‘ஒவ்வொரு ரூபாய்க்கும் மதிப்பு’ - ஜார்க்கண்ட்டில் இண்டியா கூட்டணி ஆட்சியை தக்க வைத்தது எப்படி?

By செய்திப்பிரிவு

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான ஆளும் இண்டியா கூட்டணி ஆட்சியை தக்க வைத்துள்ளது. தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளை தகர்த்து, இந்த மகத்தான வெற்றி சாத்தியமானதன் பின்புலம் பார்ப்போம்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் 81 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளுக்கு கடந்த 13, 20 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றன. ஜார்க்கண்டில் ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் இணைந்த இண்டியா கூட்டணிக்கும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவியது.

ஆரம்பத்தில் வாக்கு எண்ணிக்கை நிலவரம் என்னவோ பாஜக கூட்டணிக்கே சாதகமாக இருந்தது. ஆனால், போகப்போக இண்டியா கூட்டணி முன்னிலை பெற்று வெற்றி முகம் கண்டது. ஜார்க்கண்டில் ஆட்சியமைக்க 41 இடங்கள் தேவை என்ற நிலையில், இண்டியா கூட்டணி கிட்டத்தட்ட 56 இடங்களை வசப்படுத்துகிறது. இதனால், அங்கு ஆட்சி தக்கவைக்கப்பட்டுள்ளது. இண்டியா கூட்டணியில் ஹேமந்த் சோரனின் ஜெஎம்எம் 34 இடங்களையும், காங்கிரஸ் 16 இடங்களையும், ஆர்ஜேடி 4 இடங்களையும் கைப்பற்றுகின்றன. 2019 தேர்தலில் 25 இடங்களைக் கைப்பற்றிய பாஜக இம்முறை 21 இடங்களை மட்டுமே வசப்படுத்துகிறது.

பரஸ்பரம் குற்றச்சாட்டுகளுக்கு பஞ்சம் இல்லாத ஜார்க்கண்ட் தேர்தல் களத்தில் இண்டியா கூட்டணி ஆதிக்கம் செலுத்தியது. 2019 மக்களவைத் தேர்தலில், அனைத்து ஜார்க்​கண்ட் மாணவர் சங்கத்​துடன் கூட்டணி அமைத்து 12 இடங்களில் வென்ற பாஜகவால், அதே ஆண்டின் இறுதியில் நடந்த ஜார்க்​கண்ட் சட்டமன்றத் தேர்தலில் தனித்துக் களம் கண்டு 25 இடங்களை மட்டுமே வெல்ல முடிந்தது.

அந்தத் தேர்தலில், காஷ்மீரில் 370-ஆவது சட்டப்பிரிவு ரத்து, ராமர் கோயில், தேசியக் குடிமக்கள் பதிவேடு, குடியுரிமைத் திருத்தச் சட்டம் என பாஜக முன்வைத்த தேர்தல் விவகாரங்கள் எடுபட​வில்லை. இவற்றுக்கும் ஜார்க்​கண்ட் அரசியல் களத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று ஹேமந்த் சோரன் முன்வைத்த பதிலடி வியூகம் பாஜகவுக்குத் தோல்வியைத் தந்தது.

எடுபடாத ‘ஊடுருவல்’ பிரச்சாரம்: இப்போது நடந்து முடிந்த ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தல் களத்திலோ, ‘வங்கதேசத்​தில் இருந்து வரும் சட்டவிரோதக் குடியேறிகளால் ஜார்க்​கண்​டுக்கு பல்வேறு பிரச்​சினைகள் ஏற்படுகிறது’ என்ற குற்றச்சாட்டுகளையே தொடர்ந்து முன்வைத்து வந்தது. ஜார்க்​கண்ட் மக்கள்​தொகையில் பழங்குடிகள் 28 சதவீதம், முஸ்லிம்கள் 14 சதவீதம் ஆகும். இந்தச் சூழலில், முஸ்லிம்​களைப் பழங்குடி​யினருக்கு எதிராக நிறுத்தும் உத்தியை பாஜக கையாண்டது. ஆனால், இது எதுவுமே பெரிதாக எடுபடவில்லை என்பதையே தற்போதைய தேர்தல் முடிவுகள் சொல்கின்றன.

2014 சட்டப்பேரவைத் தேர்தலில் 28 பழங்குடித் தனித் ​தொகு​தி​களில் 12-ஐ பாஜக கைப்பற்றியது. எனினும் 2019 சட்டமன்றத் தேர்தலில் வெறும் இரண்டே இடங்களில்தான் பாஜக வென்றது. பழங்குடி​யினரின் நிலங்​களைப் பிறர் வாங்கு​வதைத் தடை செய்யும் சோட்டா நாக்பூர் குத்தகைச் சட்டம், சந்தால் பர்கானா குத்தகைச் சட்டங்​களில் 2016-இல் திருத்தம் மேற்கொண்டது அப்போதைய ரகுவர் தாஸ் தலைமையிலான பாஜக அரசு.

இதன் மூலம் பழங்குடி​யினர் பகுதி​களில் பள்ளிகள், மருத்​துவ​மனைகள் உள்ளிட்ட உள்கட்​டமைப்பு​களைக் கொண்டு​வரு​வதுடன், தனியார் நிறுவனங்கள் தொழில் தொடங்க அனுமதி​யளிக்​கவும் அரசு திட்ட​மிட்டது. பழங்குடி​யினர் நிலங்கள் கையகப்​படுத்​தப்​பட்டன. இதைக் கண்டித்து ‘பத்தல்கடி’ எனும் இயக்கத்தை ஆரம்பித்து பழங்குடி​யினர் போராடினர். அவர்கள் மீது வழக்கு தொடர்ந்தது பாஜக அரசு. 10,000 பேர் மீது தேசத் துரோக வழக்குகள் தொடரப்​பட்டன. பழங்குடி​யினரின் அதிருப்​தியும் கோபமும் 2019 சட்டமன்றத் தேர்தலில் எதிரொலித்தன.

இந்தப் பின்னணியில்தான், இந்தத் தேர்தலில் பழங்குடிகளின் வாக்கு​களைக் கவர்வதில் முழுமூச்​சுடன் பாஜக இறங்கியது. இந்தப் பணியில், அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா களமிறக்​கப்​பட்​டனர். வங்கதேச சட்டவிரோதக் குடியேறிகள் மேற்கு வங்கம் வழியாக, ஜார்க்​கண்​டுக்கு வருவதாக பாஜக தொடர்ந்து குற்றம்​சாட்​டி வந்தது. அந்நியர்கள் மீதான பழங்குடி​யினரின் எதிர்ப்பைக் கொள்கை​யாகவே வைத்திருந்த சுதந்​திரப் போராட்ட வீரர் பிர்ஸா முண்டாவை பாஜகவினர் போற்றிப் புகழ்​ந்தனர். பொது சிவில் சட்டத்தைக் கொண்டு​வருவது; அதில் பழங்குடி​யினருக்கு விலக்கு அளிப்பது என பல வியூகங்களை பாஜக கையாண்டது.

ஆனால், பாஜகவின் குற்றச்சாட்டுகளையே தங்களது ஆயுதமாக மாற்றியது இண்டியா கூட்டணி. ‘வங்கதேச சட்டவிரோதக் குடியேறிகள் ஊடுரு​வு​கிறார்கள் என்றால் மத்திய அரசும் உள்துறையும் என்ன செய்து​கொண்​டிருக்​கின்றன? என இண்டியா கூட்டணி கேள்வி எழுப்பியது உள்ளூர் மக்களின் கவனத்தை ஈர்த்தது.

அத்துடன், ‘பத்தல்கடி’ போராளிகள் மீதான வழக்குகளை ரத்து செய்த நடவடிக்கையும் பழங்குடி​யினர் மத்தியில் ஹேமந்த் சோரன் மீதான செல்வாக்கைத் தக்கவைத்​தது. அதேவேளையில், ஊழல் குற்றச்​சாட்டுகளை முன்வைத்து ஹேமந்த் சோரன் அரசு மீது மத்திய அரசின் விசாரணை அமைப்புகள் நடத்திவரும் சோதனைகளும் இந்தத் தேர்தல் களத்தில் பேசுபொருளாகின.

சுமார் 9 ஏக்கர் நிலத்தைச் சட்டவிரோத​மாகக் கையகப்​படுத்​தியதாக ஹேமந்த் சோரன் மீது 2023-இல் அமலாக்கத் துறை குற்றம்​சாட்டிய நிலையில், அவர் ராஜினாமா செய்ய நேர்ந்தது. கைது செய்​யப்பட்ட அவர் ஜாமீனில் வெளிவந்து மீண்டும் முதல்​வ​ராகிவிட, அவருக்குப் பதில் முதல்வராக இருந்த சம்பயி சோரன் அதிருப்​தி​யடைந்து பாஜகவில் ஐக்கிய​மாகி​விட்​டார்.

தேர்தல் நெருக்​கத்​தில், ராஞ்சியில் ஹேமந்த் சோரனின் உதவியாளர் சுனில் ஸ்ரீவஸ்தவாவின் வீடு உள்ளிட்ட 9 இடங்களில் வருமான வரித் துறை சோதனை நடத்தியதும் பரபரப்​பாகப் பேசப்​பட்டது. இதெல்லாம் ‘பாஜகவின் அரசியல் பழிவாங்கல்’ என்ற இண்டியா கூட்டணியின் பிரச்சாரம் எடுபட்டது. அதேபோல், சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்​படும் என இண்டியா கூட்டணி முன்வைத்​த வாக்குறுதிக்கும் ஜார்க்கண்டில் நல்ல வரவேற்பு கிட்டியது.

இண்டியா கூட்டணியின் உத்திகள்: ‘சாதிவாரிக் கணக்கெடுப்பை முன்வைப்பதன் மூலம் எஸ்சி, எஸ்டி, ஓபிசி சமூகங்​களுக்கு இடையிலான ஒற்றுமையைக் குலைக்க இண்டியா கூட்டணி முயல்கிறது’ என்று ஒவ்வொரு தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திலும் பிரதமர் மோடி முழங்கியதை ஜார்க்கண்ட் மக்கள் கண்டுகொள்ளவில்லை என்பதையே இந்தத் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.

அதேபோல், காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்த 370-ஆவது சட்டப்பிரிவு திரும்பக் கொண்டு​வரப்​படும் என ஓமர் அப்துல்லா அரசு கொண்டுவந்த தீர்மானம், ஜார்க்​கண்ட் தேர்தல் களத்திலும் அதிர்​வுகளை ஏற்படுத்​தியது.

ஜார்க்​கண்ட் வாக்காளர்​களில் 40 சதவீத்துக்கும் மேற்பட்டோர் பெண்கள். முதல் முறை வாக்காளர்​களில் 56 சதவீதம் பேர் பெண்கள். இந்நிலை​யில், ‘மைன்யா சம்மான் யோஜனா’ என்னும் திட்டத்​தின்கீழ் மகளிருக்கு மாதம் 1,000 ரூபாய் என வழங்கப்​பட்டுவந்த உதவித்​தொகை, 2,500 ரூபாயாக உயர்த்​தப்​படும் என ஜார்க்​கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி வாக்குறுதி, குடும்பங்களின் வாக்குகளை கொத்துக் கொத்தாக கவர்ந்திட உதவியிருக்கிறது.

அதேபோல், 10 லட்சம் இளைஞர்​களுக்கு வேலைவாய்ப்பு, ஒவ்வொரு நபருக்கும் மாதம் தலா ஏழு கிலோ உணவு தானியம், 15 லட்சம் ரூபாய்க்கான சுகாதாரக் காப்பீடு, 450 ரூபாய்க்கு எரிவாயு சிலிண்டர் என்பன உள்ளிட்ட வசீகர வாக்குகளை இண்டியா கூட்டணி அள்ளி வீசியதும் கவனிக்கத்தக்கது.

இலவசத் திட்டங்களை எதிர்க்கும் பாஜகவும், மகளிருக்கு மாதம் 2,100 ரூபாய் உரிமைத் தொகை, 500 ரூபாய்க்கு எரிவாயு சிலிண்டர் உள்ளிட்ட வாக்குறு​திகளை அளித்​திருந்தாலும், ஹேமந்த் பக்கமே மக்களின் நம்பிக்கை மிகுந்திருந்தது. இதனிடையே, ஹேமந்த் சோரன் கைது செய்​யப்​பட்​டதைத் தொடர்ந்து அவரது மனைவி கல்பனா சோரன் அரசியல் பயணத்தைத் தொடங்​கினார். கல்பனா சோரன் கலந்து​கொள்ளும் கூட்டங்​களில் அதிக அளவிலான மக்கள் குவிந்தனர். குறிப்பாக, பெண்கள் அதிகம் கூடியதையும் இந்தத் தேர்தல் களத்தில் கவனிக்க வேண்டும்.

“ஹேமந்த் பாபு... உங்கள் ஆட்சியின் நாள்கள் எண்ணப்​படு​கின்றன. உங்கள் தோல்வி உறுதி” என்று ஜார்க்கண்ட் தேர்தல் களத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சவால் விட்டு முழங்கியிருந்தார். அதற்கு, “ஒரு பழங்குடி முதல்​வரிடம் இருந்து பதவியைப் பறிப்​ப​தற்கு முழுமூச்சுடன் பாஜக முயல்​கிறது; அந்தக் கட்​சியின் வேட்பாளர்​களின் எண்ணிக்கை​யைவிட அதிக எண்ணிக்கையிலான பாஜக தலைவர்கள் பிரச்​சா​ரத்தில் ஈடுபட்​டிருக்​கின்​றனர்” என்று இண்டியா கூட்டணித் தலைவர்கள் பதிலடி கொடுத்து வந்தனர்.

குறிப்பாக, “பழங்​குடி​யினரின் நிலங்​களைப் பறித்​துக்​கொள்ள வங்கதேச சட்டவிரோதக் குடியேறிகளை ஹேமந்த் சோரன் அரசு அனுமதிக்​கிறது” என்று பாஜகவின் தொடர் குற்றச்சாட்டு கடைசி வரை எடுபடாமல் போனதையே இந்தத் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. ஆனால், “ஜார்க்​கண்டின் கனிம வளங்களைக் கொள்ளை​யடிக்கவே ஆட்சியைப் பிடிக்க பாஜக முயல்​கிறது” என்ற இண்டியா கூட்டணி பதிலடியை அம்மாநில மக்கள் ஏற்றுக்கொண்டனர் என்பதையே அவர்கள் வழங்கிய தீர்ப்பு பறைசாற்றி இருக்கிறது.

‘ஒவ்வொரு ரூபாய்க்கும் மதிப்பு’ - ஜார்க்கண்ட் தேர்தல் வெற்றி குறித்து முதல்வர் ஹேமந்த் சோரன் கூறும்போது, “நாங்கள் கொண்டு வந்த மக்கள் நலத்திட்டங்களால் எங்களுக்கு வெற்றி கிடைத்துள்ளது. இந்தத் தேர்தல் மிகுந்த சவாலாகவும், கடினமாகவும் இருக்கும் என்று எங்களுக்குத் தெரியும். எனவே, எங்கள் அணியினரை களமிறக்கி வெற்றி இலக்குகளை அமைத்தோம். அதேபோல் எங்கள் அணியின் மிகச் சிறந்த களப்பணியாற்றி நாங்கள் விரும்பியதை எங்களுக்குத் தந்துள்ளனர்.

நான் தேர்தலில் வெற்றி பெறக் கூடாது என்பதற்காக என் மீது பொய் வழக்கு, ஊழல் வழக்குகளை தொடர்ந்து என்னை செயல்பட விடாமல் தடுத்தனர். ஆனால் இன்று உண்மைக்கு வெற்றி கிடைத்துள்ளது. நாங்கள் கொண்டு வந்த மக்கள் நலத்திட்டங்களால் எங்களுக்கு வெற்றி கிடைத்துள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் வங்கதேச மக்களை ஊடுருவச் செய்கிறோம் என்று பொய்யான பல கதைகளை பாஜக தலைவர்கள் கூறினர். பழங்குடியின மக்களின் வாக்குகளை சிதறடிக்க இதுதான் சரியான வழி என்று நினைத்தார்கள். ஆனால், அவர்கள் எண்ணம் நிறைவேறவில்லை.

இந்தத் தேர்தலில் அதிக அளவுக்கு அழுத்தம் இருந்தது. அது எவ்வளவு என்று என்னால் சொல்ல முடியாது. இதுதொடர்பாக நான் பேசினால், உள்ளுக்குள் ரத்தம் பெருக்கெடுத்து ஓடும். அது மிகவும் கடினம். ஆனால், இதுபோன்ற கடினமான தேர்தலை மீண்டும் சந்திக்க முடியாது என்று மட்டும் என்னால் நிச்சயம் கூற முடியும். நாட்டில் உள்ள மிகவும் ஏழ்மையான மாநிலங்களில் எங்களது மாநிலமும் ஒன்று. இங்கு ஒவ்வொரு ரூபாய்க்கும் மதிப்பு உள்ளது. சமூகப் பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தோம். அதற்கு வெற்றி கிடைத்துள்ளது” என்று ஹேமந்த் சோரன் கூறினார்.

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் பலவும் ஜார்க்கண்டில் பாஜக கூட்டணியே ஆட்சியை கைப்பற்றும் என்று சொல்லியிருந்தன. அதற்கு நேர்மாறாக, இண்டியா கூட்டணி ஆட்சியைத் தக்கவைத்திருப்பது உண்மையிலேயே பாஜகவுக்கு ‘ஷாக்’கான ரிசல்ட்தான்!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்