நேரு குடும்பத்துக்கு உதவ அரசியல் சாசனத்தில் பல திருத்தங்களை காங்கிரஸ் செய்தது - நிர்மலா சீதாராமன்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: நேருவின் குடும்பம் மற்றும் அதன் வாரிசுகளுக்கு உதவுவதற்காக அரசியல் சட்டத்தில் பெரிய திருத்தங்களை காங்கிரஸ் கட்சி மேற்கொண்டது என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம் சாட்டினார்.

‘இந்திய அரசியலமைப்பின் 75 ஆண்டுகளின் புகழ்பெற்ற பயணம்’ என்ற தலைப்பில் விவாதத்தை மாநிலங்களவையில் தொடங்கிவைத்துப் பேசிய நிதி அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான நிர்மலா சீதாராமன், “குடும்பத்துக்கும், வாரிசுகளுக்கும் உதவுவதற்காக மட்டுமே ஒவ்வொரு முறையும் காங்கிரஸ் துணிச்சலுடன் அரசியலமைப்புச் சட்டத்தை திருத்தியது; திருத்திக் கொண்டே இருந்தது.

எந்தவொரு திருத்தமும் பொருளாதார நன்மை, சமூக நோக்கம், உரிய செயல்முறை மற்றும் அரசியலமைப்பின் நோக்கம் ஆகிய நான்கு அளவுகோல்களின் அடிப்படையில் இருக்கவில்லை. இந்த திருத்தங்கள் ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்காக அல்ல. மாறாக, அதிகாரத்தில் இருப்பவர்களை பாதுகாப்பதற்காகவும், குடும்பத்தை பலப்படுத்துவதற்காகவுமே.

புகழ்பெற்ற பாடலாசிரியர் மஜ்ரூஹ் சுல்தான்புரி, நடிகர் பால்ராஜ் சாஹ்னி இருவரும் 1949 இல் சிறையில் அடைக்கப்பட்டனர். இருவரின் பேச்சு சுதந்திரத்தை முடக்கியது மட்டும் காங்கிரஸின் சாதனை அல்ல, அன்றைய பிரதமர் இந்திரா காந்தி மற்றும் அவரது மகனை கேள்வி கேட்டதற்காக ‘கிஸ்ஸா குர்சி கா’ என்ற படத்தையே தடை செய்தனர். இதுபோல் பல நிகழ்வுகள் உள்ளன. கருத்துச் சுதந்திரம் மற்றும் பத்திரிகை சுதந்திரம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கை 1949-க்கு முன்பும், அதற்குப் பிறகும் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் நடந்தன.

இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு சோவியத் மாதிரியை ஏற்றுக்கொண்டார். ஆனால் சோசலிச மாதிரி இந்தியாவுக்கு பயனளிக்கவில்லை. 50 ஆண்டுகளாக காங்கிரஸ் அரசு பின்பற்றிய பொருளாதாரக் கொள்கைகள் பொருளாதாரத்தை வலுப்படுத்தவில்லை.

நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்கான சட்ட மசோதா கடந்த 2008-ல் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. ஆனால், ஆளும் காங்கிரசின் கூட்டணி கட்சிகள் இந்த சட்டத்திற்கு ஆதரவாக இல்லாததால் அந்த மசோதா மக்களவைக்கு கொண்டு செல்லப்படவில்லை. பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றாததால், காங்கிரஸ் பெண்களுக்கு எதிரானது.

மக்களவையில் 426 உறுப்பினர்களும், மாநிலங்களவையில் 159 உறுப்பினர்களும் ராஜிவ் காந்திக்கு இருந்தபோதும், பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றும் நம்பிக்கை அவர்களுக்கு இல்லை. அவர்கள் எப்போதும் பெண்களுக்கு எதிரானவர்கள்.

அதேநேரத்தில், நாடாளுமன்றத்தின் புதிய கட்டிடத்தில் நடைபெற்ற முதல் அமர்வில் மோடி அரசு ‘நாரி சக்தி வந்தான் ஆதினியம்’ கொண்டு வந்தது. பாரதிய ஜனதா கட்சி எப்போதும் பெண்களுக்கான இடஒதுக்கீடு மற்றும் அரசியலில் பெண்களின் பங்களிப்பை அதிகரிப்பதில் உறுதியாக உள்ளது. நானே இதன் பயனாளி.

இந்தியாவில் ஜனநாயகம் வளர்ந்து வரும் விதத்தில் இன்று நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம். நாடு தனது அரசியலமைப்பின் 75 வது ஆண்டைக் குறிக்கும் நிலையில், இந்த புனித ஆவணத்தில் பொதிந்துள்ள உணர்வை நிலைநிறுத்தும் இந்தியாவை உருவாக்குவதற்கான எங்களது உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறோம்.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, 50 க்கும் மேற்பட்ட நாடுகள் சுதந்திரமடைந்தன. சுதந்திரம் அடைந்ததும் அவற்றின் அரசியலமைப்புச் சட்டமும் எழுதப்பட்டது. ஆனால் பல நாடுகள் தங்கள் அரசியலமைப்பை மாற்றிவிட்டன. அவற்றைத் திருத்தவில்லை. ஆனால், நமது அரசியலமைப்புச் சட்டம் காலத்தின் சோதனைகளை கடந்து நிற்கிறது. அது பல திருத்தங்களுக்கு வழி கொடுத்துள்ளது. திருத்தங்கள் காலத்தின் தேவை" என தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

10 mins ago

இந்தியா

2 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்