மகாராஷ்டிர தேர்தலில் தாராவி அரசியல்: ஆசியாவின் பெரிய குடிசைப் பகுதியின் பின்னணியில் தமிழர்கள்

By ஆர்.ஷபிமுன்னா

ஆசியாவின் மிகப்பெரிய மற்றும் உலகின் மூன்றாவது பெரிய குடிசைப் பகுதியாக மும்பையின் தாராவி உள்ளது. ஆங்கிலேயர் காலத்தில் உருவான இதன் வரலாற்று பின்னணியில் இரண்டு காரணங்கள் கூறப்படுகின்றன. இதில் ஒன்றாக, 1896-ல் உலகம் முழுவதிலும் பல உயிர்களை பறித்த பிளேக் நோய் தமிழகத்திலும் பரவியது. இதில் ஏற்பட்ட உயிரிழப்புகளால் மக்கள் இடம்பெயரத் தொடங்கினர். தமிழகத்தின் வட மாவட்டங்களில் இருந்து புறப்பட்ட தமிழர் குடும்பங்கள் மும்பை புறநகரில் வந்து தங்கியுள்ளன. அப்போது தாரா தேவி கோயில் அங்கிருந்ததால் ‘தாரா தேவி பகுதி’ என்று பிறகு 'தாராவி' என்றும் அப்பகுதி அழைக்கப்பட்டுள்ளது.

மற்றொரு கருத்துப்படி, ஆங்கிலேயர் ஆட்சியில் அங்கு 24 மணிநேரமும் சாராயம் காய்ச்சப்பட்டுள்ளது. சாராயத்திற்கு மராத்தியில் 'தார்' எனப்பெயர். இதன் அடிப்படையில் தாராவி எனப் பெயர் உருவானது. அந்த சமயங்களில் அங்கு தமிழர்கள் தோல் பதனிடும் தொழில் செய்துள்ளனர். இந்த இரண்டு கருத்துகளிலும் தாராவி தமிழர்களால் அமைந்த பகுதியாகவே கருதப்படுகிறது. சட்டப்பேரவை தனித் தொகுதியாக உள்ள தாராவியை மையப்படுத்தி மகராஷ்டிராவின் அரசியல் சுற்றி வருகிறது.

தாராவியின் முக்கிய தலைவராக வளர்ந்த ஏக்நாத் கெய்க்வாட் காங்கிரஸை சேர்ந்தவர். கடைசியாக எம்.பி.யாகவும் இருந்தவர் மறைந்து விட்டார். இவரது மூத்த மகள் வர்ஷா கெய்க்வாட் கடந்த 2004 முதல் தாராவி எம்எல்ஏவாக தொடர்ந்தார். பிறகு இவர் அருகிலுள்ள வட மத்திய மும்பை தொகுதி எம்.பி.யாகி விட்டார். இதனால், அவரது தங்கை ஜோதி கெய்க்வாட், காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார்.

தாராவியில் சிவசேனா இரண்டாமிடம் பெற்று வந்தது. இந்த தேர்தலில் ஜோதிக்கும் முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனாவுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. தாராவியை அடுக்குமாடி வீடுகளாக மாற்றும் திட்டத்தை கடந்த 2,000 ஆண்டு முதல் ஒவ்வொரு அரசும் அறிவித்து அதற்கான டெண்டர் விடுகின்றன. ஏதாவது ஒரு காரணத்தால் அது ரத்தாகி வருகிறது.

கடைசியாக பாஜக தலைமையிலான மகா யுதி கூட்டணி சார்பில் ஏக்நாத் ஷிண்டே முதல்வரானவுடன் முதல் பணியாக தாராவிக்கு டெண்டர் விடப்பட்டது. இந்த டெண்டரை அதானியின் நிறுவனம் சுமார் ரூ.20 ஆயிரம் கோடிக்கு கடந்த வருடம் நவம்பரில் எடுத்தது. ஆனால் இதில் வெளிப்படைத்தன்மை இல்லாததால் இந்த டெண்டரை தாங்கள் ஆட்சிக்கு வந்தால் ரத்து செய்வோம் என மகா விகாஸ் அகாடி கூட்டணி அறிவித்துள்ளது.

இதனால் தாராவியில் அதானியின் திட்டம் தொடர மகாராஷ்டிராவில் மாகாயுதி கூட்டணி ஆட்சியில் தொடர்வது அவசியம் என்ற நிலை உள்ளது. மாறாக மகாயுதி ஆட்சி பறிபோனால் அதானியின் திட்டம் ரத்தாகி விடும் என்ற அச்சம் மகாராஷ்டிர தேர்தலின் முக்கிய அரசியலாகி விட்டது.

தாராவி மக்கள் தொகை சுமார் 10 லட்சம் என கணக்கிடப்பட்டுள்ளது. 550 ஏக்கரில் அமைந்த தாராவியின் மராட்டிய தலித்துகளாக கெய்க்வாட் சமூகத்தினர் அதிகம் உள்ளனர். இரண்டாவது எண்ணிக்கையில் தமிழர்களும் அடுத்து, முஸ்லிம்களும் உள்ளனர். இதன் சுமார் 80 சதவீத மக்கள் பொதுக் கழிப்பறைகளை பயன்படுத்தும் நிலை உள்ளது. வெறும் 100 சதுர அடி குடியிருப்பில் 6 முதல் 10 பேர் வசிக்கின்றனர்.

கூலித் தொழிலாளர்கள் அதிகம் வாழும் இப்பகுதியில் இருந்து உயர் அதிகாரியானவர்களும் உண்டு. சுமார் 22,000 சிறுகுறு மற்றும் நடுத்தர வகை தொழில் செய்பவர்களும் இங்கு வாழ்கின்றனர். தாராவி மக்களின் வாழ்க்கை பல மொழிகளில் திரைப்படங்களாக வெளியாகின. பல ஆஸ்கர் பரிசுகளை வென்ற ’ஸ்லம்டாக் மில்லியனர்’, ரஜினியின் ‘காலா’ ஆகியவை இதில் குறிப்பிடத்தக்கவை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

40 mins ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்