டெல்லி மருத்துவமனைகளில் அனைத்து முதியோருக்கும் இலவச சிகிச்சை: அர்விந்த் கேஜ்ரிவால் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

ஆம் ஆத்மி மீண்டும் ஆட்சிக்கு வந்தபிறகு முதியோர் அனைவருக்கும் டெல்லி மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை வழங்கப்படும் என அக்கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கேஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

டெல்லி சட்டப் பேரவைக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தலுக்கு முன்னரே ஆம் ஆத்மி வேட்பாளர்களை அறிவித்து வருவதோடு, நேற்று முதியோர்களுக்கான புதிய அறிவிப்பை ஒன்றையும் அக்கட்சி வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அர்விந்த் கேஜ்ரிவால் நேற்று கூறியதாவது:

60 வயதுக்கு மேற்பட்ட அனைத்து முதியோருக்கும் இலவசமாக டெல்லி மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கும் வகையில் 'சஞ்சீவனி யோஜ்னா' திட்டம் தொடங்கப்படவுள்ளது. இந்தத் திட்டத்துக்கான பதிவு இரண்டு அல்லது மூன்று நாள்களுக்குள் தொடங்கவுள்ளது.

ஆம் ஆத்மி கட்சித் தொண்டர்கள் வீடு வீடாகச் சென்று இந்தத் திட்டத்துக்குத் தகுதியான முதியோரை பதிவு செய்வார்கள். தேர்தலுக்குப் பிறகு, ஆம் ஆத்மி சஞ்சீவனி திட்டத்தைச் செயல்படுத்தும்.

டெல்லியில் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படுகிறது. தேர்தலுக்குப் பிறகு இந்தத் தொகை ரூ.2,100 ஆக உயர்த்தப்படும்.

முதியோரை காப்பது எங்கள் கடமையாகும். நாட்டை முன்னெடுத்துச் செல்லும் பணியில் ஈடுபட்ட முதியோருக்கு தேவையான மருத்துவ வசதி உள்ளிட்டவற்றை செய்யவேண்டியது எங்கள் கடமையாகும்.

இந்த மருத்துவத் திட்டத்தில் ஆகும் செலவுக்கு கட்டுப்பாடு கிடையாது. பதிவு செய்யும் பணிகள் விரைந்து நடைபெறும். பதிவு செய்யப்பட்ட பின்னர் முதியோருக்கு அடையாள அட்டை ஒன்றை வழங்குவர். அதை அவர்கள் பத்திரமாக வைத்துக் கொள்ளவேண்டும்.

தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்த பின்னர் இந்தத் திட்டம் உடனடியாக அமலுக்குக் கொண்டு வரப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஆம் ஆத்மி கட்சி 11 தொகுதிகளுக்கான முதல் வேட்பாளர் பட்டியலை கடந்த மாதம் 21-ம் தேதியும், 20 வேட்பாளர்கள் அடங்கிய 2-ம் கட்ட பட்டியலை டிசம்பர் 9-ம் தேதியும் அறிவித்தது. டெல்லி பேரவைத் தேர்தலுக்கான தேதியை தலைமைத் தேர்தல் ஆணையம் இன்னும் அறிவிக்காத நிலையில், ஆம் ஆத்மி வேட்பாளர் பட்டியலை அறிவித்து தேர்தல் பணிகளில் மும்முரம் காட்டி வருகிறது.

கடந்த 2020-ம் ஆண்டு நடைபெற்ற டெல்லி பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருந்தது. அதாவது மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 62 தொகுதிகளை ஆம் ஆத்மி கைப்பற்றி சாதனை படைத்தது. பாஜக 8 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சியால் ஓர் இடத்திலும் வெற்ற பெற முடியவில்லை. இதையடுத்து அர்விந்த் கேஜ்ரிவால் டெல்லி முதல்வரானார்.

ஆனால், ஆட்சி நடைபெற்று வந்த சமயத்தில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டன. டெல்லி மதுபானக்கொள்கை முறைகேடு வழக்கில், கடந்த மார்ச் மாதம் அர்விந்த் கேஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். தற்போது உச்ச நீதிமன்றம் அளித்த ஜாமீனில் அவர் வெளியே வந்து தேர்தல் பணியாற்றி வருகிறார். இதைத் தொடர்ந்து பதவியை ராஜினாமா செய்த அவர், புதிய முதல்வராக ஆதிஷி சிங் மர்லேனாவை பதவியில் அமர்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்