புதுடெல்லி: ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் தொடர்பாக முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு நாடு முழுவதும் 21,500-க்கும் அதிகமானோரிடம் கருத்துகளைப் பெற்றது என்றும், இதில் 80% பேர் இந்த திட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர் என்றும் மத்திய சட்ட அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மக்களவைத் தேர்தல், மாநில மற்றும் யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளின் தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்தி முடிக்க வகை செய்யும் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ மசோதா செவ்வாய்க்கிழமை மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. ஆரம்ப நிலையில், இந்த மசோதாவுக்கு ஆதரவாக 269 உறுப்பினர்களும், எதிராக 198 உறுப்பினர்களும் வாக்களித்தனர்.
எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பு காரணமாக, இந்த மசோதா ஜேபிசி எனப்படும் நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்படுகிறது. இக்குழு 90 நாட்களில், இந்த மசோதா குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யும். தேவைப்பட்டால் காலக்கெடு நீட்டிக்கப்படும். ஜேபிசி பரிசீலனைக்குப் பின், இந்த மசோதா மீது மக்களவை மற்றும் மாநிலங்களவையில் விவாதிக்கப்பட்டு, வாக்கெடுப்புக்கு விடப்படும். இந்நிலையில், ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டத்தின் தேவைக்கான காரணங்களை மத்திய அரசு முன்வைத்துள்ளது.
இது தொடர்பாக சட்டம் மற்றும் நீதித் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை: நாடு சுதந்திரம் அடைந்ததிலிருந்து இதுவரை மக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்களுக்கு நடத்தப்பட்ட 400-க்கும் அதிகமான தேர்தல்கள், இந்திய தேர்தல் ஆணையத்தின் நியாயத்தையும் வெளிப்படைத்தன்மையையும் உறுதிப்பாட்டையும் வெளிப்படுத்தியுள்ளன. இருப்பினும், துண்டு துண்டான மற்றும் அடிக்கடி நடைபெறும் தேர்தல்களின் நடைமுறை இயல்பானது திறமையான அமைப்பு ஒன்றின் தேவை குறித்த விவாதங்களைத் தூண்டியுள்ளது. இது "ஒரே நாடு, ஒரே தேர்தல்" என்ற கருத்தாக்கத்தில் மீண்டும் ஆர்வம் ஏற்பட வழிவகுத்துள்ளது.
» ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ மூலம் ஜிடிபி 1.5% வரை உயர வாய்ப்பு: ராம்நாத் கோவிந்த் நம்பிக்கை
» மக்களவையில் ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவுக்கு ஆதரவாக 269 எம்பிக்கள் வாக்களிப்பு
‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டம்’ ஏன்? - ஒரே நேரத்தில் தேர்தல் என்ற யோசனை, மக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்களின் தேர்தல் சுழற்சிகளை சீரமைக்க முன்மொழியப்படுகிறது. இது வாக்காளர்கள் தங்கள் தொகுதிகளில் ஒரே நாளில் மக்களவை மற்றும் சட்டமன்றம் என்ற அரசின் இரு அடுக்குகளுக்கும் வாக்களிக்க அனுமதிக்கும். இருப்பினும் வாக்களிப்பு நாடு முழுவதும் கட்டம் கட்டமாக நடக்கக்கூடும். ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது செலவுகளைக் குறைப்பதையும் அடிக்கடி தேர்தல் நடப்பதால் ஏற்படும் இடையூறுகளைக் குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
2024-ம் ஆண்டில் வெளியிடப்பட்ட இந்தியாவில் ஒரே நேரத்தில் தேர்தல் குறித்த உயர்மட்டக் குழுவின் அறிக்கை, இந்தத் தொலைநோக்கை செயல்படுத்துவதற்கான விரிவான வரைபடத்தை வழங்கியது. அதன் பரிந்துரைகள் 2024, செப்டம்பர் 18 அன்று மத்திய அமைச்சரவையால் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இது தேர்தல் சீர்திருத்தத்தை நோக்கிய ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் குறிக்கிறது. இது நிர்வாக செயல்திறனை மேம்படுத்துவதோடு, தேர்தல் தொடர்பான செலவுகளையும் குறைக்கும். நிர்வாகத்தை நெறிப்படுத்தவும், அதன் ஜனநாயக செயல்முறைகளை மேம்படுத்தவும் இந்தியா விரும்புவதால், "ஒரே நாடு , ஒரே தேர்தல்" என்ற கருத்து சிந்தனைமிக்க விவாதமும் ஒருமித்த கருத்தும் தேவைப்படும் முக்கிய சீர்திருத்தமாக உருவெடுத்துள்ளது.
