டெல்லியில் தொடங்கியது பனிக்காலம் மட்டுமல்ல... அதோடு பழகிப்போன ஓர் இருள் சூழ்ந்த மனநிலையும் கூட. சில நிமிடங்களுக்கு வீட்டுக்கு வெளியே நின்றால் ஒருவேளை சாம்பலின் சுவையை நீங்கள் உணரலாம். பனி மூட்டத்தினுள் ‘வாக்கிங்’கோ, ‘ஜாகிங்’கோ சென்றால் சுவாசிக்க முடியாமல் நீங்கள் மூர்ச்சையாகலாம். அந்த அளவுக்கு டெல்லியின் நீல வானம் சாம்பல் நிறமாகவும், புகை மூட்டம் கனத்த போர்வை போலவும் நகரைச் சூழ்ந்துள்ளது. இந்தச் சூழலுக்கு காற்றின் தரத்தை கடுமை, அபாயம், நச்சு எனத் தலைப்பிட்டு செய்திகள் மேலும் அச்சத்தைக் கூட்டுவதை கவனிக்கலாம்.
காற்று மாசு தொடர்ந்து அதிகரித்து வருவதால் வீட்டில் இருந்தே வேலை, ஒற்றைப்படை, இரட்டைப் படை எண்கள் அடிப்படையில் வாகன இயக்கம் உள்ளிட்ட திட்டங்களை அமல்படுத்துவது குறித்து டெல்லி அரசு பரசீலித்து வருகிறது. ஏற்கெனவே தலைநகரில் ‘கிராப் - 4’ திட்டத்தின் கீழ் கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ளன.
கனரக வாகனங்கள் தேசிய தலைநகருக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளன. ‘எங்களது முன் அனுமதியின்றி GRAP-4-இன் கீழ் எடுக்கப்பட்டுள்ள கடுமையான நடவடிக்கைகளை குறைக்கக் கூடாது’ என உச்ச நீதிமன்றம் திட்டவிட்டமாக தெரிவித்துள்ளது. வாகனங்களில் இருந்து வரும் புகை, போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் டெல்லி மாநகராட்சி மற்றும் அரசு அலுவலகங்களின் நேரங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. இந்த புதிய நேர மாற்றம் அடுத்த ஆண்டு பிப்ரவரி 28 வரை அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பின்னணியில் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் டெல்லியில் காற்றின் தரம் 1,200 மற்றும் 1,500 என்ற நிலையை எட்டியதாக பல்வேறு தனியார் கண்காணிப்பு மையங்கள் அறிவித்திருந்தன. மனிதனால் ஏற்றுக்கொள்ளக் கூடிய அளவு என்பது ‘100’ என்பதை இங்கே கவனத்தில் கொள்ள வேண்டும். இந்தத் தர அளவீடுகள் ‘பார்டிகுலேட் மேட்டர்ஸ்’ (PM 2, PM 10) எனப்படும் காற்றிலுள்ள நுண்துகளின் அளவை வைத்து மதிப்பிடப்படுகின்றன. இந்த நுண்துகள்கள் நமது நுரையீரலுக்குள் சென்று பல்வேறு சுவாச பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.
» 5 மணி நிலவரம் | மகாராஷ்டிரா - 58.22%, ஜார்க்கண்ட் 2-ம் கட்டம் - 67.59% வாக்குகள் பதிவு
» நிலையான வளர்ச்சிக்கான செயல்திட்டத்தை அடைவதில் இந்தியா உறுதி: பிரதமர் மோடி
காற்றின் தரம் அபாயகரமாக இருப்பதால் தலைநகரில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. மக்கள் அவசியமின்றி வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். வேலைக்குச் செல்பவர்கள் வீட்டிலிருந்து வேலை செய்யும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. அலுவலகங்களுக்கு செல்பவர்களுக்கு வீட்டில் இருப்பது சாத்தியமாகலாம். ஆனால் தினக்கூலிகள், ஆட்டோ ஓட்டுநர்கள், உணவு விநியோக வேலை செய்வோர் போன்ற எளிய தொழிலாளர்களுக்கு இது அசாத்தியம். அவர்கள் இருமிக் கொண்டே புகைமூட்டத்துக்குள் தங்களின் வேலைகளைத் தொடர்கின்றனர்.
காற்று மாசு எவ்வாறு உடல்நலனை பாதிக்கிறது, குழந்தைகள் மற்றும் முதியவர்கள் பாதிக்கப்படுகின்றனர், அதிலிருந்து தற்காத்துக் கொள்வது குறித்து டெல்லிவாசிகள் ஆண்டுதோறும் அறிவுறுத்தப்படுகின்றனர்.
மருத்துவமனைகளில் சுவாசக்கோளறு பாதிப்பு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்தத் தொடர் கதையில் ‘ஏன் எதுவுமே இன்னும் மாறவில்லை?’ என்ற கேள்வியும் தோன்றிக் கொண்டே இருக்கிறது. பதில், மிகவும் எளிமையானது என்றாலும், பின்பற்றுவது கடினமானது.
காற்று மாசு பிரச்சினையைத் தீர்ப்பதற்கு மகத்தான முயற்சிகளும், ஒருங்கிணைப்பும் தேவை. டெல்லியின் காற்று மாசு பிரச்சினைகளுக்கான மூல காரணங்கள் பல. அவைகளில் ஒன்று, டெல்லியின் அண்டை மாநிலங்களில் விவசாயக் கழிவுகள் எரிக்கப்படுவது.
பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம் மாநிலங்களில் பயிர் கழிவுகள் எரிக்கப்படும்போது எழும் புகை, ஒவ்வொரு பனிக்காலத்திலும் டெல்லியைச் சூழ்ந்து கொள்கின்றன. அடுத்ததாக, டெல்லி தனக்குத் தானே உருவாக்கிக்கொள்ளும் வாகனம், கட்டுமானங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகை.
இங்கே நாம் ஒன்றைச் சிந்திக்க வேண்டியது இருக்கிறது. இந்தக் காற்று மாசு கதை மாற்றமின்றி தொடர்வதைப் பார்க்கும்போது ‘மாநாடு’ படத்தில் வரும் டயலாக்தான் நினைவுக்கு வருகிறது. ஆம்... ‘காற்று மாசு, கட்டுப்பாடுகள், பாதிப்புகள், ரிப்பீட்டு...’ என்ற ‘டைம் லூப்’ ஆகிவிட்டது டெல்லிவாசிகளின் வாழ்க்கை.
பொதுவாக இதுபோன்ற அவசரகால நெருக்கடிகளின்போது மக்கள் கொதித்தெழுந்து வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்துவர். டெல்லியைப் பொறுத்தவரை அந்தக் கோபம் சமூக வலைதளங்களில் மட்டுமே வெளிப்பட்டு வடிந்து போகிறது. டெல்லியில் நிலவும் வர்க்க பேதமும் இதற்கு முக்கிய காரணம்.
தற்காலிகமாக நகரை விட்டு வெளியேற வாய்ப்புள்ளவர்களும், காற்று சுத்திகரிப்பான் வாங்க வசதியுள்ளவர்களும் சமூக வலைதளங்களில் கொந்தளித்து தங்களின் கோபத்தைத் தீர்த்து கொள்கின்றனர். அந்த வாய்ப்பு இல்லாதவர்கள் வேறு வழியின்றி தங்களின் வாழ்க்கைக்கான ஓட்டத்தைத் தொடர்கின்றனர்.
டெல்லியின் காற்று மாசு பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு மத்திய, மாநில அளவில் ஒரு கூட்டு நடவடிக்கை அவசியமாகிறது. அதேபோல் பல்வேறு மாநிலங்களும் தங்களின் மாநிலம் சார்ந்த அரசியலை தள்ளிவைத்துவிட்டு ஒருங்கிணைந்து நீண்ட கால தீர்வுகளை நோக்கி முயற்சிக்க வேண்டும் என்று நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
பொதுமக்களும் அரசியல்வாதிகளை இந்தப் பிரச்சினைகளுக்கு பொறுப்பேற்க வைக்க வேண்டும். நீதிமன்றங்களும் பிரச்சினை துவங்குவதற்கு முன்பே உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்.
இவற்றைத் தவிர்த்து தற்காலிக தீர்வுகளைத் தொடரும்பட்சத்தில், ஒவ்வொரு வருடமும் குளிர்காலத்தில் டெல்லி மக்கள் காற்று மாசு காரணமாக கோபம் கொள்வார்கள். செய்தியாளர்கள் கட்டுரை எழுதுவார்கள். அரசியல்வாதிகள் ஒருவர் மீது மற்றவர் குறை கூறுவார்கள், நீதிமன்றமோ அரசியல்வாதிகள் மீதும் குற்றம் சுமத்தும்... காலம் மாறும். மீண்டும் குளிர்காலம் வரும். அதே கதை மீண்டும் நிகழும். புகைமூட்டம் முன்பைக் காட்டிலும் மிக அடர்த்தியாக டெல்லியின் மீது தவழும்!
முக்கிய செய்திகள்
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago