மகாராஷ்டிரா முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் ஏக்நாத் ஷிண்டே - அடுத்தது என்ன?

By செய்திப்பிரிவு

மும்பை: மகாராஷ்டிர சட்டப்பேரவை தேர்தலில் பாஜக கூட்டணி 230+ தொகுதிகளை கைப்பற்றி சாதனை வெற்றி பெற்ற நிலையில் அடுத்த முதல்வர் யார் என்ற பரபரப்பு நீடித்து வந்தது. இந்நிலையில் தற்போதைய முதல்வர் ஏக்நாத் ஷிண்டே இன்று (செவ்வாய்க்கிழமை) தனது பதவியை ராஜினமா செய்தார். ராஜ்பவனில் ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணனை சந்தித்து அவர் ராஜினாமா கடிதத்தை வழங்கினார். அப்போது அவருடன் துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸும் இருந்தார்.

பாஜக அதிக இடங்களைக் கைப்பற்றி உள்ளதால், அக்கட்சியின் மூத்த தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் புதிய முதல்வராக பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஷிண்டே ராஜினாமா நிகழ்ந்துள்ளது. புதிய அரசு அமையும் வரை ஷிண்டே காபந்து முதல்வராக தொடர்வார் எனத் தெரிகிறது.

பாஜகவுக்கு அமோக வெற்றி தந்த தேர்தல்: மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவை தேர்தல் மொத்தம் உள்ள 288 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக கடந்த 20-ம் தேதி நடைபெற்றது. இதில், ஆளும் பாஜக, சிவசேனா (முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அணி), தேசியவாத காங்கிரஸ் (துணை முதல்வர் அஜித் பவார் அணி) அடங்கிய மகாயுதி கூட்டணிக்கும், காங்கிரஸ், சிவசேனா (உத்தவ் தாக்கரே அணி) தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார் அணி) அடங்கிய மகா விகாஸ் அகாடி கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவியது.

மகாயுதி கூட்டணியில் பாஜக 149, ஷிண்டே அணி 81, அஜித் பவார் அணி 59 தொகுதிகளில் போட்டியிட்டன. மகா விகாஸ் அகாடி கூட்டணியில் காங் கிரஸ் 101, உத்தவ் தாக்கரே அணி 95, சரத் பவார் அணி 86 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தின. பாஜக 132 தொகுதிகளை கைப்பற்றி அபார வெற்றி பெற்றது. அதன் கூட்டணி கட்சிகளான சிவசேனாவின் ஷிண்டே அணி 57 தொகுதிகளிலும், தேசியவாத காங்கிரஸின் அஜித் பவார் அணி 41 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. ஒட்டுமொத்தமாக பாஜக கூட்டணி 230+ தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துள்ளது.

கோப்ரி-பச்பகாடி தொகுதியில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே வெற்றி பெற்றார். துணை முதல்வர்களான தேவேந்திர பட்னாவிஸ், நாக்பூர் தெற்கு மேற்கு தொகுதியிலும், அஜித் பவார், பாராமதி தொகுதியிலும் வெற்றி பெற்றனர்.

அடுத்தது என்ன? வெற்றி உறுதியான நிமிடம் முதலே அடுத்த முதல்வர் யார் என்பதே மகாராஷ்டிரா அரசியல் களத்தின் பரபரப்புச் செய்தியாக இருந்தது. பாஜக பிரம்மாண்ட பெரும்பான்மையைப் பெற்றதால் ஏற்கெனவே முதல்வராக இருந்த அனுபவம் கொண்ட பாஜக மூத்த தலைவர் பட்னாவிஸே முதல்வராக்கப்பட வேண்டும் என்று பாஜகவில் கோரிக்கைகள் வலுத்தது. ஷிண்டே தரப்பும் முதல்வர் பதவியில் குறியாக இருந்ததால் எந்த ஒரு தெளிவான அறிவிப்பும் வெளியாகாமல் இருந்தது. இந்நிலையில் இன்று ஏக்நாத் ஷிண்டே ராஜினாமா செய்துள்ளார். ஆனாலும் கூட அடுத்த முதல்வர் பற்றி வெளிப்படையான அறிவிப்புகள் ஏதும் வெளியாகவில்லை. ஷிண்டே ராஜினாமாவால் பட்னாவிஸுக்கு பச்சைக் கொடி காட்டப்பட்டுவிட்டதாக ஊகங்கள் மட்டுமே உலா வருகின்றன. விரைவில் முதல்வர் யார் என்ற அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாக வேண்டும். பதவியேற்பு நாளும் அறிவிக்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பாஜகவினர் மத்தியில் அதிகாரித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

இந்தியா

1 hour ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

1 day ago

மேலும்