அமித் ஷா கிளப்பிய ‘அம்பேத்கர்’ புயல்! - பாஜக-வை நெருக்கும் எதிர்க்கட்சிகள்

By வீரமணி சுந்தரசோழன்

அம்பேத்கர் குறித்து மாநிலங்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியது நாடு தழுவிய அரசியல் சர்ச்சையாகி உள்ளது. அமித் ஷாவை ராஜினாமா செய்யச்சொல்லி எதிர்க்கட்சிகள் கோதாவில் குதிக்க, “நான் அம்பேத்கர் பற்றி பேசியதை காங்கிரஸ் திரித்து விட்டது” என்று சொல்லி இருக்கிறார் அமித் ஷா. அம்பேத்கர் கருத்து இத்தனை அமளிதுமளிகளை ஏற்படுத்துவது ஏன்?

டிசம்பர் 17-ம் தேதி மாநிலங்​களவை​யில் உரையாற்றிய அமித் ஷா, ” அம்பேத்​கர்... அம்பேத்கர் என முழக்​கமிடுவது இப்போது ஒரு ஃபேஷன் ஆகிவிட்​டது. இதற்​குப் பதிலாக கடவுளின் பெயரை இத்தனை முறை உச்சரித்​திருந்​தால் அவர்​களுக்கு சொர்க்​கத்​தில் இடம் கிடைத்​திருக்​கும்” என்று சொன்னது சர்ச்​சையாக வெடித்​தது.

அம்பேத்கர் சர்ச்​சைக்​குள் செல்​வதற்கு முன்பு 2024-ல் வெளியான மக்கள​வைத் தேர்தல் முடிவு​களைப் பார்க்க வேண்​டும். ஏனென்​றால் ‘400 தொகு​திகள் நிச்​ச​யம்’ என களமிறங்கிய பாஜக​வுக்கு, தனிப்​பெரும்​பான்​மைகூட கிடைக்க​வில்லை. இதற்கு காரணங்கள் பல சொல்​லப்​பட்​டாலும், பட்டியலின மக்களின் வாக்​குகள் பாஜக​வுக்கு கிடைக்க​வில்லை என்பது முக்கிய விஷயமாக கோடிடப்​பட்​டது. ஏனென்​றால், முந்தைய மக்கள​வைத் தேர்​தல்​களில் கணிசமான பட்டியலின, பழங்​குடியின வாக்​கு​களைப் பெற்று அமோக வெற்றியை அறுவடை செய்தது பாஜக.

அதனாலேயே பட்டியல் இனத்தை சேர்ந்த ராம்​நாத் கோவிந்த், பழங்​குடி​யினத்தை சேர்ந்த திரவுபதி முர்​முவை அடுத்​தடுத்து ஜனாதிப​தி​களாக்கி அழகு​பார்த்​தது.இந்த சூழலில்​தான் 2024 தேர்​தலில் பாஜக பின்னடைவை சந்தித்​தது. இதற்கு ‘அம்​பேத்கர் உருவாக்கிய அரசி​யலமைப்பு சட்டத்​துக்கு ஆபத்து’ என்ற இண்டியா கூட்​ட​ணி​யின் முழக்கமே முக்கிய காரணம். இதனால் ராமர் கோயில் எழுப்​பப்​பட்ட அயோத்தி தொகு​தி​யிலேயே பாஜக தோற்​றது. பொது தொகு​தியான அயோத்​தி​யில் வென்றது சமாஜ்​வாதி கட்சி​யின் பட்டியலின வேட்​பாளர்.

உத்தரப்​பிரதேசம், மகாராஷ்டிரா, ஹரியானா போன்ற பாஜக ஆதிக்கம் நிறைந்த மாநிலங்​களில் இண்டியா கூட்டணி அதிகம் வென்​றது. அதற்கு காரண​மாக​வும் பட்டியலின வாக்​குகளே அமைந்தன. இதனை ஆர்எஸ்​எஸ்​-சும் தனது ஆய்வு மூலமாக பாஜக-வுக்கு அறிவுறுத்​தி​யது. அதன்​பின்னர் சுதா​ரித்த பாஜக, ஹரியா​னா​வில் குமாரி சல்ஜா விவகாரம் மூலம் பட்டியலின வாக்​குகளை கவர்ந்து வெற்றி​பெற்​றது. அதேபோல மகாராஷ்டிரா தேர்​தலிலும் பட்டியலின வாக்​குகளை உடைத்து வெற்றி​பெற்​றது.

இப்படி பாஜக​வின் தேர்தல் வெற்றி தோல்விகளை நிர்​ண​யிக்​கும் வலிமைமிக்​கதாக பட்டியலின சமூகத்து வாக்​குகள் மாறி​யிருக்​கும் சூழலில், அம்பேத்கர் குறித்து அமித் ஷா பேசியது சர்ச்​சை​யாகி​யிருக்​கிறது. இது ஹரியானா, மகாராஷ்டிர தேர்தல் தோல்வி​களால் மனமுடைந்து போயிருக்​கும் காங்​கிரஸ் கட்சிக்கு பெரிய பூஸ்ட் ஆக மாறி​யிருக்​கிறது. அதேபோல, நாடு முழு​வதும் உள்ள ஒட்டுமொத்த எதிர்க்​கட்​சிகளும் இந்த விவகாரத்தை வலுவாக கையில் எடுத்​துள்ளன. ‘அம்​பேத்​கர்’ விஷயத்தை தேசம் முழு​வதும் பேசுபொருளாக​வும், போராட்ட வடிவ​மாக​வும் மாற்று​வோம் என்கிறது காங்​கிரஸ்.

இதையெல்​லாம் சமாளிக்க, “காங்​கிரஸ்​தான் அம்பேத்கரை தேர்​தலில் தோற்​கடித்​தது, அவருக்கு பாரத ரத்னா விருது கொடுக்க மறுத்​தது, அவரின் படத்​துக்கு நாடாளு​மன்​றத்​தில் இடமளிக்க மறுத்​தது” என பிரதமர் மோடி காங்​கிரஸின் பாவங்களை பட்டியலிட்​டுள்​ளார்.

அமித் ஷாவும் அம்பேத்கர் விஷயத்​தில் விரிவான விளக்கம் கொடுத்​துள்ளார். ஆனபோதும், 2024 மக்கள​வைத் தேர்​தலில் பாஜக​வுக்கு பின்னடைவை உருவாக்கிய பட்டியலின வாக்​குகளை மீட்​டெடுக்க பல்வேறு ‘சோஷியல் இன்ஜினியரிங்’ வேலைகளை செய்​து​வரும் பாஜக​வுக்கு, அமித் ஷாவின் பேச்சு இக்கட்டை உண்டாக்கி இருக்​கிறது.

தேசிய அளவில் ஓபிசி வாக்கு வங்கிக்கு இணையாக பட்டியலின, பழங்​குடியின வாக்​குகள் தேர்தல் நிர்ணய ஆற்றலாக மாறி​யுள்​ளது. இதற்காக பிராந்திய அளவிலும், தேசிய அளவிலும் பல்வேறு கட்சிகள் உருவாகி​யுள்ளன. இந்த நிலை​யில் தங்கள் வாக்கு வங்கியை குறி​வைத்து பாஜக​வும், காங்​கிரசும் முட்​டிமோத ஆரம்​பித்து​விட்டன. தங்களது மாநிலங்​களில் பாஜகவை முதன்மை எதிரியாக கொண்ட சமாஜ்​வாதி, ஆர்ஜேடி, ஆம் ஆத்மி, திரிண​மூல் காங்​கிரஸ் கட்சிகள் இதைவைத்து அரசியல் சதுரங்க விளை​யாட்டை ஆரம்​பித்து​விட்டன.

விரை​வில் வரவிருக்​கும் டெல்லி, பிஹார் சட்டப்​பேரவை தேர்​தல்​களில் பாஜக​வுக்கு கிலி கொடுக்க இந்த ‘அம்​பேத்கர் அஸ்திரம்’ பயன்​படும் என்பது இவர்​களின் கணக்கு. தமிழகத்​தி​லும் பட்டியலின வாக்​குகளை குறி​வைத்து பாஜக தீவிரமாக இயங்கி வருகிறது, அதனால்​தான் எல்.​முருகன் மத்திய அமைச்​ச​ராக்​கப்​பட்​டார்.

இந்த சூழலில் அம்பேத்​கருக்கு எதிரான அமித் ஷாவின் கருத்​தால் தமிழக பாஜக-​வும் கலக்​கத்​தில்​தான் உள்ளது. அதனால் தான் தமிழக பாஜக தலைவர்​கள் இந்த ​விஷ​யத்​துக்கு தீ​விரமாக எ​திர்​வினை​யாற்றிக் ​கொண்​டிருக்​கிறார்​கள். அரசி​யலமைப்பை உரு​வாக்கிய சிற்பி அம்​பேத்​கர் குறித்த ​விமர்​சனம், பட்​டியல் சமூகம் ​தாண்டி பொது சமூகத்​தி​லும் சலசலப்பை ஏற்​படுத்தி உள்​ளது. இதை ​பாஜக எப்படி ச​மாளிக்​கப்​போகிறது என ​பார்ப்​போம்​?

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்