2004 தேர்தலில் எதிர்பாராமல் கிடைத்த வெற்றிக்குப் பிறகு மன்மோகன் சிங் பிரதமரானது எப்படி?

By செய்திப்பிரிவு

கடந்த 2004-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் ஆளும் பாஜகவின், ‘இந்தியா ஒளிர்கிறது’ என்ற பிரச்சாரம் ஓங்கி ஒலித்தது. இதில் அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையிலான பாஜக அரசு ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளும் என கருத்து கணிப்புகளும் அரசியல் ஆய்வாளர்களும் தெரிவித்தனர். ஆனால், சோனியா காந்தி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்று அனைவருக்கும் அதிர்ச்சி அளித்தது.

பல்வேறு மாநில கட்சிகளை சேர்த்துக் கொண்டு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி என்ற பெயரில் களமிறங்கிய காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தது. இதையடுத்து, அப்போதைய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பிரதமர் ஆவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இத்தாலியில் பிறந்த சோனியா பிரதமராகக் கூடாது என எதிர்ப்பு கிளம்பியது. குறிப்பாக பாஜகவைச் சேர்ந்த சுஷ்மா ஸ்வராஜ், உமா பாரதி உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். காங்கிரஸ் கட்சிக்குள்ளும் அவருக்கு எதிர்ப்பு கிளம்பியது.

ஏற்கெனவே, பாட்டி இந்திரா, தந்தை ராஜீவ் காந்தி ஆகிய இருவரும் படுகொலை செய்யப்பட்டதை கருத்தில் கொண்டு, பிரதமர் பதவியை ஏற்க வேண்டாம் என ராகுல் காந்தியும் தாய் சோனியாவை கேட்டுக் கொண்டார். இதையடுத்து, சோனியா காந்தி பிரதமர் பதவியை ஏற்க மறுத்துவிட்டார். அதன் பிறகுதான் மன்மோகன் சிங்குக்கு பிரதமராகும் வாய்ப்பு கிடைத்தது. மென்மையாக பேசுபவர், மக்கள் ஆதரவு இல்லாதவர் என்றாலும் பொருளாதார நிபுணராக விளங்கியதால் அவருக்கு பிரதமர் பதவி தானாக தேடி வந்தது.

நிதியமைச்சர் ஆனது எப்படி? - கடந்த 1991-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார். அந்த ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றது. நரசிம்ம ராவ் பிரதமரானார்.

இவர் பதவியேற்பதற்கு 2 நாட்களுக்கு முன்பு, கேபினட் செயலாளராக இருந்த நரேஷ் சந்திரா, நரசிம்ம ராவுக்கு எழுதிய கடிதத்தில், “நாட்டின் நிதிநிலை மிகவும் மோசமாக இருக்கிறது” என குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து, திறமையான ஒருவரை நிதி அமைச்சர் பொறுப்புக்கு பரிந்துரை செய்யுமாறு தனது ஆலோசகரான பி.சி.அலெக்சாண்டரை கேட்டுக் கொண்டார்.

அவர், ரிசர்வ் வங்கியின் ஆளுநராகவும் லண்டன் ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸின் இயக்குநராகவும் பதவி வகித்த குஜராத்தைச் சேர்ந்த இந்திரபிரசாத் கோர்தன்பாய் படேலை பரிந்துரை செய்தார். ஆனால், தனது உடல்நலம் குன்றிய தாயை கவனிக்க வேண்டியிருப்பதாகக் கூறி வாய்ப்பை மறுத்தார் படேல்.

இதையடுத்து, ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநரான மன்மோகன் சிங்கின் பெயரை அலெக்சாண்டர் பரிந்துரை செய்தார். இதை ராவ் ஏற்றுக் கொண்டார். இந்த செய்தியைக் கேட்ட மன்மோகன் சிங் வியப்படைந்தார். அன்றுதான் அவருடைய அரசியல் வாழ்க்கை தொடங்கியது. கடைசி வரை மக்களை சந்திக்காமலேயே மாநிலங்களவை உறுப்பினராகவே அவர் தொடர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

7 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்