் என்பது விரைவில் தெரிய வரும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்