சிட்டுக்குருவிகளுக்காக சென்னையில் இயங்கும் அறக்கட்டளை - ‘மனதின் குரலில்’ விவரித்த பிரதமர் மோடி

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: "சென்னையைச் சேர்ந்த கூடுகள் அறக்கட்டளை அமைப்பைச் சேர்ந்த சிலர், சிட்டுக்குருவிகள் நமது அன்றாட வாழ்விலே எத்தனை மகத்துவம் வாய்ந்தவை என்பதை பள்ளிகளுக்குச் சென்று புரியவைத்துக் கொண்டிருக்கிறார்கள்" என்று மனதின் குரலில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

ஒவ்வொரு மாதத்தின் இறுதி ஞாயிறு அன்றும் பிரதமர் நரேந்திர மோடி மனதின் குரல் என்ற வானொலி நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களுக்காக உரையாற்றி வருகிறார். இன்றைய (நவ.24) உரையில் அவர் கூறியதாவது: நண்பர்களே, இன்று மிகவும் சிறப்பான ஒரு தினமாகும். இன்று தேசிய மாணவர் படை (என்.சி.சி) தினமாகும். தேசிய மாணவர் படை என்ற பெயரைக் கேட்டதும் நமக்கு நம்முடைய பள்ளி - கல்லூரி நாட்கள் நினைவுக்கு வந்து விடுகின்றன. நானும் என்.சி.சி-யில் கேடட்டாக இருந்திருக்கிறேன் என்பதால், இதனால் எனக்குக் கிடைத்த அனுபவம் விலைமதிப்பில்லாதது என்பதை என்னால் உறுதியாக கூற முடியும். தேசிய மாணவர் படையானது இளைஞர்களிடத்திலே ஒழுங்கு, தலைமைப்பண்பு மற்றும் சேவையுணர்வை ஏற்படுத்துகின்றது.

நீங்களே கூட உங்கள் அக்கம்பக்கத்தில் பார்த்திருக்கலாம், எப்போதெல்லாம் ஏதாவது பேரிடர் ஏற்படுகிறதோ, அது வெள்ளப்பெருக்காகட்டும், நிலநடுக்கமாகட்டும், வேறு எந்த பேரிடராக இருந்தாலும், அங்கே உதவிக்கரம் நீட்ட என்.சி.சி. கேடட்டுகள் விரைந்து செல்கிறார்கள். இன்று தேசத்தில் தேசிய மாணவர் படையை வலுப்படுத்த தொடர்ந்து செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

2014-ம் ஆண்டில் 14 இலட்சம் இளைஞர்கள் தேசிய மாணவர் படையோடு இணைந்திருந்தார்கள். இப்போது 2024-ல் 20 இலட்சத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் தேசிய மாணவர் படையோடு இணைந்திருக்கிறார்கள். முன்பிருந்ததை விட மேலும் புதிய 5,000 பள்ளிகள் - கல்லூரிகளில் என்.சி.சி. இப்போது செயலாற்றுகிறது; மேலும் ஒரு பெரிய விஷயம் என்னவென்றால், முன்பு தேசிய மாணவர் படையில் பெண் கேடட்டுகளின் எண்ணிக்கை சுமார் 25 சதவீதம் இருந்து வந்தது. இப்போதோ தேசிய மாணவர் படையில் பெண் கேடட்டுகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 40 சதவீதமாக அதிகரித்துவிட்டது.

எல்லையோரப்பகுதிகளில் வசிக்கும் இளைஞர்களை அதிக எண்ணிக்கையில் தேசிய மாணவர் படையோடு இணைக்கும் இயக்கமும் தொடர்ந்து நடந்தேறி வருகிறது. நான் இளைஞர்களிடம் வேண்டுகோள் விடுக்கிறேன், அதிக எண்ணிக்கயில் தேசிய மாணவர் படையோடு உங்களை இணைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் எந்த ஒரு பணிக்குச் சென்றாலும் கூட, என்.சி.சியில் உங்களுக்குக் கிடைத்த ஆளுமைத்திறன் மேம்பாடு உங்கள் பணிக்காலத்தில் தோள் கொடுக்கும்.

நண்பர்களே நீங்கள் அனைவரும் உங்களின் சிறுவயதில் சிட்டுக்குருவியை வீட்டுக் கூரைகளிலோ, மரங்களிலோ கண்டிப்பாகப் பார்த்திருப்பீர்கள், அதன் கீச்சொலியைக் கேட்டிருப்பீர்கள். தமிழிலும் மலையாளத்திலும் இதை குருவி என்றும், தெலுங்கில் இதை பிச்சுகா என்றும், கன்னடத்தில் இதை குப்பி என்றும் அழைக்கிறார்கள்.

