அம்பேத்கர் குறித்த அமித் ஷாவின் கருத்துக்கு எதிராக நாடு தழுவிய தொடர் போராட்டம் - காங்கிரஸ் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: பாபா சாகேப் அம்பேத்கர் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசிய பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை முதல் 3 நாட்களுக்கு நாடு தழுவிய அளவில் நடைபெற உள்ள தொடர் நிகழ்ச்சிகள் குறித்த அறிவிப்பை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக காங்கிரஸ் அமைப்பு பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், காங்கிரஸ் எம்பிக்கள், மத்திய செயற்குழு உறுப்பினர்கள் ஆகியோருக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில், "காங்கிரஸ் எம்பிக்களும், மத்திய செயற்குழு உறுப்பினர்களும் நாளையும் நாளை மறுநாளும் (டிச. 22 மற்றும் 23) தங்கள் தொகுதிகளில் செய்தியாளர் சந்திப்புகளை நடத்த வேண்டும். அதில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் ராஜினாமாவை வலியுறுத்த வேண்டும். டிசம்பர் 24-ம் தேதி அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் காங்கிரஸ் கட்சியினர், அம்பேத்கரின் உருவப் படங்களுக்கு மாலை அணிவித்து 'பாபா சாகேப் அம்பேத்கர் சம்மன் பேரணி' நடத்தி, குடியரசுத் தலைவர் பெயரில் ஒரு மனுவை மாவட்ட ஆட்சியரிடம் வழங்க வேண்டும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் ஊடகப்பிரிவு தலைவர் பவன் கெரா, "2024 நாடாளுமன்றத் தேர்தலில் நரேந்திர மோடியும், அமித் ஷாவும் பொதுமக்களிடம் இருந்து பெற்ற அதிர்ச்சியை அவர்களால் சமாளிக்க முடியவில்லை. 400 எம்பிக்களைத் தாண்டி வெற்றி பெற வேண்டும் என்ற அவர்களின் இலக்கு அரசியலமைப்பை மாற்றும் நோக்கம் கொண்டது என்பதை உணர்ந்து மக்கள் அளித்த தீர்ப்பு, அவர்களிடையே விரக்தியை ஏற்படுத்தியுள்ளது.

அம்பேத்கர் குறித்து அமித் ஷா தெரிவித்த கருத்துக்கள் தவறுதலாக வெளிவரவில்லை. தவறுதலாக வந்திருந்தால் அவர் மன்னிப்புக் கேட்டிருப்பார். ஆனால் இன்று வரை பாஜகவினர், அமித் ஷாவின் அந்தப் பேச்சுக்கு ஆதரவாக கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். இது அவர்களின் உண்மையான நோக்கத்தை காட்டுகிறது.

பாபா சாகேப் அம்பேத்கரை அமித் ஷா அவமதித்ததற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் டிசம்பர் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் நாட்டின் 150 நகரங்களில் காங்கிரஸ் கட்சி செய்தியாளர் சந்திப்புகளை நடத்தவுள்ளது. இந்த செய்தியாளர் சந்திப்புகள் மூலம் அமித் ஷா பதவி விலக வலியுறுத்துவோம். பாபா சாகேப் மற்றும் அரசியல் சாசனத்தின் மீதான தாக்குதல்களுக்கு எதிராக குரல் எழுப்புவோம்.

டிசம்பர் 24-ஆம் தேதி அனைத்து மாவட்டத் தலைநரங்களிலும் காங்கிரஸ் கட்சியினர் பாபா சாகேப் அம்பேத்கரின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து பின்னர், 'பாபா சாகேப் அம்பேத்கர் சம்மன் பேரணி' நடத்தி, குடியரசுத் தலைவர் பெயரில் ஒரு மனுவை மாவட்ட ஆட்சியரிடம் வழங்குவார்கள். அவர் அதை குடியரசுத் தலைவருக்கு அனுப்புவார்.

டிசம்பர் 26, 1924 அன்று பெலகாவியில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் மகாத்மா காந்தி காங்கிரஸின் தலைவரானார். காங்கிரஸ் கட்சி மற்றும் சுதந்திர இயக்கத்தின் திசை இந்த மாநாட்டின் மூலம் தீர்மானிக்கப்பட்டது. இந்த முக்கியமான நாள் 100 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.

இதைக் கருத்தில் கொண்டு டிசம்பர் 26ம் தேதி மத்திய செயற்குழுக் கூட்டம் நடைபெறும். டிசம்பர் 27ம் தேதி, பெலகாவியில் ஒரு பெரிய பேரணி நடைபெறும். அதோடு, காங்கிரஸின் குறுகிய கால மற்றும் நடுத்தர கால செயல் திட்டம் விவாதிக்கப்படும். மகாத்மா காந்திஜி முதல் மல்லிகார்ஜுன கார்கே வரை, காங்கிரஸ் ஒருபோதும் சமரசப் பாதையைத் தேர்ந்தெடுக்கவில்லை. மாறாக, போராட்டப் பாதையைத் தேர்ந்தெடுத்து பல இலக்குகளை அடைந்துள்ளது" என தெரிவித்தார்.

சமீபத்தில், மாநிலங்களவையில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “அம்பேத்கர், அம்பேத்கர் என முழக்கமிடுவது இப்போது ஃபேஷன் ஆகிவிட்டது. இதற்கு பதிலாக, கடவுளின் பெயரை இவ்வளவு முறை உச்சரித்திருந்தால், சொர்க்கத்திலாவது அவர்களுக்கு இடம் கிடைத்திருக்கும். அம்பேத்கர் பெயரை மேலும் 100 முறைகூட உச்சரிக்கட்டும். ஆனால், அவரது உண்மையான உணர்வுகள் குறித்தும் அவர்கள் பேச வேண்டும்” என்று பேசியிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

23 hours ago

மேலும்