புதுடெல்லி: அம்பேத்கர் குறித்து மத்திய அமைச்சர் அமித்ஷா பேசியது தொடர்பாக நாடாளுமன்ற வளாகத்தில் ஆளும்கட்சி, எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் கீழே விழுந்து காயமடைந்த 2 பாஜக எம்.பி.க்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்திதான் அவர்களை தள்ளிவிட்டதாக பாஜக குற்றம்சாட்டிஉள்ளது.
மாநிலங்களவையில் அம்பேத்கர் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கடந்த 17-ம் தேதி பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் பல்வேறு கட்சி தலைவர்களும் அமித் ஷாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் இந்த விவகாரம் நேற்று எதிரொலித்தது. நீல நிற உடை அணிந்த இண்டியா கூட்டணி எம்.பி.க்கள், ‘‘உள்துறை அமைச்சர் அமித் ஷா ராஜினாமா செய்ய வேண்டும்’’ என கோஷமிட்டபடி அம்பேத்கர் சிலையில் இருந்து, நாடாளுமன்ற நுழைவுவாயில் நோக்கி பேரணி சென்றனர். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, எம்.பி.க்கள் பிரியங்கா காந்தி, கனிமொழி உள்ளிட்ட இண்டியா கூட்டணி எம்.பி.க்கள் கலந்து கொண்டனர்.
இதற்கு போட்டியாக, பாஜக எம்.பி.க்களும் போராட்டம் நடத்திகோஷமிட்டனர். சிலர் நாடாளுமன்ற நுழைவுவாயிலில் நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் நுழைய முயன்றனர். இதனால், இருதரப்பினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. நாடாளு மன்றத்துக்குள் நுழைய முயன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியை பாஜக எம்.பி.க்கள் தடுத்தனர். அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளு காரணமாக, ஒடிசாவை சேர்ந்த பாஜக எம்.பி. பிரதாப் சந்திர சாரங்கி (69), உத்தரபிரதேச பாஜக எம்.பி. முகேஷ் ராஜ்புத் ஆகியோர் கீழே விழுந்தனர். காயமடைந்த சாரங்கியை ராகுல் காந்தி பார்த்துவிட்டு திரும்பி சென்றார்.
சாரங்கி எம்.பி.யின் நெற்றியில் காயம் ஏற்பட்டு ரத்தம் கசிந்தது. அருகே இருந்த எம்.பி.க்கள் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, ஆம்புலன்ஸ் மூலம் ராம் மனோகர் லோகியா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். ‘‘சாரங்கியின் தலையில் ஆழமான வெட்டுக் காயம் ஏற்பட்டுள்ளது. அதில் இருந்து ரத்தம் அதிக அளவில் வெளியேறியது. காயம்பட்ட இடத்தில் தையல் போடப்பட்டது. எம்.பி. முகேஷ் ராஜ்புத்துக்கும் தலையில் காயம் ஏற்பட்டது. இருவருக்கும் தலையில் சி.டி. ஸ்கேன், இதய பரிசோதனை செய்யப்பட்டது’’ என்று மருத்துவர் அஜய் சுக்லா தெரிவித்துள்ளார்.
» தமிழகத்தில் மருத்துவ கழிவுகள் கொட்டுவதை வேடிக்கை பார்ப்பதா?
» ராகுல் தரக்குறைவாக நடந்துகொண்டார்: நாகாலாந்து பெண் எம்.பி. புகார்
சம்பவம் குறித்து சாரங்கி கூறியபோது, ‘‘நாடாளுமன்ற நுழைவுவாயில் படிக்கட்டுகளுக்கு அருகே நின்று கொண்டிருந்தேன். அப்போது, ராகுல் காந்தி ஒரு எம்.பி.யை தள்ளினார். அவர் என் மீது விழுந்ததால், தடுமாறி கீழே விழுந்து காயமடைந்தேன்” என்றார். ராகுல் காந்தி கூறியபோது, ‘‘நாடாளுமன்ற நுழைவுவாயில் வழியாக உள்ளே செல்ல முயன்றேன். பாஜக எம்.பி.க்கள் என்னை தடுத்து, என்னை தள்ளி, மிரட்ட முயன்றனர். காங்கிரஸ் எம்.பி.க்களையும் தடுத்தனர்’’ என்றார்.
