பிரேசில் ஜி20 உச்சி மாநாட்டில் உலக தலைவர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு

By செய்திப்பிரிவு

பிரேசிலில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டில் பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி உட்பட பல்வேறு நாடுகளின் தலைவர்களை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துப் பேசினார்.

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் ஜி20 உச்சி மாநாடு நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். முதல்நாள் மாநாட்டில் அவர் உரையாற்றியபோது, “பல்வேறு நாடுகளில் நடைபெறும் போர்களால் உணவு, எரிபொருள், உரங்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. போர்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும்" என்று வலியுறுத்தினார்.

பிரிட்டிஷ் பிரதமருடன் சந்திப்பு: இரண்டாவது நாள் மாநாட்டில் பல்வேறு நாடுகளின் தலைவர்களை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேசினார். பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்மருடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இந்தியா, பிரிட்டன் இடையே பாதுகாப்பு, பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த இரு தலைவர்களும் உறுதிபூண்டனர். இந்தியாவில் இருந்து பிரிட்டனுக்கு தப்பி ஓடிய பொருளாதார குற்றவாளிகளை ஒப்படைத்தது தொடர்பாக இருவரும் முக்கிய ஆலோசனை நடத்தினர். பிரிட்டனின் பெல் பாஸ்ட், மான்செஸ்டரில் புதிதாக இந்திய தூதரகங்கள் திறக்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்தார். இதனை பிரிட்டிஷ் பிரதமர் முழுமனதுடன் வரவேற்றார்.

பிரான்ஸ் அதிபருடன் பேச்சுவார்த்தை: பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்ரானை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேசினார். அப்போது பாதுகாப்பு, விண்வெளி, அணுசக்தி, டிஜிட்டல் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, வர்த்தகம் ஆகிய துறைகளில் இரு நாடுகள் இடையிலான ஒத்துழைப்பை மேலும் அதிகரிக்க இருவரும் உறுதியேற்றனர்.

இந்திய பெருங்கடல்-பசிபிக் பெருங்கடலில் சுதந்திரமான போக்குவரத்தை உறுதி செய்ய வேண்டும். ஐ.நா. சபையில் சீர்த்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்று மோடியும் மெக்ரானும் வலியுறுத்தினர்.

இத்தாலி பிரதமருடன் ஆலோசனை: இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியுடன் பிரதமர் நரேந்திர மோடி முக்கிய ஆலோசனை நடத்தினார். வர்த்தகம், முதலீடு, அறிவியல், தொழில்நுட்பம், மரபுசாரா எரிசக்தி, விண்வெளி, பாதுகாப்பு ஆகிய துறைகளில் இரு நாடுகளும் இணைந்து செயல்பட மோடியும் மெலோனியும் உறுதி ஏற்றனர்.

இந்தியா - மத்திய கிழக்கு - ஐரோப்பா பொருளாதார வழித்தடத்தை செயல்படுத்த இந்தியாவும் இத்தாலியும் இணைந்து செயல்படும் என்று இரு தலைவர்களும் கூட்டாக அறிவித்தனர்.

இந்தோனேசிய பிரதமருடன் சந்திப்பு: இந்தோனேசிய பிரதமர் பிரபோவோ சுபியான்டோவை பிரதமர் நரேந்திர மோடி முதல்முறையாக சந்தித்துப் பேசினார். இரு நாடுகள் இடையிலான பாதுகாப்பு, பொருளாதார உறவுகளை வலுப்படுத்த இருவரும் உறுதியேற்றனர். சர்வதேச அரங்கில் தெற்கு நாடுகளின் குரல் ஓங்கி ஒலிக்க வேண்டும். இதற்காக இந்தியாவும் இந்தோனேசியாவும் இணைந்து செயல்படும் என்று இரு தலைவர்களும் அறிவித்தனர்.

போர்ச்சுகல், நார்வே உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களையும் பிரதமர் நரேந்திர மோடி தனித்தனியாக சந்தித்துப் பேசினார்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடனை பிரதமர் மோடி சந்தித்தார். ஆனால் இருவரும் அதிகாரப்பூர்வமாக பேச்சுவார்த்தை நடத்தவில்லை. சீன அதிபர் ஜி ஜின்பிங் ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்றார். அவரையும் பிரதமர் மோடி தனியாக சந்தித்துப் பேசவில்லை.

ஜோ பைடனுக்கு செல்வாக்கு இல்லை: அமெரிக்க அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் ஜோ பைடனின் ஜனநாயக கட்சி தோல்வி அடைந்து உள்ளது. குடியரசு கட்சியின் மூத்த தலைவர் டொனால்டு ட்ரம்ப் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். அவர் வரும் ஜனவரியில் அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்க உள்ளார்.

இந்த சூழலில் ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்ற அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. ஜி20 கூட்டமைப்பின் தலைவர்கள் நேற்று குழு புகைப்படம் எடுத்து கொண்டனர். இதில் அதிபர் ஜோ பைடன் பங்கேற்கவில்லை. கனடா அதிபர் ஜஸ்டின் ட்ரூடோவும் கலந்து கொள்ளவில்லை.

இதுகுறித்து அமெரிக்க அரசு வட்டாரங்கள் கூறும்போது, “அதிபர் பைடனும் கனடா பிரதமர் ஜஸ்டினும் பேச்சுவார்த்தை நடத்தி கொண்டிருந்தனர். அதற்குள் ஜி20 தலைவர்களின் குழு புகைப்படம் எடுக்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டுவிட்டது. இதன்காரணமாக பைடன் பங்கேற்கவில்லை" என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஜி20 உச்சி மாநாட்டின் நிறைவாக முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. குறிப்பாக உலகம் முழுவதும் வறுமையை ஒழிக்க ஜி20 நாடுகள் ஓரணியாக செயல்பட வேண்டும். இஸ்ரேல்- காசா போர், உக்ரைன் போருக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும். போரினால் பாதிக்கப்பட்ட காசா, உக்ரைன் மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட வேண்டும். மத்திய கிழக்கில் போர் பதற்றத்தை தணிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

50 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

5 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

1 day ago

மேலும்