“இந்தியாவின் பெருமிதம்...” - குகேஷ் சந்திப்புக்குப் பின் பிரதமர் மோடி நெகிழ்ச்சிப் பகிர்வு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: உலக செஸ் சாம்பியன் டி.குகேஷின் தன்னம்பிக்கை உண்மையிலேயே ஊக்கமளிக்கிறது என பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த டி.குகேஷ் தனது பெற்றோருடன் சென்று பிரதமர் நரேந்திர மோடியை இன்று (டிச.28) சந்தித்தார். இந்த சந்திப்பின்போது, பிரதமர் மோடி, குகேஷ் மற்றும் அவரது பெற்றோருடன் உரையாடினார். இந்தச் சந்திப்பு குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவுகளை வெளியிட்ட பிரதமர் நரேந்திர மோடி, "செஸ் சாம்பியனும், இந்தியாவின் பெருமிதமுமான டி.குகேஷுடன் சிறந்த சந்திப்பு நடந்தது.

சில வருடங்களாக நான் அவருடன் நெருக்கமாகப் பழகி வருகிறேன். அவருடைய உறுதியும் அர்ப்பணிப்பும்தான் என்னை மிகவும் கவர்ந்தது. அவரது நம்பிக்கை உண்மையிலேயே ஊக்கமளிக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு அவர், உலகின் இளம் வயது செஸ் சாம்பியன் ஆவேன் என கூறிய வீடியோவைப் பார்த்தது எனக்கு நினைவிருக்கிறது. அவரது சொந்த முயற்சியால் இது இப்போது உண்மையாகிவிட்டது.

நம்பிக்கையுடன், அமைதி மற்றும் பணிவு ஆகியவற்றையும் அவர் கொண்டுள்ளார். வெற்றி பெற்றதும், கடினமாக உழைத்துப் பெற்ற இந்த வெற்றியை எப்படி அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்வது என்பதை முழுமையாகப் புரிந்துகொண்டு அவர் செயல்பட்டுள்ளார். யோகா மற்றும் தியானம் எவ்வாறு மனிதர்களை உருமாற்றும் திறனைக் கொண்டுள்ளது என்பதைச் சுற்றியே இன்றைய எங்கள் உரையாடல் இருந்தது.

ஒவ்வொரு தடகள வீரரின் வெற்றியிலும் அவர்களின் பெற்றோர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். குகேஷுக்கு ஆதரவாக இருந்ததற்காக குகேஷின் பெற்றோரைப் பாராட்டினேன். அவர்களின் அர்ப்பணிப்பு, விளையாட்டை ஒரு தொழிலாகத் தொடர கனவு காணும் எண்ணற்ற இளம் ஆர்வலர்களின் பெற்றோரை ஊக்குவிக்கும். குகேஷிடமிருந்து அவர் வென்ற ஆட்டத்தின் அசல் சதுரங்கப் பலகையைப் பெற்றதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். அவர் மற்றும் டிங் லிரன் இருவரும் கையெழுத்திட்ட அந்த சதுரங்கப் பலகை, ஒரு நேசத்துக்குரிய நினைவுப் பரிசு" என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமருடனான இந்தச் சந்திப்பு பெருமை வாய்ந்தது என்றும், வாழ்வில் எப்போதும் நினைவில் நிற்கக் கூடியது என்றும் குகேஷ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "இன்று நமது பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தது உண்மையிலேயே பெருமைக்குரியது. இது என் வாழ்வின் மிகவும் நேசத்துக்குரிய தருணங்களில் ஒன்றாகும்.

பிரதமரின் பணிச்சுமைக்கு இடையிலும் என்னைச் சந்திக்க நேரம் ஒதுக்கியதற்காக அவருக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆதரவும் ஊக்கமும் என்னைப் போன்ற இளைஞர்களுக்கு ஓர் ஊக்கியாகவும், உத்வேகத்தின் மிகப் பெரிய ஆதாரமாகவும் இருக்கிறது. அவரது தாராள மனப்பான்மை மற்றும் சிந்தனையின் மூலம் நான் உண்மையிலேயே பணிவை உணர்கிறேன்.

எனது விளையாட்டைப் பற்றியும், உலக செஸ் சாம்பியன்ஷிப் பற்றியும் பிரதமர் விவரிக்கத் தொடங்கியபோது ஆச்சரியத்தால் என்னால் முழுவதுமாக பேச முடியாமல் போனது! இது உண்மையிலேயே மிகப் பெரிய விஷயம்.

பிரதமருக்கு எனது நன்றியை முழுமையாக வெளிப்படுத்த வார்த்தைகள் கிடைக்கவில்லை. உங்களின் ஊக்கமளிக்கும் வார்த்தைகள் என்னைப் புதுப்பிக்கப்பட்ட ஆற்றலுடனும் ஊக்கத்துடனும் நிரப்பியுள்ளன. நம்பமுடியாத முன்மாதிரியாக இருப்பதற்காகவும், என்னைப் போன்ற லட்சக்கணக்கான இந்தியர்களை ஊக்கப்படுத்தியதற்காகவும் மீண்டும் ஒருமுறை நன்றி ஐயா" என தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் சீன வீரர் டிங் லிரெனை வீழ்த்தி, தமிழகத்தைச் சேர்ந்த இந்திய வீரர் குகேஷ் சாம்பியன் பட்டம் வென்றார். இதன்மூலம் 18 வயதேயான குகேஷ் இள வயது உலக செஸ் சாம்பியன் என்ற சாதனையை படைத்தார். அவருக்கு ரூ.11 கோடி பரிசு தொகை வழங்கப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

மேலும்