பாஜக எம்.பி. கிரிராஜ் சிங் கூறும்போது, ‘‘அவையில் அராஜகத்தை பரப்ப ராகுல் காந்தி விரும்புகிறார். சாரங்கிக்கு நடந்த சம்பவம் கண்டனத்துக்குரியது. அவர் தள்ளிவிடப்பட்டார். இதனால் மயங்கி விழுந்தார். இந்த செயல் போக்கிரித்தனமானது’’ என்றார். பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே கூறும்போது, ‘‘வயதான எம்.பி.யை ராகுல் காந்தி தள்ளிவிட்டுள்ளார். ரவுடிகள் போல சிலர் நடந்துகொள்வது தலைகுனிவை ஏற்படுத்துகிறது’’ என்றார்.
காங்கிரஸுக்கு எதிராக பாஜக உறுப்பினர்கள் கோஷம் எழுப்பினர். காயமடைந்த சாரங்கி, ராஜ்புத் ஆகியோரிடம் பிரதமர் மோடி நலம் விசாரித்தார். மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், பிரகலாத் ஜோஷி ஆகியோர் சாரங்கியை மருத்துவமனையில் சந்தித்தனர்.
காவல் நிலையத்தில் பரஸ்பரம் புகார்: நாடாளுமன்ற நுழைவுவாயிலில் தே.ஜ கூட்டணி எம்.பி.க்கள் - இண்டியா கூட்டணி எம்.பி.க்கள் இடையே நேற்று நடைபெற்ற தள்ளுமுள்ளு சம்பவத்தில் பாஜக எம்.பி.க்கள் 2 பேர் காயமடைந்ததாக நாடாளுமன்ற சாலையில் உள்ள காவல் நிலையத்தில் பாஜக எம்.பிக்கள் அனுராக் தாக்கூர், பன்சூரி சுவராஜ் ஆகியோர் புகார் கொடுத்தனர். அவர்களுடன் தெலுங்கு தேசம் எம்.பி. ஒருவரும் சென்றார்.
பின்னர், அதே காவல் நிலையத்தில் காங்கிரஸ் எம்.பி.க்கள் திக்விஜய் சிங், முகுல் வாஸ்னிக், ராஜீவ் சுக்லா மற்றும் பிரமோத் திவாரி ஆகியோர் ஒரு புகார் கொடுத்தனர். அதில், ‘காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவிடம் (84), பாஜக எம்.பி.க்கள் அத்துமீறி நடந்து அவரை தள்ளிவிட்டனர்’ என்று கூறியிருந்தனர். இந்த 2 புகார்களையும் ஆய்வு செய்து வருவதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கிடையே, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவை சந்தித்து காங்கிரஸ் எம்.பி.க்கள் புகார் கொடுத்தனர். அதில், ‘நாடாளுமன்றத்துக்குள் நுழைய விடாமல் ராகுல் காந்தியை பாஜக எம்.பி.க்கள் தடுத்தனர்’ என்று கூறியுள்ளனர். சபாநாயகருக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அனுப்பிய கடிதத்தில், ‘என்னை பாஜக எம்.பி.க்கள் தள்ளிவிட்டதால், நிலைதடுமாறி கீழே அமர்ந்தேன். ஏற்கெனவே அறுவை சிகிச்சை செய்யப்பட்ட எனது கால் முட்டியில் காயம் ஏற்பட்டது. இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும்’ என்று கூறியுள்ளார். தள்ளுமுள்ளு, மோதல் சம்பவங்களால் நாடாளுமன்ற வளாகம் பதற்றத்துடன் காணப்பட்டது. இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.
முக்கிய செய்திகள்
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago