புதுடெல்லி: சட்ட மேதை அம்பேத்கரை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவமதித்ததாக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதையடுத்து 2 அவைகளும் நாள் முழுவதும் தள்ளிவைக்கப்பட்டன. அம்பேத்கர் குறித்து அமைச்சர் அமித் ஷா பேசியதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவித்தன.
அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, மாநிலங்களவையில் கடந்த செவ்வாய்க்கிழமை விவாதம் நடைபெற்றது. விவாதத்தின் முடிவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசும்போது, ‘அம்பேத்கர்.. அம்பேத்கர்.. அம்பேத்கர்’ என முழக்கமிடுவது இப்போது ஃபேஷன் ஆகிவிட்டது. இதற்கு பதிலாக கடவுளின் பெயரை இவ்வளவு முறை உச்சரித்திருந்தால், சொர்க்கத்தில் அவர்களுக்கு இடம் கிடைத்திருக்கும். அம்பேத்கரின் பெயரை காங்கிரஸ் எடுத்துக்கொள்வதில் பாஜக மகிழ்ச்சியடைகிறது. ஆனால் அவர் மீதான உண்மையான உணர்வுகள் குறித்தும் காங்கிரஸ் பேச வேண்டும்” என்றார்.
இந்நிலையில் அம்பேத்கர் குறித்த மத்திய அமைச்சர் அமித் ஷாவின் பேச்சுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றன. இதுகுறித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எக்ஸ் தளத்தில் கூறும்போது, “மனுஸ்மிருதியை நம்புவோருக்கு அம்பேத்கருடன் நிச்சயம் பிரச்சினை இருக்கும்” என்று பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில், அம்பேத்கரை மத்திய அமைச்சர் அமித் ஷா அவமதித்துவிட்டதாக கூறி, நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் பல்வேறு கட்சிகளின் உறுப்பினர்கள் அம்பேத்கரின் புகைப்படத்தை கையில் ஏந்தி போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில் நேற்று காலை மக்களவை தொடங்கியபோது, “ஜெய் பீம், ஜெய் பீம்” என்று எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அவையில் முழக்கமிட்டனர். இதனால் பிற்பகல் 2 மணிவரை தள்ளிவைக்கப்படுவதாக அவைத் தலைவர் அறிவித்தார். அதன் பிறகும் அமளி தொடரவே அவையை நாள் முழுவதும் மக்களவை சபாநாயகர் தள்ளிவைத்தார்.
இதேபோன்று மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். அப்போது அவையில், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் தேசியத் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே, அம்பேத்கரின் புகைப்படத்தை எடுத்து உயர்த்திக் காட்டினார். இதையடுத்து அவையில் கூச்சலும், குழப்பமும் நிலவியது. இதைத் தொடர்ந்து அவையை பிற்பகல் 2 மணி வரை மாநிலங்களவைத் தலைவர் ஜகதீப் தன்கர் தள்ளிவைத்தார். பிற்பகல் 2 மணிக்கு அவை கூடியபோது, அமளி தொடர்ந்ததால் அவை நாள் முழுவதும் தள்ளிவைக்கப்பட்டது.
இதற்கிடையே, அமித் ஷா செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: அம்பேத்கர் குறித்த பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்கும் காங்கிரஸ் தலைவர், என்னை ராஜினாமா செய்யசொல்கிறார். பட்டியலின பிரிவைச் சேர்ந்தவராக இருக்கும் காங்கிரஸ் தலைவர் கார்கே, காங்கிரஸ் கட்சியின் மோசமான இந்த முயற்சிக்கு ஆதரவு தெரிவிக்க கூடாது.
நான் ராஜினாமா செய்தாலும், அடுத்த 15 ஆண்டுகளுக்கு நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சியாகத்தான் தொடர வேண்டியிருக்கும். மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் அழுத்தம் காரணமாகவே, கார்கே இவ்வாறு பேசி வருகிறார். ராகுல் காந்தியின் அழுத்தத்துக்கு நீங்களும் (கார்கே) பணிந்தது எனக்கு வருத்தம் அளிக்கிறது.
நாடாளுமன்றத்தில் எனது பேச்சை காங்கிரஸ் கட்சியினர் திரித்துக் கூறுகின்றனர். எனது பேச்சின் ஒரு பகுதியை மட்டும் வைத்து பேசுவதா? அம்பேத்கரின் கொள்களைகளை உயர்த்திப் பிடிப்பது பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசுதான். அம்பேத்கரின் புகழை உலகம் முழுவதும் நிலைநாட்டியது பாஜக அரசுதான். நாங்கள் அம்பேத்கருக்கு எதிரானவர்கள் அல்ல. இவ்வாறு மத்திய அமைச்சர் அமித் ஷா பேசினார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago