இந்தியாவின் முக்கியத் தொழிலதிபரும், இரண்டாவது பெரும் பணக்காரருமான கவுதம் அதானி மீது லஞ்சம் வழங்குதல், மோசடியில் ஈடுபடுதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை அமெரிக்கா முன்வைத்திருப்பது பெரும் புயலைக் கிளப்பியிருக்கிறது.
அதானி குழும நிறுவனங்களின் தலைவர் கவுதம் அதானி (62), உலக பணக்காரர் பட்டியலில் 17-வது இடத்திலும், இந்திய அளவில் 2-வது இடத்திலும் உள்ளார். இந்த நிலையில், கவுதம் அதானி மற்றும் அவரது உறவினர் சாகர் அதானி (அதானி கிரீன் எனர்ஜி செயல் இயக்குநர்), முன்னாள் சிஇஓ வினீத் ஜெயின் உள்ளிட்ட 7 பேர் மீது லஞ்சம் மற்றும் கடன் பத்திர மோசடி தொடர்பான தனித்தனி வழக்குகளில் அமெரிக்காவின் நியூயார்க் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
2020-24 காலகட்டத்தில் அதிக விலைக்கு சூரிய ஒளி (சோலார்) மின்சாரம் வாங்கும் வகையில் விநியோக ஒப்பந்தங்களை பெறுவதற்காக தமிழகம், ஆந்திரா, ஜம்மு - காஷ்மீர், சத்தீஸ்கர், ஒடிசா மாநிலங்களில் அரசு அதிகாரிகளுக்கு அதானி குழுமம் ரூ.2,100 கோடி லஞ்சம் கொடுத்ததாகவும், இதை மறைத்து அமெரிக்க நிறுவனங்களிடம் முதலீடு பெற்றதாகவும் அதானி குழுமம் மீது நியூயார்க்கில் உள்ள புரூக்ளின் பெடரல் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, அக்குழுமத்தின் தலைவர் கவுதம் அதானிக்கு எதிராக பிடிவாரன்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம் முறைகேடாக பெற்ற இந்த ஒப்பந்தங்கள் மூலம் 20 ஆண்டுகளில் குறைந்தபட்சம் 2 பில்லியன் டாலருக்கும் (சுமார் ரூ.17,000 கோடி) அதிகமான லாபத்தை ஈட்ட முடியும் என்று குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விநியோக ஒப்பந்தங்களை பெறுவதற்காக இந்திய அரசின் உயர் அதிகாரிகளை கவுதம் அதானி பல முறை சந்தித்ததாகவும், அதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் அமெரிக்க நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 54 பக்க குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.
» “இந்தியா... உலகின் ஆன்மிகத் தலைநகரம், தெய்வீகத்தின் தொட்டில்!” - ஜக்தீப் தன்கர்
» ‘சட்டம் தனது கடமையைச் செய்யும்’ - அதானி மீதான அமெரிக்க புகார்கள் குறித்து பாஜக கருத்து
லஞ்சத்தை மறைத்து பெற்ற ரூ.25,000 கோடி முதலீடு சட்டவிரோதமான லஞ்ச நடவடிக்கைகளை மறைத்து அமெரிக்காவில் அதானி நிறுவனம் 300 கோடி டாலருக்கு (ரூ.25,000 கோடி) முதலீடு பெற்றதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியை தலைமையிடமாக கொண்ட அஸுர் பவர் நிறுவனமும் இந்த லஞ்ச வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளது.
அமெரிக்க கடன் பத்திர சட்டங்கள், விதிகளை மீறி செயல்பட்டதற்காக அமெரிக்க பங்குச் சந்தை மற்றும் பரிவர்த்தனை வாரியமும் கவுதம் அதானி, சாகர் அதானி, அஸுர் பவர் நிர்வாகிகள் மீது தனியாக குற்றச்சாட்டு பதிவு செய்துள்ளது. இதையடுத்து, கவுதம் அதானி, சாகர் அதானி உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்துள்ளது. இது, சர்வதேச சட்ட அமலாக்க துறைக்கு அனுப்பி வைக்கப்படும் என்று அமெரிக்க நீதித்துறை வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
‘குறியீட்டுப் பெயர்கள்...’: ப்ளூம்பெர்க் செய்திக் குறிப்பின்படி, லஞ்சம் கொடுக்கும் சதித்திட்டத்துக்காக கவுதம் அதானி பல முறை இந்திய அதிகாரிகளை நேரில் சந்தித்துள்ளார். அதானியுடன் சேர்ந்து குற்றம்சாட்டப்பட்டவர்கள் தங்களின் திட்டத்தின் நடைமுறைப்படுத்துவதற்கு நேரடியாக சந்திப்பது மற்றும் மின்னணு செயலிகள் மூலமாகவே தொடர்பில் இருந்துள்ளனர். மேலும், இருப்பிடங்களை கண்டறியவும், உறுதியளிக்கப்பட்ட லஞ்சப் பணம் பெறப்பட்டதை உறுதி செய்யவும் செல்போன்களைப் பயன்படுத்துவது, வழங்கப்பட்ட தொகைக்கான ஆவணங்களை புகைப்படம் எடுப்பது என தங்களின் லஞ்சம் வழங்கும் முயற்சிகளை மின் ஆவணங்களாக மாற்றியுள்ளனர்.
அவர்கள் எந்த வகையிலான பணம் செலுத்தும் முறை சிறந்தது என்பதை தீர்மானிப்பதற்காக பவர்பாயின்ட் மற்றும் எக்ஸல் பிரசன்டேஷன் தயாரித்துள்ளனர். அதில் கவுதம் அதானியால் பரிந்துரைக்கப்பட்ட விருப்பங்களில் ஒன்று, ‘இந்திய எரிசக்தி நிறுவனத்துக்கு நேரடியாக செலுத்தப்படும் தொகை, வளர்ச்சி நிதி’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் அடிக்கடித் தங்களை வி, ஸ்னேக் மற்றும் நியுமெரோ யுனோ மினுஸ் என்ற குறியீடுட்டுப் பெயரில் அழைத்துள்ளனர். கவுதம் அதானி மிஸ்டர் ஏ, நியுமெரோ யுனோ மற்றும் தி பிக் மேன் என்று அழைக்கப்பட்டுள்ளார். குழுவில் உள்ள சிலர் இந்தச் சதித்திட்டதில் தங்களின் பங்கேற்பை மறைப்பதற்காக பவர் பாயின்ட் பகுப்பாய்வு மற்றும் மின்னணு தொடர்பு ஆதாரங்களை அழித்துள்ளனர் என்பன போன்ற குற்றச்சாட்டுகள், அதானி உள்ளிட்டோர் மீது முன்வைக்கப்பட்டுள்ளன என்று ப்ளூம்பெர்க் செய்தி அறிக்கை தெரிவிக்கிறது.
அதானி நிறுவனம் மறுப்பு: இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள அதானி குழுமம், “அதானி கிரீன் நிறுவனத்தின் இயக்குநர்களுக்கு எதிராக அமெரிக்க நீதித்துறை மற்றும் அமெரிக்க பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் ஆகியவற்றின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை. இந்தக் குற்றச்சாட்டுக்களை நாங்கள் மறுக்கிறோம். ‘குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படும் வரை குற்றம் சாட்டப்பட்டவர்கள் நிரபராதிகளாக கருதப்படுவார்கள்’ என்று அமெரிக்க நீதித் துறையே கூறி இருக்கிறது. எனவே, சாத்தியமான அனைத்து சட்ட வழிகளும் ஆராயப்படும்.
அதானி குழுமம் எப்பொழுதும் உயர்ந்த தரமான நிர்வாகம், வெளிப்படைத்தன்மை மற்றும் ஒழுங்குமுறையை பராமரிப்பதில் உறுதியாக உள்ளது. எங்கள் பங்குதாரர்கள் மற்றும் ஊழியர்களுக்கு நாங்கள் ஒரு சட்டத்தை மதிக்கும் அமைப்பு, அனைத்து சட்டங்களுக்கும் முழுமையாக இணங்குகிறோம் என்று உறுதியளிக்கிறோம்” என்று அதானி குழுமம் தெரிவித்துள்ளது.
பாஜக சொல்வது என்ன?: அதானி விவகாரத்தில் சட்டம் தனது கடமையை செய்யும் என்று பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா தெரிவித்துள்ளார். டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஒரு தனியார் நிறுவனம் தொடர்பான செய்தி, ஊடகங்களில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. அந்த நிறுவனத்துக்கு எதிராக அமெரிக்காவில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. குற்றச்சாட்டுக்களும் எதிர் குற்றச்சாட்டுக்களும் வந்து கொண்டிருக்கின்றன. தன் மீதான குற்றச்சாட்டுக்களை அந்த நிறுவனம் மறுத்துள்ளது. இந்த விவகாரத்தில் சட்டம் தனது கடமையைச் செய்யும்” என்றார்.
அடிபடும் தமிழக அரசு பெயர்...: ‘அதானி நிறுவனத்தின் லஞ்ச விவகாரத்தில் தொடர்புடைய நிறுவனங்கள் பட்டியலில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பெயர் இடம் பெற்றுள்ளது. அதுமட்டுமின்றி, லஞ்சம் வழங்குதல் தொடர்பான அந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள காலக்கட்டத்தில்தான், அதாவது 2021-ம் ஆண்டு செப்டம்பர் 16-ம் நாள் அதானி குழுமத்தால் உற்பத்தி செய்யப்படும் 1000 மெகாவாட் சூரிய ஒளி மின்சாரத்தை இந்திய சூரிய ஒளி மின்னுற்பத்திக் கழகத்தின் வாயிலாக வாங்குவதற்கான ஒப்பந்ததில் தமிழ்நாடு மின்சார வாரியமும், இந்திய சூரிய ஒளி மின்னுற்பத்திக் கழகமும் கையெழுத்திட்டுள்ளன.
சூரிய ஒளி மின்சாரத்தை வழங்குவதற்காக தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு அதானி குழுமம் லஞ்சம் கொடுத்ததால் அமெரிக்க நீதிமன்றத்தில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டை இந்த ஒப்பந்தம் உறுதி செய்கிறது’ என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். மேலும், இது குறித்து தமிழக அரசு விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என்றும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் - அதானி குழுமத் தலைவர் கவுதம் அதானி ஆகியோருக்கு இடையிலான ரகசிய சந்திப்பு குறித்தும் தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அதேவேளையில், “தமிழ்நாடு மின்சார வாரியத்தைப் பொறுத்தவரை, அதானி நிறுவனத்தோடு எந்தவிதமான வணிக ரீதியிலான தொடர்புகளும் கடந்த 3 ஆண்டுகளாக இல்லை என்பதை தெளிவுப்படுத்தி விடுகிறேன்” என்று தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.
எதிர்க்கட்சிகள் மீண்டும் போர்க்கொடி: அதானி குழுமத்தின் மீது அமெரிக்காவில் இருந்து குற்றச்சாட்டு எழுதுவது இது முதல் முறையில்லை. முன்னதாக, கடந்த 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் அதானி குழுமம் பல ஆண்டுகளாக நிதி முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாகவும், அக்குழுமத்துக்கு மிக அதிக அளவில் கடன் இருப்பதாகவும் அமெரிக்காவைச் சேர்ந்த முதலீட்டு ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் ரிசர்ச் அறிக்கை வெளியிட்டது.
பங்கு மதிப்பில் உயர்வைக் காட்டி அதானி குழும நிறுவனங்கள் மிக அதிக அளவில் கடன் பெற்றது, பங்குச் சந்தையில் முறைகேட்டில் ஈடுபட்டது, அதானி குடும்ப உறுப்பினர்கள் வெளிநாடுகளில் போலி நிறுவனங்களைத் தொடங்கி வரி ஏய்ப்பிலும், பண மோசடியிலும் ஈடுபட்டதாக அதில் குறிப்பிடப்பட்டது. இதனால், அதானி குழுமத்தின் பங்குகள் பெரும் வீழ்ச்சியை சந்தித்து பின்னர் மீண்டன.
ஹிண்டன்பர்க்கின் அந்த அறிக்கை, இந்திய அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. அதானி குழுமத்தின் மீதான குற்றச்சாட்டுகளை நாடாளுமன்ற கூட்டுக் குழு மூலம் விசாரிக்க வேண்டும் என்று கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு ஒரு கூட்டத்தொடர் முழுவதும் நாடாளுமன்றத்தை முடக்கின.
இந்த நிலையில், அமெரிக்க பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் மற்றும் வழக்கறிஞர்கள், அதானி குழுமத்தின் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்த சில மணி நேரத்தில், அதானி குழுமத்தின் மீதான குற்றச்சாட்டுகளை நாடாளுமன்ற கூட்டுக் குழு கொண்டு விசாரிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் மீண்டும் கோரிக்கை வைக்கத் தொடங்கியுள்ளன.
மேலும், பிரதமர் நரேந்திர மோடிக்கும், அவருக்கு விருப்பமான தொழிலதிபருக்கும் இடையில் உள்குத்து இருப்பதாகவும் காங்கிரஸ் சாடியுள்ளது.
ஹிடண்டன்பர்க் அறிக்கை அடிப்படை ஆதராமற்றவை என்று நிராகரிகப்பட்ட நிலையில், தற்போது அதானி குழுமத்தின் மீது வைக்கப்பட்டிருக்கும் லஞ்சம் மற்றும் மோசடி குற்றச்சாட்டுக்களை விசாரிக்க புதிய மற்றும் நம்பகமான செபி தலைவர் நியமிக்கப்பட வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
மக்களவைத் தேர்தலுக்கு முந்தைய நாடாளுமன்ற கூட்டத்தொடர்கள் ஹிண்டன்பர்க் அறிக்கை தொடர்பான அமளி முடங்கிய நிலையில், தற்போது வரும் 25-ம் தேதி நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கூடவுள்ளது கவனிக்கத்தக்கது.
பங்குச்சந்தையில் வீழ்ச்சி: இதனிடையே, அதானி நிறுவன பங்குகள் சரிந்ததால் பங்குச்சந்தை புதன்கிழமை வீழ்ச்சியில் நிறைவடைந்தது. சென்செக்ஸ் 422.59 புள்ளிகள் சரிந்து 77,155.79 ஆக நிறைவடைந்தது. அதேபோல் நிஃப்டி 168.60 புள்ளிகள் சரிந்து 23,349 ஆக இருந்தது. பட்டியலிடப்பட்ட அதானி குழுமத்தின் 10 நிறுவனங்களின் பங்குகளும் கடும் வீழ்ச்சி கண்டன. மும்பை பங்குச்சந்தையில் முதன்மையான அதானி எண்டர்பிரைசஸ் பங்குகள் 23 சதவீதம் வீழ்ச்சியடைந்தது. தற்போதைய சூழல், அதானி குழும பங்குகளின் சந்தை மூலதனத்தில் இருந்து ரூ.2 லட்சம் கோடியை இழக்கச் செய்துள்ளது.
ஒப்பந்தத்தை ரத்து செய்த கென்யா: இதனிடையே, அதானி குழுமம் உடனான தொழில் ஒப்பந்தங்களை ரத்து செய்வதாக கென்ய அதிபர் வில்லியம் ரூட்டோ அறிவித்துள்ளார். கென்யாவின் பிரதான விமான நிலையத்தை பராமரிக்கும் ஒப்பந்தம் மற்றும் 30 ஆண்டு காலத்துக்கு கென்ய எரிசக்தி துறையை நிர்வகிக்கும் வகையிலான 736 டாலர் மதிப்பிலான ஒப்பந்தத்தையும் ரத்து செய்துள்ளது. இந்த ஒப்பந்தம் கடந்த மாதம் தான் கையெழுத்தானது என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து அதிபர் ரூட்டோ நிகழ்த்திய தேசிய உரையில், “தற்போது அமலில் உள்ள ஒப்பந்தத்தை உடனடியாக ரத்து செய்யுமாறு போக்குவரத்து அமைச்சகம் மற்றும் எரிசக்தி மற்றும் பெட்ரோலிய அமைச்சகத்தின் கீழ் இயங்கும் நிறுவனங்களுக்கு நான் உத்தரவிட்டுள்ளேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
30 mins ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago