காஷ்மீர் மக்களின் 20 ஆண்டு கால கனவை நனவாக்கும் திட்டம்: குமரியில் இருந்து கடைக்கோடி வரை ரயிலில் பயணிக்கும் காலம் கனிந்தது 

By எம். வேல்சங்கர்

இமயமலையில் அமைந்துள்ள குன்றுகள், பள்ளத்தாக்குகள், ஆறுகள் ஆகியவற்றுக்கு மத்தியில் 272 கி.மீ. தொலைவுக்கான ரயில் பாதை அமைக்கும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இவற்றில், மீதமுள்ள 17 கி.மீ. ரயில் பாதை அமைக்கும் பணி ஓரிரு மாதங்களில் நிறைவடைய உள்ளது. இதன்மூலம்,காஷ்மீர் மக்களுக்கு விரைவில் தடையின்றி நேரடி ரயில் சேவை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்பாதையில், செனாப் ரயில் பாலம் மிகப்பெரிய சாதனை மைல் கல்லாக அமைந்துள்ளது. நாட்டின் வடகோடியில் அமைந்துள்ள ஜம்மு காஷ்மீர் மாநிலம் மற்றும் லடாக் யூனியன் பிரதேசத்தில் உலகின் மிக உயர்ந்த பனிமலையான இமயமலை மட்டுமின்றி, சிறிய, பெரிய அளவிலான மலைகள், ஏற்ற, இறக்கத்துடன் கூடிய பள்ளத்தாக்குகள், ஆறுகள் குறுக்கும் நெடுக்குமாக செல்கின்றன. இதனால் இங்கு மக்களுக்கு போக்குவரத்து வசதிகளை செய்து தருவதே சவாலான காரியமாக உள்ளது.

இந்த நிலையை மாற்றி, ஜம்மு - காஷ்மீர் மக்களுக்கு ரயில் போக்குவரத்து ஏற்படுத்தும் வகையில், உதம்பூர்- ஸ்ரீநகர்- பாரமுல்லா ரயில் இணைப்பு குறித்து கடந்த 1999-ம் ஆண்டு திட்டமிடப்பட்டது. இது, தேசிய திட்டமாக 2002-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்துக்காக, ரூ.37,012 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த திட்டம் பல்வேறு கட்டமாக பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இத்திட்டத்தில், புதிய ரயில் பாதை அமைக்கும் பணி இறுதி கட்டத்தை நெருங்குகிறது. 272 கி.மீ தொலைவில் ரயில் பாதை அமைக்கும் பணியில், 17 கி.மீ. தான் மீதமுள்ளது. இதன்மூலம், ஒட்டுமொத்தமாக 327 கி.மீ தொலைவுக்கான ரயில் பாதை அமைக்கும் பணி நிறைவடைய உள்ளது.

இமயமலையில் சவால் நிறைந்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இந்த ரயில் பாதையில் 119 கி.மீ. நீளத்துக்கு மலைகளை குடைந்து 38 இடங்களில் சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், ஒரு சுரங்கப்பாதை மட்டும் 12.75 கி.மீ. நீளம் கொண்டது. பள்ளத்தாக்குகள் வரும் பகுதியில் 37 இடங்களில் பாலங்கள் கட்டப்பட்டுள்ளன.

ஜம்மு - உதம்பூர் வரை 55 கி.மீ. மார்க்கம் கடந்த 2005-ம் ஆண்டு நிறைவடைந்தது. உதம்பூர்- ஸ்ரீநகர்- பாரமுல்லா ரயில் இணைப்பு திட்டத்தில், காசிகுண்டு- பாரமுல்லா மார்க்கத்தில் ரயில் பாதை அமைக்கும் பணி 3 கட்டமாக நடைபெற்று முடிந்தது. இதைத் தொடர்ந்து, பெனிகால் - காசிகுண்டு மார்க்கம், உதம்பூர் - காத்ரா மார்க்கத்தில் அடுத்தடுத்து ரயில் பாதை அமைக்கும் பணிகள் நிறைவடைந்தன. 2005-ம் ஆண்டு முதல் ரயில்கள் குறிப்பிட்ட பகுதிகளுக்குள் இயக்கப்படுகின்றன. இதுதவிர, காத்ரா - பெனிகால் மார்க்கத்தில் 111 கி.மீ.தொலைவுக்கு பாதைகள் அமைக்கும் பணி நடைபெறுகிறது. இமயமலையின் புவியியல் அமைப்பின் சவால்களை கடந்து, இதுவரை 94 கி.மீ. ரயில் பாதை பணிகள் நிறைவடைந்துள்ளன. இன்னும் 17 கி.மீ.தான் அமைக்க வேண்டும். இப்பணி தீவிரமாக நடைபெறுகிறது. இந்த மார்க்கத்தில் 35 சுரங்கப்பாதைகளும், 37 பாலங்களும் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் செனாப், அஞ்சி உட்பட 4 பாலங்கள் இடம்பெற்று உள்ளன.

கேபிள்களால் நிலைநிறுத்தப்பட்டுள்ள அஞ்சி ரயில்வே பாலம்.

செனாப் பாலம்: உலகிலேயே அதிக உயரம் கொண்ட ரயில் பாலமாக செனாப் பாலம் உருவாகியுள்ளது. இது, காஷ்மீர் மாநிலம் ரியாசி மாவட்டத்தில், ரியாசி - சங்கல்தான் இடையே இமயமலையின் இரு பகுதிகளுக்கு இடையே செனாப் ஆற்றுக்கு மேலே இரும்பு கம்பிகளாலான பிரம்மாண்ட மேம்பாலம் ரூ.1,486 கோடி மதிப்பில் நிலைநிறுவப்பட்டுள்ளது. இந்த பாலம் கடல் மட்டத்தில் இருந்து 16 ஆயிரம் அடி உயரத்திலும், செனாப் ஆற்று மட்டத்தில் இருந்து 359 மீட்டர் உயரத்திலும் அமைந்துள்ளது. அதாவது, பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் உள்ள ஈபிள் டவரைவிட 35 மீட்டர் கூடுதல் உயரம் கொண்டது. 17 ராட்சத தூண்கள் மீது 1,315 மீட்டர் நீளம் மற்றும் 15.2 மீட்டர் அகலத்தில் டெக்லா என்ற நவீன தொழில்நுட்பத்தில் கட்டமைக்கப்பட்டுள்ள இந்த பாலம் நிறைய சிறப்பம்சத்தை தன்னகத்தே கொண்டு கம்பீரமாக காட்சி அளிக்கிறது. உலகின் 8-வது அதிசயமாக இது விளங்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுதவிர, அஞ்சி பாலம், காஷ்மீர் மாநிலம் ரியாசி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது, இந்திய ரயில்வேயில் கேபிள் மூலம் நிலைநிறுத்தப்பட்ட பாலம் என்று அழைக்கப்படுகிறது. மேலும், இது, உதம்பூர்- கத்ரா - ஸ்ரீநகர் - பாரமுல்லா ரயில் இணைப்பு திட்டத்தில் ஒரு பகுதியாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜம்மு - உதம்பூர் - காத்ரா - ஸ்ரீநகர் - காசிகுண்டு - பாரமுல்லா ரயில் பாதை முழுவதுமே பாகிஸ்தான் எல்லைக்கு அருகிலேயே கீழ் இருந்து மேல் நோக்கி செல்கிறது. பாரமுல்லாவில் இருந்து பாகிஸ்தான் எல்லை 45 கி.மீ. தூரத்தில்தான் இருக்கிறது. சில இடங்களில் அதைவிட தூரம் குறைவாகவே உள்ளது.

இந்திய ரயில்வேயின் மகத்தான சாதனையால், 20 ஆண்டுகால கனவு திட்டம் தற்போது மெல்ல மெல்ல நனவாகி கொண்டிருக்கிறது. வரும் ஆண்டில் மீதமுள்ள ரயில் பாதை அமைக்கும் பணிகள் நிறைவடைந்து, காஷ்மீர் மக்களுக்கும் தங்கு தடையில்லாத ரயில் போக்குவரத்து கிடைக்கும் என்று நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இப்பணிகள் முடிந்து, டெல்லி முதல் ஸ்ரீநகருக்கு நேரடி ரயில் சேவையும், கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நேரடி ரயில் சேவையும் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலமாக, அங்கு பொருளாதாரம் வளர்ச்சி பெறும் என்ற நம்பிக்கையும் ஏற்பட்டுள்ளது.

- ஜம்மு காஷ்மீரில் இருந்து மு.வேல்சங்கர்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்