கடந்த காலங்களில் ஒரே நேரத்தில் நடந்த தேர்தல்: இந்தியாவில் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது என்பது புதிய யோசனை அல்ல. அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, மக்களவை மற்றும் அனைத்து மாநில சட்டமன்றங்களுக்கான தேர்தல்கள் 1951 முதல் 1967 வரை ஒரே நேரத்தில் நடத்தப்பட்டன. மக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்களுக்கான முதல் பொதுத் தேர்தல் 1951-52 ஆம் ஆண்டில் ஒன்றாக நடத்தப்பட்டது. இந்த நடைமுறை 1957, 1962 மற்றும் 1967 ஆம் ஆண்டுகளில் அடுத்தடுத்த மூன்று பொதுத் தேர்தல்களிலும் தொடர்ந்தது.
இருப்பினும், 1968, 1969 ஆம் ஆண்டுகளில் சில மாநில சட்டமன்றங்கள் முன்கூட்டியே கலைக்கப்பட்டதால் தேர்தல்களின் சுழற்சி ஒத்திசைவு சீர்குலைந்தது. நான்காவது மக்களவையும் 1970-ல் முன்கூட்டியே கலைக்கப்பட்டது. 1971-ல் புதிய தேர்தல்கள் நடத்தப்பட்டன. முதலாவது, இரண்டாவது, மூன்றாவது மக்களவையைப் போலல்லாமல், ஐந்தாவது மக்களவையின் பதவிக்காலம் 1977 வரை 352 வது பிரிவின் கீழ் நீட்டிக்கப்பட்டது. அதற்குப்பின், எட்டாவது, பத்தாவது, பதினான்காவது, பதினைந்தாவது மக்களவை பதவிக்காலம் மட்டுமே முழு ஐந்து ஆண்டுகள் நீடித்தது. ஆறாவது, ஏழாவது, ஒன்பதாவது, பதினொன்றாவது, பன்னிரண்டாவது, பதின்மூன்றாவது மக்களவை முன்கூட்டியே கலைக்கப்பட்டது.
மாநில சட்டமன்றங்கள் பல ஆண்டுகளாக இதேபோன்ற இடையூறுகளை எதிர்கொண்டன. முன்கூட்டியே கலைத்தல், கால நீட்டிப்பு ஆகியவை தொடர்ச்சியான சவாலாக மாறியுள்ளன. இந்த நடைமுறைகள் ஒரே நேரத்தில் தேர்தல் என்ற சுழற்சியை உறுதியாக சீர்குலைத்துள்ளன. இது நாடு முழுவதும் தேர்தல் அட்டவணைகளின் தற்போதைய வடிவத்திற்கு வழிவகுத்தது.
ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயர்நிலைக் குழு: ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து ஆய்வு செய்ய முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயர்நிலைக் குழு, 2023, செப்டம்பர் 2 அன்று மத்திய அரசால் அமைக்கப்பட்டது. மக்களவைக்கும் மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதே இதன் முதன்மை நோக்கமாகும்.
