மகாராஷ்டிர தேர்தலில் பாஜக கூட்டணியின் அமோக வெற்றிக்கு வித்திட்ட 5 காரணங்கள் - ஒரு பார்வை

By பால. மோகன்தாஸ்

மகாராஷ்டிராவில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளது. மொத்தமுள்ள 288 சட்டப்பேரவைத் தொகுதிகளில், மகாராஷ்டிராவில் ஆளும் பாஜக, ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா, அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் அடங்கிய மகாயுதி கூட்டணி 230 ப்ளஸ் தொகுதிகளை வசப்படுத்தியுள்ளது. காங்கிரஸ், உத்தவ் தாக்கரேவின் சிவசேனா, சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் அடங்கிய மகா விகாஸ் அகாடி கூட்டணி கிட்டத்தட்ட 50 தொகுதிகளை எட்டவே திணறியது. பாஜக கூட்டணியின் இந்த மகத்தான வெற்றியின் பின்னணி குறித்து பார்ப்போம்.

மகாராஷ்டிரா தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் தலைமையிலான மகா விகாஸ் அகாதி கூட்டணிக்கு பேரிடியாக அமைந்துள்ளது. சில மாதங்களுக்கு முன்பு நடந்த நாடாளுமன்றத் தேர்தல், மகாராஷ்டிராவில் காங்கிரஸ் தலைமையிலான மகா விகாஸ் கூட்டணிக்கு மிகப் பெரிய நம்பிக்கையை தந்தது. மொத்தமுள்ள 48 தொகுதிகளில் மகா விகாஸ் அகாதி 30 தொகுதிகளை கைப்பற்றியது. தனிப்பெரும் கட்சியாக காங்கிரஸ் 13 தொகுதிகளில் வெற்றி பெற்றது. காங்கிரஸுடன் கூட்டணி அமைத்த உத்தவ் தாக்கரே 9 தொகுதிகளில் வெற்றி பெற்றார். சரத் பவார் 8 தொகுதிகளில் வெற்றி பெற்றார். மறுபக்கம் மகாயுதி கூட்டணியில் பாஜக 9, சிவ சேனா 7, அஜித் பவார் 1 என மொத்தம் 17 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றன.

இது ஒருபுறம் என்றால், கடந்த 2014 முதல் உத்தவ் தாக்கரே முதல்வராக இருந்த இரண்டரை ஆண்டுகள் தவிர்த்து, பாஜக தலைமையிலான அணியே இம்மாநிலத்தை தொடர்ச்சியாக ஆட்சி செய்து வருகிறது. மாநில ஆட்சியாளர்களுக்கு எதிரான மக்களின் வலுவான அதிருப்தி காரணமாகவே நாடாளுமன்றத் தேர்தலில் மகாராஷ்டிராவில் மோடிக்கு போதிய ஆதரவு கிட்டவில்லை என்று கணிப்பாளர்கள் கூறினார்கள். சட்டப்பேரவைத் தேர்தலின்போது பாஜக கூட்டணி மோசமான தோல்வியை சந்திக்கும் என்றும் கூறப்பட்டது. ஆனால், மக்கள் அளித்துள்ள உத்தரவு முற்றிலும் மாறுபட்டதாக உள்ளது.

மகாயுதி கூட்டணிக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றி: தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் பாஜக கூட்டணி ஆட்சி அமைக்க வாய்ப்பு உள்ளதாகக் கூறின. ஆனாலும், இத்தனை பெரிய வெற்றி கிடைக்கும் என்று யாரும் கணிக்கவில்லை. இந்த தேர்தல் வெற்றி ஏற்க முடியாததாக இருக்கிறது என்றும், மறு தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் தேர்தல் முடிவுகள் வெளியான சில மணிநேரங்களிலேயே வலியுறுத்தினார் உத்தவ் தாக்கரேவின் வலது கரமாக இருக்கும் சஞ்சய் ராவத்.

மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய சஞ்சய் ராவத், “இது மகாராஷ்டிரா மக்களின் முடிவாக இருக்க முடியாது. மகாராஷ்டிரா மக்கள் என்ன விரும்புகிறார்கள் என்பது எங்களுக்குத் தெரியும். ஏதோ சதி நடந்துள்ளது. எங்கள் தொகுதிகளில் சிலவற்றை திருடிவிட்டார்கள். இது பொதுமக்களின் முடிவாக இருக்க முடியாது. பொதுமக்களும் கூட இந்த முடிவுகளை ஏற்கவில்லை. இந்த மாநில மக்கள் நேர்மையற்றவர்கள் அல்ல. மகாராஷ்டிர மக்கள் மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது." என தெரிவித்தார். ஆனால், காங்கிரஸ் தலைவர்களோ, சரத் பவாரோ, உத்தவ் தாக்கரேவோ தேர்தல் முடிவுகள் தொடர்பாக மாலை வரை எதுவும் தெரிவிக்கவில்லை.

சஞ்சய் ராவத்தின் இந்த கருத்தை தேவேந்திர ஃபட்னவிசும் ஏக்நாத் ஷிண்டேவும் திட்டவட்டமாக மறுத்துள்ளனர். செய்தியாளர்களிடம் பேசிய தேவேந்திர ஃபட்னவிஸ், "நான் சஞ்சய் ராவத்துக்கு எதிர்வினையாற்றவில்லை. ஆனால், அது அவசியம் என்பதால் இதற்கு பதில் அளிக்கிறேன். ஜார்க்கண்டில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா வெற்றி பெற்றுள்ளது. அது மிகவும் நியாயமான முறையில் பெற்ற வெற்றி; அங்கு தேர்தல் நேர்மையாக நடந்தது; அங்கு தேர்தல் ஆணையம் சிறப்பாக செயல்பட்டுள்ளது; அங்குள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் ஹேக் செய்ய முடியாத அளவுக்கு வலுவாக இருந்தன,

ஜார்க்கண்டில் ஜனநாயகம் வெற்றி பெற்றுள்ளது என்று கூறுபவர்கள், மகாராஷ்டிராவில் நாங்கள் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளதால், இங்கு தேர்தல் ஆணையம் ஒரு பாரபட்சமாக மாறிவிட்டது; இங்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் ஹேக் செய்யப்பட்டுள்ளன; இங்கு ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டுள்ளது என்று கூறுவது ஏற்க முடியாதது. இவ்வாறு கூறுவதில் எந்த சிந்தனையும் இல்லை. இதுபோல் கூறுபவர்கள் தங்களை சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார். இதே கருத்தை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவும் கூறியுள்ளார். அதோடு, நாடாளுமன்றத் தேர்தலில் தங்கள் அணிக்கு ஏற்பட்ட பின்னடைவையும் அவர் சுட்டிக்காட்டினார்.

வெற்றிக்கான 5 முக்கிய காரணங்கள்: நாடாளுமன்றத் தேர்தலில் பின்னடைவை சந்தித்த மகாயுதி கூட்டணி இம்முறை மிகப் பெரிய வெற்றியை பெற்றது எப்படி என்ற கேள்வி முக்கியத்துவம் பெற்றுள்ளது. இதற்கு 5 முக்கிய காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன. ஒன்று, அன்புச் சகோதரி (லட்கி பஹின்) திட்டம். இந்த திட்டத்தை கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கியது மகாராஷ்டிர அரசு. 21 வயது முதல் 65 வயைது வரையிலான ஏழை மற்றும் நடுத்தர வர்க்க பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.1,500 வழங்கும் இந்த திட்டம் பெண் வாக்காளர்களை பெரிதும் ஈர்த்துள்ளது. அதோடு, மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்த உதவித் தொகை ரூ. 2,100 ஆக உயர்த்தப்படும் என்றும் மகாயுதி கூட்டணி அறிவித்தது. இதன் காரணமாக, கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது 59.26% ஆக இருந்த பெண்களின் வாக்குச் சதவீதம் இம்முறை 65.21% ஆக உயர்ந்திருந்தது.

இரண்டாவது, மராத்தா சமூகம் முன்வைத்த இட ஒதுக்கீடு கோரிக்கைக்கு பாஜக சாதகமாக எதிர்வினை ஆற்றியது. இதன் காரணமாகவும், வீர சிவாஜியின் பெருமையை தொடர்ந்து போற்றும், மராத்தா பெருமிதத்தை தூக்கிப்பிடிக்கும் கட்சி என்ற அடையாளம் அதற்கு இருப்பதாலும் மராத்தா சமூகத்தினரின் உணர்வுபூர்வ ஆதரவை அக்கட்சி திரட்டி உள்ளது. இதன் காரணமாக மராத்தா சமூகம் பெரும்பான்மையாக உள்ள 100-ல் 80 தொகுதிகளை அது கைப்பற்றி உள்ளது.

மூன்றாவதாக, மராத்தா அல்லாத பிற ஓபிசி சமூகங்களின் நலன்களுக்கான திட்டங்களையும் பாஜக தனது தேர்தல் பிரச்சாரத்தில் முன்வைத்தது. இதன்மூலம், சமூக நீதிக் கொள்கையை வலிமையாக பின்பற்றும கட்சியாக அது தன்னை முன்னிறுத்தியது.

நான்காவதாக, ஒற்றுமையாக இருந்தால் மட்டுமே பாதுகாப்பாக வாழ முடியும் என்ற பாஜகவின் தேர்தல் பிரச்சாரம் அக்கட்சிக்கு பரவலான இந்து வாக்காளர்களை திரட்டித்தந்தது. முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்பது உள்பட இஸ்லாமிய அமைப்பு ஒன்றின் பல்வேறு கோரிக்கைகளை காங்கிரஸ் ஏற்றுக்கொண்டதாக பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்பட பாஜக தலைவர்கள் பலரும் பிரச்சாரத்தின்போது தெரிவித்தார்கள். காங்கிரஸ் இந்துக்களுக்கு எதிரானது என்ற நீண்ட கால தொடர் பிரச்சாரத்தின் பின்னணியில் இந்த புதிய பிரச்சாரம் காங்கிரசுக்கு எதிராக இந்துக்களை அணி திரட்ட உதவியது.

ஐந்தாவது மற்றும் முக்கிய காரணம் ஆர்எஸ்எஸ். மகாராஷ்டிரவில் வலிமையான அடித்தளத்தைக் கொண்ட அமைப்பு ஆர்எஸ்எஸ். அதன் தலைமையகம் மகாராஷ்டிராவின் நாக்பூரில்தான் உள்ளது. ஆர்எஸ்எஸ் மட்டுமல்லாது ஏபிவிபி, விஸ்வ இந்து பரிஷத், பாரதிய மஸ்தூர் சங்கம் உள்பட அதன் பிற துணை அமைப்புகளும் வலிமையாக இருக்கக் கூடிய மாநிலம் என்பதால் அவற்றின் ஆதரவும், களப்பணியும் பாஜக அணிக்கு மிகப் பெரிய பலமாக அமைந்தது.

அடுத்த முதல்வர் யார்? - பாஜக அணி மிகப் பெரிய வெற்றி பெற்றுள்ள நிலையில், அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வி தற்போது வலுவாக எழுந்துள்ளது. தேர்தலுக்கு முன்பாக முதல்வர் வேட்பாளரை மகாயுதி கூட்டணி அறிவிக்கவில்லை. மாறாக, வெற்றி பெற்ற பிறகு முதல்வர் யார் என்பது குறித்து முடிவு செய்வோம் என்ற முடிவை அக்கூட்டணி எடுத்தது.

கடந்த முறை ஜூனியர் பார்ட்னராக இருந்தபோதும் மகாராஷ்டிர அரசியலில் தனது வியூகத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுவிட்டுவிடக் கூடாது என்பதற்காக சிவசேனாவை உடைத்துக்கொண்டு வந்த ஏக்நாத் ஷிண்டேவை முதல்வராக்கியது பாஜக. தேர்தலுக்குப் பிறகான புதிய முடிவுகளும் புதிய களமும் பாஜகவுக்கு முற்றிலும் சாதகமாக மாறி உள்ளது. இதை ஏக்நாத் ஷிண்டேவும், அஜித் பவாரும் உணர்ந்தே இருப்பார்கள். இந்த தேர்தல் இவர்கள் இருவருக்கும் சாதகமாக இருந்தாலும் 'பெரிய அண்ணன்' பாஜகதான் என்பதில் சந்தேகம் இல்லை. இந்த தேர்தல் மூலம் தனது அரசியல் எதிரிகளை பாஜக ஓரம் கட்டி இருக்கிறது. மகாராஷ்டிராவில் தான் ஒரு வலுவான சக்தி என்பதையும் தனிப்பெரும் கட்சி என்பதையும் அது மீண்டும் நிரூபித்திருக்கிறது.

சிவ சேனாவும், தேசியவாத காங்கிரஸும் இரண்டாக உடைந்த பிறகு நடைபெற்ற முதல் சட்டப்பேரவைத் தேர்தல் என்பதால், இந்த தேர்தல் முடிவுகள் உத்தவ் தாக்கரேவுக்கும் சரத் பவாருக்கும் தனிப்பட்ட இழப்பாக மாறி இருக்கிறது. உண்மையான சிவ சேனா ஏக்நாத் ஷிண்டே தலைமையில்தான் இருக்கிறது என்றும் அதேபோல், உண்மையான தேசியவாத காங்கிரஸ் அஜித் பவார் தலைமையில்தான் இருக்கிறது என்றும் அவரது ஆதரவாளர்கள் உரக்க குரல் கொடுக்க இது வாய்ப்பாக அமைந்துள்ளது.

கட்சி தங்கள் வசம் இருக்குமா, தொண்டர்படை தங்களோடு தொடருமா என்ற அச்சம் ஏக்நாத் ஷிண்டேவையும் அஜித் பவாரையும் விட்டு விலகி இருக்கிறது. அவர்களின் அரசியல் எதிர்காலம் இந்த தேர்தல் முடிவுகளால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில், பாஜக-வுக்கு உதவியதோடு மட்டுமல்லாமல், அக்கட்சியால் பலன் பெற்றவர்களாகவும் இவர்கள் மாறி இருக்கிறார்கள்.

இந்த பின்னணியில் பாஜகவைச் சேர்ந்தவர் முதல்வராவதை ஏற்க மறுக்கும் நிலையில், ஷிண்டேவோ அஜித் பவாரோ இருப்பார்கள் என தோன்றவில்லை. மத்தியில் பாஜக வலுவாக இருக்கும் நிலையில், மாநிலத்திலும் அக்கட்சி மிகப் பெரிய வெற்றியை பெற்றுள்ள நிலையில், அவர்கள் பாஜக முதல்வரை ஏற்பார்கள் என்றே பலரும் கணிக்கிறார்கள். இந்தக் கணிப்பு உண்மையாகும் பட்சத்தில் 3-வது முறையாக முதல்வர் பதவியை ஏற்பார் தேவேந்திர ஃபட்னாவிஸ். ஏக்நாத் ஷிண்டேவும் அஜித் பவாரும் துணை முதல்வர்களாவார்கள் என எதிர்பார்க்கலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்