அனைத்து மொழிகளிலும், கலாச்சாரத்திலும் சிட்டுக்குருவி தொடர்பான சம்பவங்கள் - கதைகள் இருக்கின்றன. நம்மருகிலே உயிரிபன்முகத்தன்மையைப் பராமரிப்பதில் சிட்டுக்குருவிக்கு மிக மகத்துவமான பங்களிப்பு உண்டு; ஆனால் இன்று நகர்ப்புறங்களில் மிக அரிதாகவே சிட்டுக்குருவி காணப்படுகிறது.

பெருகிவரும் நகர்ப்புறங்கள் காரணமாக சிட்டுக்குருவி நம்மை விட்டுத் தொலைவாகச் சென்றுவிட்டது. இன்றைய தலைமுறையைச் சேர்ந்த குழந்தைகளில் பலர், சிட்டுக்குருவியை படங்களிலோ, காணொளிகளிலோ மட்டுமே பார்த்திருக்கிறார்கள். இப்படிப்பட்ட குழந்தைகளின் வாழ்விலே, இந்த இனிமையான பறவையை மீண்டும் மீட்டெடுக்க, சில வித்தியாசமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சென்னையைச் சேர்ந்த கூடுகள் அறக்கட்டளை சிட்டுக்குருவியின் எண்ணிக்கையைப் பெருக்க, பள்ளிக் குழந்தைகளைத் தங்கள் இயக்கத்தில் கலந்து கொள்ளச் செய்திருக்கிறார்கள். இந்த அமைப்பைச் சேர்ந்த சிலர், சிட்டுக்குருவிகள் நமது அன்றாட வாழ்விலே எத்தனை மகத்துவம் வாய்ந்தவை என்பதைப் பள்ளிகளுக்குச் சென்று புரியவைத்துக் கொண்டிருக்கிறார்கள். சிட்டுக்குருவியின் கூட்டை எவ்வாறு அமைத்துக் கொடுப்பது என்பது தொடர்பாக பயிற்சிகளை அளிக்கிறார்கள்.

இதற்காக இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள், சிறிய அளவிலான மரவீட்டை உருவாக்க குழந்தைகளுக்குப் பயிற்சி அளிக்கிறார்கள். இதிலே சிட்டுக்குருவி வசிக்கவும், உண்ணவும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இந்த அமைப்பை எளிதாக வெளிப்புறச் சுவரிலோ, மரத்திலோ பொருத்திவிட முடியும். குழந்தைகள் இந்த இயக்கத்தில் மிகுந்த உற்சாகத்தோடு பங்கெடுத்துக் கொண்டார்கள், சிட்டுக்குருவிகளுக்கான கூடுகளை அமைக்கத் தொடங்கினார்கள்.

கடந்த நான்கு ஆண்டுகளிலே இந்த அமைப்பு, சிட்டுக்குருவிகளுக்கென இதேபோல் 10,000 கூடுகளை உருவாக்கியிருக்கிறது. கூடுகள் அறக்கட்டளையின் இந்த முன்னெடுப்பு காரணமாக அக்கம்பக்கப் பகுதிகளில் சிட்டுக்குருவியின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. நீங்களும் உங்கள் அருகிலே நடைபெறும் இப்படிப்பட்ட முயற்சிகளில் ஈடுபட்டால், சிட்டுக்குருவி கண்டிப்பாக மீண்டும் நமது வாழ்க்கையின் அங்கமாக ஆகி விடும்.

கர்நாடகத்தின் மைசூரூவில் இருக்கும் ஒரு அமைப்பு, குழந்தைகளுக்காக Early Bird என்ற பெயரிலான இயக்கத்தைத் தொடங்கி இருக்கிறது. இந்த அமைப்பானது பறவைகளைகளைப் பற்றி குழந்தைகளுக்குப் புரியவைக்க, சிறப்பானதொரு நூலகத்தை நடத்துகிறது. இதுமட்டுமல்ல, குழந்தைகளிடம் இயற்கையின்பால் பொறுப்புணர்வை ஏற்படுத்தவும் இயற்கைக்கல்வி கிட் ஒன்றைத் தயார் செய்திருக்கிறது.

இந்த கிட்டிலே, குழந்தைகளுக்கென கதைப்புத்தகம், விளையாட்டுக்கள், செயல்பாட்டுத் தாள் (activity sheet) மற்றும் திருகுவெட்டுப் புதிர்கள் ஆகியன அடங்கும். இந்த அமைப்பு, நகரத்தில் வசிக்கும் குழந்தைகளை கிராமங்களுக்கு அழைத்துச் செல்கிறது. அங்கே பறவைகளைப் பற்றி அவர்களுக்கு எடுத்துச் சொல்கிறது.

இது போன்ற முயற்சிகள் மூலம் குழந்தைகளிடம் அவர்களின் அக்கம்பக்கத்தில் இருப்பவற்றைக் கண்டு, புரிந்து கொண்டு பல கண்ணோட்டங்களை ஏற்படுத்த முடியும். மனதின் குரலின் நேயர்களும் கூட இத்தகைய முயற்சிகளைச் செய்து குழந்தைகளின் புரிதலை மேம்படுத்த இயலும்." இவ்வாறு பிரதமர் பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

மேலும்