மாற்றுத்திறனாளிகள் முன்னேற்றத்துக்கு வலுவான அடித்தளம் அமைத்துள்ளோம்

By Guest Author

டிசம்பர் 3ம் தேதி முக்கியமான நாள். உலகம் முழுவதும் இந்த நாள் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் மாற்றுத்திறனாளிகளின் துணிவு, தன்னம்பிக்கை மற்றும் சாதனைகளுக்கு வணக்கம் செலுத்த சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது.

இந்த வாய்ப்பு இந்தியாவுக்குப் புனித நாள் போன்றது. மாற்றுத்திறனாளிகளுக்கு மரியாதை செலுத்துவது இந்தியாவின் பண்பாட்டில் உள்ளார்ந்த ஒன்றாக இருக்கிறது. நமது வேதங்களிலும், நாட்டுப்புற கதை,பாடல்களிலும் மாற்றுத்திறனாளி நண்பர்களுக்கான மரியாதை உணர்வு பொதிந்துள்ளது.

மனதில் உற்சாகம் கொண்டவனுக்கு உலகில் முடியாதது எதுவுமே இல்லை என ராமாயணத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த உற்சாகத்தோடு இந்தியாவில் உள்ள நமது மாற்றுத்திறனாளிகள் தேசத்தின் கௌரவம், சுயமரியாதை ஆகியவற்றின் சக்தியாக மாறி வருகிறார்கள்.

இந்த ஆண்டு இன்னும் சிறப்பு வாய்ந்தது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 75-வது ஆண்டு நிறைவடைகிறது. சமத்துவத்திற்காகவும் கடைக்கோடி மக்களுக்காகவும் பாடுபட இந்திய அரசியலமைப்பு நம்மை ஊக்குவிக்கிறது.

அரசியலமைப்பின் இந்த உத்வேகத்துடன், கடந்த 10 ஆண்டுகளில், மாற்றுத்திறனாளிகளின் முன்னேற்றத்திற்கு வலுவான அடித்தளத்தை அமைத்துள்ளோம். இந்த ஆண்டுகளில், நாட்டில் உள்ள ஊனமுற்றோருக்காக பல கொள்கைகள் வகுக்கப்பட்டுள்ளன; பல முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

எங்கள் அரசு அனைத்தையும் உணரக்கூடியது, உணர்வுபூர்வமானது, அனைத்தையும் மேம்படுத்தும் தன்மை கொண்டது என்பதை இந்த முடிவுகள் காட்டுகின்றன. இந்த வகையில், நமது மாற்றுத்திறனாளி சகோதர சகோதரிகளுக்கு நமது அர்ப்பணிப்பை மீண்டும் எடுத்துரைக்கும் நாளாகவும் இந்த நாள் மாறியிருக்கிறது.

நான் பொது வாழ்விற்கு வந்ததிலிருந்து, மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கையை எளிதாக்க ஒவ்வொரு வாய்ப்பிலும் முயற்சி செய்துள்ளேன். பிரதமரான பின், இந்த சேவையை தேசத்தின் தீர்மானமாக மாற்றினேன். 2014-ல் அரசு அமைந்த பின், முதலில் 'ஊனமுற்றவர்கள்' என்பதற்கு பதிலாக 'மாற்றுத் திறனாளிகள்' என்ற வார்த்தையை அறிமுகம் செய்ய நாங்கள் முடிவு செய்தோம்.

இது வெறும் வார்த்தை மாற்றம் அல்ல. சமுதாயத்தில் மாற்றுத் திறனாளிகளின் கண்ணியத்தை அதிகரித்துள்ளது. அவர்களின் பங்களிப்புக்கு மகத்தான அங்கீகாரம் அளிக்கிறது. எந்தவொரு நபரும் உடல் ரீதியான சவால்களை எதிர்கொள்ளாமல் அவரது திறமைக்கு ஏற்ப முழு மரியாதையுடன் தேசத்தை கட்டியெழுப்புவதற்கான வாய்ப்பைப் பெறுகின்ற அனைவரையும் உள்ளடக்கிய சூழலை அரசு விரும்புகிறது என்ற செய்தியை இந்த முடிவு ஏற்படுத்தியது. பல்வேறு தருணங்களில் இந்த முடிவுக்காக நமது மாற்றுத்திறனாளி சகோதர சகோதரிகள் எனக்கு ஆசி கூறினார்கள். இந்த ஆசீர்வாதங்கள், மாற்றுத் திறனாளிகளின் நலனுக்குப் பாடுபட எனக்கு அளிக்கப்பட்ட மிகப் பெரிய பலமாக அமைந்தன.

ஒவ்வொரு ஆண்டும் மாற்றுத் திறனாளிகள் தினத்தன்று நாடு முழுவதும் பல நிகழ்ச்சிகளுக்கு நாங்கள் ஏற்பாடு செய்கிறோம். 9 ஆண்டுகளுக்கு முன், இதே நாளில்தான் 'எளிதில் அணுகும் இந்தியா இயக்கம்' (சுகம்யா பாரத் அபியான்) தொடங்கப்பட்டது எனக்கு இப்போதும் நினைவில் இருக்கிறது. கடந்த 9 ஆண்டுகளில், இந்த இயக்கம் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரம் அளித்ததால், எனக்கு மிகுந்த மனநிறைவு ஏற்பட்டுள்ளது.

140 கோடி மக்களின் மனவுறுதி காரணமாக, 'எளிதில் அணுகும் இந்தியா இயக்கம்' மாற்றுத் திறனாளிகளின் பாதையிலிருந்து பல தடைகளை அகற்றியதோடு, அவர்களுக்குக் கண்ணியமான, வளமான வாழ்க்கையையும் அளித்துள்ளது.

முந்தைய அரசுகளின் கொள்கைகள் காரணமாக மாற்றுத்திறனாளிகள் அரசு வேலைகளிலிருந்தும், உயர் கல்வி வாய்ப்புகளிலிருந்தும் பின்தங்கினர். அந்த நிலைமையை மாற்றினோம். இட ஒதுக்கீடு முறை புதிய தோற்றம் பெற்றது. மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக செலவிடப்படும் தொகையும் 10 ஆண்டுகளில் மூன்று மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த முடிவுகள் மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய வாய்ப்புகளையும் முன்னேற்றங்களையும் உருவாக்கின. நமது மாற்றுத்திறனாளிகள் இன்று இந்தியாவை உருவாக்குவதில் அர்ப்பணிப்பு மிக்க பங்குதாரராக இருந்து நம்மை பெருமைப்படுத்தி வருகின்றனர்.

இந்தியாவின் மாற்றுத் திறனாளி நண்பர்களிடம் ஏராளமான திறமைகள் உள்ளன என்பதை நான் தனிப்பட்ட முறையில் உணர்ந்திருக்கிறேன். பாராலிம்பிக் போட்டிகளில் நமது விளையாட்டு வீரர்கள் நாட்டிற்கு அளித்திருக்கும் மரியாதை இந்த ஆற்றலின் அடையாளமாகும். இந்த ஆற்றலை தேசத்தின் ஆற்றலாக மாற்றும் வகையில், மாற்றுத் திறனாளி நண்பர்களைத் திறன்களுடன் இணைத்துள்ளோம். இதன் மூலம் அவர்களின் சக்தி தேசத்தின் முன்னேற்றத்திற்கு உதவிகரமாக இருக்கும். இந்தப் பயிற்சி வெறும் அரசுத் திட்டமல்ல. இந்தப் பயிற்சிகள் மாற்றுத் திறனாளி நண்பர்களுக்கு தன்னம்பிக்கையை அதிகரித்துள்ளன. அவர்களுக்கு வேலை தேடுவதற்கான சுய அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

எனது மாற்றுத்திறனாளி சகோதர சகோதரிகளின் வாழ்க்கை எளிமையாகவும், சுயமரியாதையுடனும் இருக்க வேண்டும் என்பதே அரசின் அடிப்படைக் கொள்கையாகும். மாற்றுத்திறனாளிகள் சட்டத்தையும் இதே உணர்வுடன் அமல்படுத்தினோம். இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க சட்டத்தில், ஊனத்திற்கான வரையறையின் வகையும் 7 லிருந்து 21 ஆக உயர்த்தப்பட்டது. முதல் முறையாக, ஆசிட் தாக்குதலில் இருந்து தப்பியவர்களும் அதில் சேர்க்கப்பட்டுள்ளனர். இன்று இந்த சட்டம் மாற்றுத்திறனாளிகளின் அதிகாரம் பெற்ற வாழ்க்கைக்கான ஒரு வழியாக மாறி வருகிறது.

இந்த சட்டங்கள் மாற்றுத் திறனாளிகள் மீதான சமூகத்தின் பார்வையை மாற்றியமைத்துள்ளன. இன்று மாற்றுத் திறனாளி நண்பர்களும் வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க முழுமையாகப் பாடுபட்டு வருகிறார்கள்.

சமூகத்தில் உள்ள ஒவ்வொருவரிடமும் ஒரு தனித்துவமான திறமை உள்ளது என்பதை இந்தியாவின் தத்துவம் நமக்குக் கற்பிக்கிறது. அதை நாம் முன்னிலைக்குக் கொண்டு வர வேண்டும். எனது மாற்றுத் திறனாளி சகாக்களின் அற்புதமான திறமை மீது நான் எப்போதும் நம்பிக்கை கொண்டுள்ளேன். கடந்த பத்தாண்டுகளில் எனது இந்த நம்பிக்கையை வலுப்படுத்தியிருப்பதை நமது மாற்றுத்திறனாளி சகோதர சகோதரிகள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள் என்பதை நான் மிகுந்த பெருமிதத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களின் சாதனைகள் நமது சமூகத்தின் உறுதிப்பாட்டை எவ்வாறு வடிவமைக்கின்றன என்பதைக் கண்டு நான் பெருமை அடைகிறேன்.

இன்று, எனது நாட்டின் விளையாட்டு வீரர்கள் பாராலிம்பிக் பதக்கத்தை தங்கள் மார்பில் அணிந்து கொண்டு என் வீட்டிற்கு வரும்போது, என் இதயம் பெருமிதத்தால் நிரம்பியது. மனதின் குரலில் ஒவ்வொரு முறையும் நான் மாற்றுத்திறனாளி சகோதர சகோதரிகளுக்கு கருத்தூக்கம் தரும் கதைகளைப் பகிர்ந்து கொள்ளும் போது, என் மனதில் பெருமிதம் ஏற்படுகிறது. கல்வி, விளையாட்டு, ஸ்டார்ட் அப் என எதுவாக இருந்தாலும், அவர்கள் அனைத்துத் தடைகளையும் உடைத்து, புதிய சிகரங்களைத் தொட்டு, நாட்டின் வளர்ச்சியில் பங்குதாரர்களாக மாறி வருகின்றனர்.

2047-ம் ஆண்டு நாம் சுதந்திரம் அடைந்து 100-வது ஆண்டைக் கொண்டாடும் வேளையில், நமது மாற்றுத் திறனாளி நண்பர்கள் உலகம் முழுவதற்கும் ஊக்கம் அளிக்கும் வகையில் இருப்பார்கள் என்பதை நான் முழு நம்பிக்கையுடன் கூற முடியும். இந்த இலக்கை அடைய இன்று நாம் உறுதியேற்க வேண்டும்.

வாருங்கள், எந்தக் கனவும், இலக்கும் சாத்தியமாகும் சமுதாயத்தை உருவாக்க நாமனைவரும் இணைந்து பாடுபடுவோம். அப்போதுதான் உண்மையிலேயே அனைவரையும் உள்ளடக்கிய, வளர்ச்சியடைந்த இந்தியாவை நம்மால் உருவாக்க முடியும்.

இதில் எனது மாற்றுத்திறனாளி சகோதர சகோதரிகளின் பெரிய பங்களிப்பை நான் நிச்சயமாக எதிர்பார்க்கிறேன். இந்த நாளில் அனைத்து மாற்றுத் திறனாளி நண்பர்களுக்கும் மீண்டும் ஒருமுறை நல்வாழ்த்துகள்.

கட்டுரையாளர்: நரேந்திர மோடி, பிரதமர்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்