இந்தக் குழு பொதுவான மற்றும் அரசியல் ரீதியான கருத்துகளை விரிவாகக் கோரியது. முன்மொழியப்பட்ட தேர்தல் சீர்திருத்தத்துடன் தொடர்புடைய சாத்தியமான நன்மைகள் மற்றும் சவால்களை பகுப்பாய்வு செய்ய நிபுணர்களுடன் கலந்தாலோசித்தது. இந்தக் குழுவின் அறிக்கை, அரசியல் சட்டத் திருத்தங்களுக்கான பரிந்துரைகளுடன் ஒரே நேரத் தேர்தலால் நிர்வாகம், நிதி, பொது உணர்வு ஆகியவற்றில் எதிர்பார்க்கப்படும் தாக்கம் பற்றிய விரிவான கண்ணோட்டத்தையும் முன்வைக்கிறது.
அறிக்கையின் முக்கிய அம்சங்கள்: பொதுமக்கள் கருத்து: இந்தக் குழு 21,500-க்கும் அதிகமானோரிடம் இருந்து கருத்துகளைப் பெற்றது. 80% கருத்து ஒரே நேரத்தில் தேர்தல்களுக்கு ஆதரவாக இருந்தது. லட்சத்தீவு, அந்தமான் மற்றும் நிக்கோபார், நாகாலாந்து, தாத்ரா மற்றும் நகர் ஹவேலி உட்பட நாட்டின் அனைத்து மூலைகளிலிருந்தும் பதில்கள் வந்தன. தமிழ்நாடு, மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா, மேற்கு வங்கம், குஜராத், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்து அதிக பதில்கள் பெறப்பட்டுள்ளன.
அரசியல் கட்சிகளின் கருத்து: 47 அரசியல் கட்சிகள் தங்கள் கருத்துகளை சமர்ப்பித்தன. இவற்றில் 32 கட்சிகள் வளங்களை மேம்படுத்துதல, சமூக நல்லிணக்கம் போன்ற நன்மைகளை மேற்கோள் காட்டி, ஒரே நேரத்தில் தேர்தலை ஆதரித்தன. ஜனநாயக விரோத விளைவுகள், மாநிலக் கட்சிகள் ஓரங்கட்டப்படுவது குறித்து 15 கட்சிகள் கவலை தெரிவித்தன.
நிபுணர் ஆலோசனைகள்: இந்தக் குழு இந்தியாவின் முன்னாள் தலைமை நீதிபதிகள், முன்னாள் தேர்தல் ஆணையர்கள் மற்றும் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தியது. பெரும்பான்மையானவர்கள் ஒரே நேரத்தில் தேர்தல் என்ற கருத்தை ஆதரித்தனர், அடிக்கடி தேர்தல் நடப்பதால் நிதி வீணடிக்கப்படுவது குறித்தும் சமூக-பொருளாதார இடையூறுகளையும் சுட்டிக்காட்டினர்.
பொருளாதார தாக்கம்: சிஐஐ, எஃப்ஐசிசிஐ, அசோசாம் போன்ற வணிக அமைப்புகள் இந்த திட்டத்தை ஆதரித்தன. தேர்தல் சுழற்சிகளுடன் தொடர்புடைய இடையூறுகள் மற்றும் செலவுகளைக் குறைப்பதன் மூலம் பொருளாதார நிலைத்தன்மையில் நேர்மறையான தாக்கத்தை எடுத்துக்காட்டின.
சட்ட மற்றும் அரசியலமைப்பு பகுப்பாய்வு: மக்களவை, மாநில சட்டமன்றங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தலை நடத்த இந்திய அரசியலமைப்பின் 82ஏ மற்றும் 324 ஏ பிரிவுகளில் திருத்தங்களை குழு முன்மொழிந்தது.
அமலாக்கத்துக்கு படிப்படியான அணுகுமுறை: ஒரே நேரத்தில் தேர்தலை இரண்டு கட்டங்களாக அமல்படுத்த குழு பரிந்துரைத்தது. முதல் கட்டம்: மக்களவை மற்றும் மாநில சட்டமன்றத் தேர்தல்களை ஒருங்கிணைத்தல். இரண்டாம் கட்டம்: நகராட்சிகள் மற்றும் பஞ்சாயத்துகளுக்கான தேர்தலை மக்களவை மற்றும் மாநில சட்டமன்றத் தேர்தலுக்குப்பின் 100 நாட்களுக்குள் ஒருங்கிணைத்தல்.
வாக்காளர் பட்டியல் ஒத்திசைவு: மாநில தேர்தல் ஆணையங்களால் வாக்காளர் பட்டியல் தயாரிப்பில் உள்ள திறமையின்மைகளை குழு சுட்டிக்காட்டியது. மூன்று அடுக்கு அரசுக்கும் ஒற்றை வாக்காளர் பட்டியல் மற்றும் ஒற்றை வாக்காளர் அடையாளத்தை உருவாக்க பரிந்துரைத்தது. இது போலி மற்றும் தவறுகளைக் குறைத்து, வாக்காளர் உரிமைகளைப் பாதுகாக்கும்.
அடிக்கடி தேர்தல்கள் குறித்த பொதுமக்களின் உணர்வு: வாக்காளர் சோர்வு, நிர்வாக இடையூறுகள் போன்ற அடிக்கடி தேர்தலின் எதிர்மறை தாக்கங்கள் குறித்த பொதுமக்களின் பதில்கள் குறிப்பிடத்தக்க கவலையை சுட்டிக்காட்டின. அவை ஒரே நேரத்தில் தேர்தலால் தணிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கீழே உள்ளவை முன்னாள் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்த உயர்நிலைக் குழு வெளியிட்ட அறிக்கையின் கண்டுபிடிப்புகளை அடிப்படையாகக் கொண்டவை:
ஆட்சியில் நிலைத்தன்மையை ஊக்குவிக்கிறது: நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடந்து வரும் தேர்தல்கள் காரணமாக, அரசியல் கட்சிகள், அவற்றின் தலைவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநில மற்றும் மத்திய அரசுகள் பெரும்பாலும் ஆட்சிக்கு முன்னுரிமை அளிப்பதை விட வரவிருக்கும் தேர்தலுக்குத் தயாராகும் முயற்சிகளில் கவனம் செலுத்துகின்றன. ஒரே நேரத்தில் தேர்தலை நடத்துவது வளர்ச்சி நடவடிக்கைகள் மற்றும் மக்களின் நலனை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட கொள்கைகளை செயல்படுத்துவதில் அரசு கவனம் செலுத்தும்.
கொள்கை முடக்கத்தைத் தடுக்கிறது: தேர்தலின் போது மாதிரி நடத்தை விதிகள் அமல்படுத்தப்படுவது என்பது வழக்கமான நிர்வாக நடவடிக்கைகள் மற்றும் மேம்பாட்டு முயற்சிகளை சீர்குலைக்கிறது. இந்த இடையூறு முக்கிய நலத்திட்டங்களின் முன்னேற்றத்தைத் தடுப்பது மட்டுமின்றி, நிர்வாகத்தின் நிச்சயமற்ற தன்மைக்கும் வழிவகுக்கிறது. ஒரே நேரத்தில் தேர்தலை நடத்துவது மாதிரி நடத்தை விதிகள் நீண்டகாலம் அமலில் இருப்பதைக் குறைக்கும். இதன் மூலம் கொள்கை முடக்கத்தைக் குறைக்கும். தொடர்ச்சியான நிர்வாகத்தை செயல்படுத்தும்.
மனிதவள திசை திருப்பலைத் தணிக்கிறது: வாக்குச்சாவடி அதிகாரிகள் மற்றும் அரசு ஊழியர்கள் போன்ற தேர்தல் பணிகளுக்கு கணிசமான எண்ணிக்கையில் பிற பணியாளர்களை ஈடுபடுத்துவது, அவர்களின் முக்கிய பொறுப்புகளிலிருந்து மனித வளங்களை கணிசமாக திசைதிருப்ப வழிவகுக்கும். தேர்தல் ஒரே நேரத்தில் நடத்தப்படுவதால், அடிக்கடி பணியமர்த்தலின் தேவை குறையும், இது அரசு அதிகாரிகள் மற்றும் பொது நிறுவனங்கள் தேர்தல் தொடர்பான பணிகளை விட தங்கள் முதன்மை செயல்பாடுகளில் அதிக கவனம் செலுத்த அனுமதிக்கும்.
மாநிலக் கட்சிகளின் பொருத்தப்பாட்டைப் பாதுகாக்கிறது: ஒரே நேரத்தில் தேர்தல்களை நடத்துவது மாநிலக் கட்சிகளின் பங்கை குறைமதிப்புக்கு உட்படுத்தாது. உண்மையில், இது தேர்தலின் போது அதிகமாக உள்ளூர் கவனத்தை ஊக்குவிக்கிறது. மாநிலக் கட்சிகள் தங்கள் தனித்துவமான கவலைகள் மற்றும் விருப்பங்களை முன்னிலைப்படுத்த உதவுகிறது. இந்த அமைப்பு தேசிய தேர்தல் பிரச்சாரங்களால் உள்ளூர் பிரச்சினைகள் மறைக்கப்படாத ஒரு அரசியல் சூழலை வளர்க்கிறது, இதனால் மாநிலக் குரல்களின் பொருத்தப்பாட்டைப் பாதுகாக்கிறது.
அரசியல் வாய்ப்புகளை மேம்படுத்துகிறது: ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது அரசியல் கட்சிகளுக்கு அரசியல் வாய்ப்புகள் மற்றும் பொறுப்புகளை மிகவும் சமமாக ஒதுக்குவதை இன்றியமையாததாக்குகிறது. தற்போது, ஒரு கட்சிக்குள் சில தலைவர்கள் தேர்தலில் ஆதிக்கம் செலுத்துவதும், பல நிலைகளில் தேர்தலில் போட்டியிடுவதும், முக்கிய பதவிகளை ஏகபோகமாக்குவதும் நடக்கிறது. ஒரே நேரத்தில் தேர்தல் நடைபெறும் சூழ்நிலையில், பல்வேறு கட்சிகளை பிரதிநிதித்துவம் செய்யும் அரசியல் ஊழியர்களிடையே பன்முகத்தன்மையும் உள்ளடக்கத்திற்கான அதிக வாய்ப்புகளும் உருவாகின்றன. இது பரந்த அளவில் தலைவர்கள் உருவாகி ஜனநாயக செயல்முறைக்கு பங்களிக்க அனுமதிக்கிறது.
நிர்வாகத்தில் கவனம்: நாடு முழுவதும் அடிக்கடி நடைபெறும் தேர்தல்கள் நல்லாட்சியிலிருந்து கவனத்தை திசை திருப்புகின்றன. அரசியல் கட்சிகள் வெற்றி பெறுவதற்காக தேர்தல் தொடர்பான நடவடிக்கைகளில் அதிக கவனம் செலுத்துகின்றன. வளர்ச்சி மற்றும் அத்தியாவசிய நிர்வாகத்திற்கு குறைந்த நேரத்தை ஒதுக்குகின்றன. ஒரே நேரத்தில் தேர்தல் என்பது வாக்காளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு கட்சிகள் தங்கள் முயற்சிகளை அர்ப்பணிக்க அனுமதிக்கும். மோதல்கள் மற்றும் ஆவேசமான பிரச்சாரங்களின் நிகழ்வுகளைக் குறைக்கும்.
நிதிச் சுமை குறைதல்: ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது பல தேர்தல் சுழற்சிகளுடன் தொடர்புடைய நிதிச் செலவுகளை கணிசமாகக் குறைக்கும். ஒவ்வொரு தனிப்பட்ட தேர்தலுக்கும் மனிதவளம், உபகரணங்கள், பாதுகாப்பு போன்ற வளங்களைப் பயன்படுத்துவது தொடர்பான செலவினங்களைக் குறைக்கிறது. சிறந்த நிதி மேலாண்மையில், பொருளாதார வளர்ச்சிக்கு உகந்த சூழலை வளர்ப்பது மற்றும் முதலீட்டாளர்களின் நம்பிக்கை ஆகியவை அடங்கும்” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago