புதுடெல்லி: ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்' மசோதா நேற்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக் குழு (ஜேபிசி) பரிசீலனைக்கு அனுப்ப மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் பரிந்துரை செய்தார்.
கடந்த 2019-ம் ஆண்டு சுதந்திர தின உரையின்போது ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்' திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்தார். இந்த திட்டத்தை ஆய்வு செய்ய முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் கடந்த ஆண்டு செப்டம்பரில் உயர்நிலை குழு அமைக்கப்பட்டது. இந்த குழு பல்வேறு கட்ட ஆய்வுகளை நடத்தி கடந்த மார்ச் மாதம் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம் 18,000 பக்கங்கள் கொண்ட அறிக்கையை சமர்ப்பித்தது. இதை அடிப்படையாக வைத்து ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்' மசோதா வரையறுக்கப்பட்டது. இந்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை கடந்த 12-ம் தேதி ஒப்புதல் அளித்தது.
இதைத் தொடர்ந்து மத்திய சட்டத் துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்' மசோதாவை மக்களவையில் நேற்று அறிமுகம் செய்தார். மக்களவை, சட்டப்பேரவை தொடர்பாக ஒரு மசோதாவும் யூனியன் பிரதேசங்கள் தொடர்பாக ஒரு மசோதாவும் அறிமுகம் செய்யப்பட்டன. இதன்படி அரசியலமைப்பு சட்ட (129-வது திருத்தம்) மசோதா 2024 மற்றும் யூனியன் பிரதேச சட்ட (திருத்தம்) மசோதா 2024 ஆகியவற்றை அமைச்சர் மேக்வால் அறிமுகம் செய்தார்.
இதற்கு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்' மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்யக்கூடாது என்று காங்கிரஸ், சமாஜ்வாதி, திமுக, திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.க்கள் கோஷமிட்டனர். இதைத் தொடர்ந்து மசோதாவை அவையில் தாக்கல் செய்யலாமா, வேண்டாமா என்பது குறித்து வாக்கெடுப்பு நடத்த அவைத் தலைவர் ஓம் பிர்லா உத்தரவிட்டார். புதிய நாடாளுமன்றத்தில் மின்னணு வாக்கெடுப்பை நடத்துவதற்கான இயந்திரங்கள் பொருத்தப்பட்டு உள்ளன.
இந்த இயந்திரங்கள் மூலம் முதல்முறையாக மின்னணு முறையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. மசோதாவை தாக்கல் செய்வதற்கு ஆதரவாக 220 பேரும் எதிராக 149 பேரும் வாக்களித்தனர். மின்னணு வாக்கெடுப்பு நடைமுறைக்கு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஆட்சேபம் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து காகித சீட்டு முறையில் மீண்டும் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அப்போது மசோதா தாக்கலுக்கு ஆதரவாக 269 பேரும் எதிராக 198 பேரும் வாக்களித்தனர். இதைத் தொடர்ந்து மத்திய சட்டத் துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்' மசோதாவை அவையில் தாக்கல் செய்தார்.
காங்கிரஸ் எம்.பி. மணீஷ் திவாரி பேசும்போது, “அரசியலமைப்பு சட்டத்தின் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது" என்றார். திரிணமூல் எம்.பி. கல்யாண் பானர்ஜி கூறும்போது, “இந்த மசோதா ஒரு தனிநபரின் விருப்பம்" என்று குற்றம்சாட்டினார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியதாவது: ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்' மசோதா குறித்து மத்திய அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டபோது, இந்த மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு (ஜேபிசி) அனுப்ப வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை வழங்கினார். அவையின் நேரத்தை வீணடிக்காமல் மசோதாவை ஜேபிசிக்கு அனுப்ப வேண்டும். அங்கு அனைத்து விவாதங்களையும் நடத்தலாம். இவ்வாறு அவர் கூறினார்.
இதைத் தொடர்ந்து மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், விதி 74-ன் கீழ் ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவுக்காக ஜேபிசி அமைப்பதை முன் மொழிவதாக அறிவித்தார். அமைச்சரின் பரிந்துரையை அவைத் தலைவர் ஓம் பிர்லா ஏற்றுக் கொண்டார். இதன்படி ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்' மசோதா ஜேபிசி பரிசீலனைக்கு அனுப்பப்பட உள்ளது. நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி கூறும்போது, “ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா சட்டவிரோதமானது. இது நாட்டின் கூட்டாட்சியை சீர்குலைக்கும். இந்த மசோதாவை காங்கிரஸ் மிகக் கடுமையாக எதிர்க்கும்" என்று தெரிவித்தார்.
தமிழ்நாட்டை சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்ட பதிவில், “ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவை நிறைவேற்ற மக்களவையில் மூன்றில் இரு பங்கு ஆதரவு தேவை. மக்களவையில் செவ்வாய்க்கிழமை 461 வாக்குகள் பதிவாகின. இதில் மூன்றில் இரு பங்கு ஆதரவை பெற 307 வாக்குகள் தேவை. ஆனால் மசோதாவுக்கு ஆதரவாக 263 வாக்குகள் மட்டுமே கிடைத்தன" என்று தெரிவித்துள்ளார்.
பாஜக வட்டாரங்கள் கூறும்போது, “மக்களவையில் வாக்கெடுப்பு நடைபெற்றபோது சுமார் 20 பாஜக எம்.பி.க்கள் அவையில் இல்லை. அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது" என்று தெரிவித்தன. மசோதா குறித்து அரசியல் நோக்கர்கள் கூறியதாவது: மக்களவையில் 543 எம்.பி.க்கள் உள்ளனர். இதில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை பெற 362 பேரின் ஆதரவு தேவை. ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தற்போது 293 எம்.பி.க்கள் மட்டுமே உள்ளனர்.
இதேபோல மாநிலங்களவையில் மொத்தமுள்ள 245 எம்.பி.க்களில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை நிரூபிக்க 164 எம்.பி.க்களின் ஆதரவு தேவை. ஆளும் என்டிஏவுக்கு 112 எம்.பி.க்கள் மட்டுமே உள்ளனர். இதன் காரணமாக அனைத்து கட்சிகளிடமும் கருத்தொற்றுமையை ஏற்படுத்த 31 எம்.பி.க்களைக் கொண்ட ஜேபிசி பரிசீலனைக்கு மசோதா அனுப்பப்படுகிறது. இந்த குழு 90 நாட்களில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யும். தேவைப்பட்டால் காலக்கெடு நீட்டிக்கப்படும். ஜேபிசி பரிசீலனைக்கு பிறகு இரு அவைகளிலும் மசோதா மீது வாக்கெடுப்பு நடத்தப்படும். இவ்வாறு அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago