'ஒரே நாடு, ஒரே தேர்தல்' மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மசோதா அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மக்களவையின் 543 தொகுதிகள், மாநிலங்களின் 4,120 சட்டப்பேரவைத் தொகுதிகள், 30 லட்சத்துக்கும் மேற்பட்ட உள்ளாட்சிப் பதவிகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்தை ஆய்வு செய்ய முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் கடந்த ஆண்டு செப்டம்பரில் உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, காங்கிரஸ் மூத்த தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, மாநிலங்களவை முன்னாள் தலைவர் குலாம் நபி ஆசாத், நிதி ஆணைய முன்னாள் தலைவர் என்.கே.சிங், மக்களவை முன்னாள் செயலர் சுபாஷ் கே காஷ்யப், மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே, முன்னாள் ஊழல் கண்காணிப்பு ஆணையர் சஞ்சய் கோத்தாரி ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர்.
ராம்நாத் கோவிந்த் குழு பல்வேறு கட்ட ஆய்வுகளை நடத்தி கடந்த மார்ச் மாதம் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம் 18,000 பக்கங்கள் கொண்ட அறிக்கையை சமர்ப்பித்தது. மக்களவை, மாநிலங்களின் சட்டப்பேரவைகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடத்த வேண்டும். இந்த தேர்தலுக்கு பிறகு அடுத்த 100 நாட்களில் நாடு முழுவதும் ஒரே கட்டமாக உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும். ஒரே வாக்காளர் பட்டியலை தயாரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகளை ராம்நாத் கோவிந்த் குழு அளித்துள்ளது. இந்த குழுவின் பரிந்துரைகளை மத்திய அரசு கடந்த செப்டம்பரில் ஏற்றுக் கொண்டது.
இதைத் தொடர்ந்து 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' தொடர்பான மசோதா வரையறுக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இந்த மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. அடுத்த வாரம் நாடளுமன்றத்தில் புதிய மசோதா தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது: 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' மசோதா தொடர்பாக கட்சிகளிடையே ஒருமித்த கருத்தை ஏற்படுத்த தீவிர முயற்சி மேற்கொள்ளப்படும். இதன்படி நாடாளுமன்ற கூட்டுக் குழு பரிசீலனைக்கு மசோதா அனுப்பப்படும். மசோதா தொடர்பாக நாடாளுமன்றத்தில் விரிவான விவாதம் நடத்தப்படும்.
புதிய மசோதா நிறைவேற்றப்பட்டால் வரும் 2029-ம் ஆண்டு முதல் 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' திட்டம் அமலுக்கு கொண்டு வரப்படும். இந்த திட்டத்தை செயல்படுத்த வரும் 2026-ம் ஆண்டு டிசம்பருக்குள் 25 மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும்.
கடந்த 1951-ம் ஆண்டு முதல் 1967-ம் ஆண்டு வரை மக்களவை, சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட்டது. அதன்பிறகு இந்த நடைமுறை சீர்குலைந்தது. இப்போது ஒவ்வொரு ஆண்டும் ஏதாவது ஒரு தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. இதன்காரணமாக தேர்தல் செலவு அதிகரித்து வருகிறது. அரசு ஊழியர்கள், பாதுகாப்பு படை வீரர்களின் அலுவல்கள் பாதிக்கப்படுகின்றன. தேர்தல் நடத்தை விதிகள் அடிக்கடி அமல் செய்யப்படுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுகிறது.
தற்போதைய நிலையில் ஆந்திரா, ஒடிசா, சிக்கிம், அருணாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல், மக்களவைத் தேர்தலுடன் சேர்ந்து நடத்தப்படுகிறது. ராஜஸ்தான், மத்திய பிரதேசம், தெலங்கானா, சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல் மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக நடைபெறுகிறது. தேசத்தின் நலனை கருத்தில் கொண்டு 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' திட்டம் வெற்றிகரமாக அமல் செய்யப்படும். இவ்வாறு மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
முக்கிய செய்திகள்
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago