அம்ரித்சர்: பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரில் உள்ள பொற்கோயிலின் வாசலில் அமர்ந்திருந்த அம்மாநில முன்னாள் துணை முதல்வர் சுக்பீர் சிங் பாதல் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். துப்பாக்கிச் சூடு நடத்த முயன்ற நபர் ஒரு முன்னாள் பயங்கரவாதி என்றும், அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஷிரோமணி அகாலி தளம் ஆட்சிக் காலத்தில் சீக்கிய மதத்துக்கு எதிராக செய்த செயல்களுக்காக மத குருமார்களால் விதிக்கப்பட்ட தண்டனையை ஏற்று பஞ்சாப் முன்னாள் துணை முதல்வர் சுக்பீர் சிங் பாதல் உள்ளிட்டோர் பொற்கோயிலில் சேவைப் பணிகளை நேற்று முதல் மேற்கொண்டு வந்தனர். சுக்பீர் சிங் பாதல் பொற்கோயிலின் வாயிலில் காவல் பணியை மேற்கொண்டு வந்தார். அப்போது அவர் அருகே நெருங்கி வந்த நபர் ஒருவர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து சுக்பீர் சிங் பாதல் மீது சுட்டார். அப்போது பாதலுக்கு பாதுகாப்புக்காக நின்றிருந்த நபர், அவரது கையை பிடித்து இழுத்துச் சென்றார். இதனால், சுக்பீர் சிங் பாதல் எவ்வித காயமும் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். சுற்றி இருந்தவர்கள் பலரும் அந்த நபரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து விவரித்த அமிர்தசரஸ் காவல் ஆணையர் குர்பிரீத் சிங் புல்லர், "துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் நரைன் சிங் சவுரா என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவர் ஒரு முன்னாள் பயங்கரவாதி மற்றும் கிரிமினல். அவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்த ஆயுதமும் பறிமுதல் செய்யப்பட்டது. அவர் மீது முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக ஆழமாக விசாரணை நடத்துவோம். எதையும் விட்டுவிட மாட்டோம்" என குறிப்பிட்டார்.
இந்தச் சம்பவம் பஞ்சாபில் சட்டம் - ஒழுங்கு எவ்வாறு மோசமாக உள்ளது என்பதற்கு அடையாளம் என சிரோமணி அகாலி தளம் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான தல்ஜித் சிங் சீமா விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அமிர்தசரஸில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "பஞ்சாப் எங்கே சென்று கொண்டிருக்கிறது என முதல்வர் பக்வந்த் மானை கேட்க விரும்புகிறேன். மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கு மிக மோசமாக இருப்பதை இந்த சம்பவம் காட்டுகிறது. முதல்வர் உடனடியாக பதவி விலக வேண்டும்" என வலியுறுத்தினார்.
» “சம்பல் செல்ல அனுமதி மறுத்தது மக்களவை எதிர்க்கட்சி தலைவரின் உரிமைக்கு எதிரானது” - ராகுல் ஆவேசம்
» எடுத்த சபதத்தை முடித்துக் காட்டிய மகாராஷ்டிர புதிய முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ்!
பஞ்சாபில் கடந்த 2007 முதல் 2012 வரை சிரோமணி அகாலி தளம் ஆட்சியில் இருந்தது. அப்போது பிரகாஷ் சிங் பாதல் முதல்வராகவும், அவரது மகனான சுக்பீர் சிங் பாதல் துணை முதல்வராகவும் இருந்தனர். 2007-ல் சீக்கிய மதத்தை அவமதித்துப் பேசிய தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீமுக்கு மத நிந்தனை வழக்கில் மன்னிப்பு வழங்கப்பட்டது, அவர் தண்டிக்கப்படாதது உள்ளிட்ட குற்றங்கள் அப்போதைய ஆட்சியாளர்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்டு, அது குறித்து சீக்கிய மதத்தின் உயர் அதிகார அமைப்பான அகால் தக்த் விசாரணை நடத்தியது. இதில், பிரகாஷ் சிங் பாதல், சுக்பீர் சிங் பாதல், அப்போது அமைச்சர்களாக இருந்தவர்கள், சிரோமணி அகாலி தளம் கட்சியின் உயர் பொறுப்பில் இருந்தவர்கள் ஆகியோர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு அவர்களுக்கான தண்டனையும் அறிவிக்கப்பட்டது.
பிரகாஷ் சிங் பாதல் மறைந்துவிட்டதை அடுத்து, அவருக்கு முன்பு வழங்கப்பட்ட சீக்கிய சமுதாயத்தின் பெருமை எனும் பட்டம் திரும்பப் பெறப்பட்டது. சுக்பீர் சிங் பாதல் உள்ளிட்டோர் பொற்கோவில் சமையலறையில் பாத்திரங்களை சுத்தம் செய்தல், பக்தர்களின் காலணிகளை துடைத்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும் என தண்டனை விதிக்கப்பட்டது. சுக்பீர் சிங் பாதல் சிரோமணி அகாலி தளம் கட்சித் தலைவர் பொறுப்பில் இருந்து விலக வேண்டும் என்றும் 5 பேர் கொண்ட உயர் மத தலைவர்கள் தண்டனை விதித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தங்கள் மீதான குற்றத்தை ஏற்பதாக சுக்பிர் சிங் பாதல் உள்ளிட்டோர் ஒப்புக்கொண்டனர். தண்டனையை ஏற்கும் விதமாக அவர்கள் அமிர்தசரசில் உள்ள பொற்கோவிலுக்கு நேற்று வந்து தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டதற்கான அட்டையை கழுத்தில் மாட்டிக்கொண்டு சேவைப் பணிகளை மேற்கொண்டனர். இந்நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago