இந்தியாவின் பணக்கார மாநில சட்டப்பேரவைத் தேர்தல், அதன் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. நவம்பர் 20-ம் தேதியன்று அடுத்து தங்களை யார் ஆள வேண்டும் என மகாராஷ்டிரா மக்கள் தீர்மானிக்க இருக்கிறார்கள். ஆட்சியைத் தக்கவைக்க மகாயுதி கூட்டணியும், அதனைத் தட்டிப் பறிக்க மகா விகாஸ் அகாடி கூட்டணியும் தீவிரமாக களமாடி வருகின்றன.
பாஜக, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா மற்றும் அஜித்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இணைந்து ‘மகாயுதி கூட்டணி’யில் தேர்தலை சந்திக்கின்றன. எதிர் தரப்பிலோ காங்கிரஸ், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் ‘மகா விகாஸ் அகாடி’ கூட்டணியில் களம் காண்கின்றன.
வெளிப்படையாக மகாராஷ்டிரா தேர்தலில் பாஜக - காங்கிரஸ் இடையேயான இருமுனைப் போட்டி நிலவுவதாகவே தெரியும். உண்மையில், இந்தத் களத்தில் இரு கூட்டணிகள் இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. அதாவது, பாஜக Vs காங்கிரஸ், சிவசேனா Vs சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் Vs தேசிவாத காங்கிரஸ் என ஒவ்வொரு அணியிலும் மல்யுத்தமே நடக்கிறது. இதனை, இரு வேறு சித்தாந்தங்களின் தலைமையில் அரியணைக்காக பங்காளிச் சண்டை என்றே சொல்கிறார்கள்.
இந்த வித்தியாசமான தேர்தல் களத்தைப் புரிந்து கொள்வதற்கு நாம் 2019-ம் ஆண்டு நடந்த மகாராஷ்டிர சட்டப் பேரவைத் தேர்தலை கொஞ்சம் திரும்பிப் பார்க்க வேண்டும். 2019 பேரவைத் தேர்தலில் பிளவுபடாத சிவசேனா தனது சித்தாந்த கூட்டாளியான பாஜகவுடன் கைகோத்து வெற்றி கண்டது. உத்தவ் தாக்ரே முதல்வரானார். பின்பு ஏக்நாத் ஷிண்டே கிளர்ச்சி செய்து வெளியேறி பாஜகவுடன் இணைந்து ஆட்சிக்கு தலைமையேற்றது மகாராஷ்டிர அரசியலின் அதகளம்.
இது ஒருபுறம் என்றால், 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்பு சரத் பவாருடன் கிளர்ச்சி செய்த அஜித் பவார் தனது ஆதரவாளர்களுடன் வெளியேறி பாஜக கூட்டணியுடன் இணைந்து துணை முதல்வர் பதவியும் பெற்றார். இந்தப் பின்னணியில் மகாராஷ்டிரா தேர்தல் களம் இந்த முறை பல மாற்றங்களையும், முன்னெப்போதும் இல்லாத அரசியல் யுத்தத்தையும் காண்கிறது.
» பாஜக கோஷம் மகாராஷ்டிராவில் செல்லாது: உ.பி. முதல்வர் யோகிக்கு மகா யுதியில் எதிர்ப்பு
» “நாம் ஒற்றுமையாக இருந்தால் பாதுகாப்பாக இருப்போம்” - மகாராஷ்டிராவில் மோடி பிரச்சாரம்
உத்தவ் தாக்கரே தங்களின் இந்துத்துவா சித்தாந்தத்தை ஏற்காத காங்கிரஸ் மற்றும் என்சிபி-யுடன் கைகோத்துள்ளார். பாஜகவை வெளியேற்றுவதற்காக காங்கிரஸும், என்சிபியும் உத்தவ் தாக்கரேவை முதல்வராக முன்னிருத்தும் கட்டாயத்தில் உள்ளன.
மறுபுறம், கூட்டணியில் பெறும் பங்கு இருந்தும், பாஜக முதல்வர் பதவியை ஏக்நாத் ஷிண்டேவுக்கு விட்டுக்கொடுத்துள்ளது. இதுவரை இந்துத்துவா சித்தாந்தத்துக்கு எதிராக பேசிவந்த அஜித் பவார், இருபெரும் இந்துத்துவ ஆதரவுக் கட்சிகளுடன் கரம் கோத்துள்ளார்.
கூட்டணி நிலவரத்தைவிட கள நிலவரம் படு சுவாரஸ்யம். மகாராஷ்டிரா தேர்தல் களம் என்பது 6 மண்டலங்களாக உள்ளன. அவற்றில் விதர்பா, மராத்வாடா. வடக்கு மகாராஷ்டிரா ஆகியவை பொருளாதாரத்தில் பின்தங்கியவை. மும்பை, தானே - கொங்கன், மேற்கு மகாராஷ்டிரா ஆகியவை பொருளாதார வளம் உள்ளவை. முந்தையதைக் காட்டிலும் பிந்தையதின் தனிமனித வருமானம் மூன்று மடங்கு அதிகம்.
இதில் மும்பை மற்றும் தனே - கொங்கன் பகுதிகளில் சிவசேனா அணிகள் பலம் மிக்கவை. விதர்பாவில் காங்கிரஸும் பாஜகவும் சிறந்து விளங்குகின்றன. தேசியவாத காங்கிரஸ் கட்சியின் இரு அணிகளும் மேற்கு மகாராஷ்டிரா மண்டலத்தில் பலத்துடன் உள்ளன.
நிலவரம் இப்படி இருக்க, வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிப்பதற்கு கூட்டணிக் கட்சியின் வாக்குகள் சிந்தாமல் சிதறாமல் விழ வேண்டும் என்பது தேர்தல் சூத்திரம். ஆனால், மகாராஷ்டிராவில் இந்த முறை இருபெரும் கூட்டணியிலும் சிவசேனா, என்சிபி அணிகள் களம் காண்பதால் அந்தந்தக் கட்சிகளின் வாக்கு வங்கிகள் பிரிய இருப்பது முன்னெப்போதும் இல்லாதது.
இந்த மறைமுக மும்முனைப்போட்டி ஒருபுறம் என்றால், இந்தத் தேர்தலில் ‘கிங் மேக்கர்’களாக சிறிய கட்சிகளும், சுயேட்சை வேட்பாளர்களும் இருப்பார்கள் என்று அரசியல் நிபுணர்கள் கருதுகின்றனர். அதற்கு கடந்த 2019-ம் பேரவைத் தேர்தலில் சிறிய கட்சிகள் 29 இடங்களில் வெற்றி பெற்றன என்பதே சான்று. மேலும், அக்கட்சிகளின் வேட்பாளர்கள் 63 இடங்களில் இரண்டாவது இடத்தில் வந்தனர் என்று புள்ளி விவரங்கள் சொல்கின்றன. இந்த சிறியக் கட்சிகளின் வரிசையில், அசாதுதீன் ஒவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம், ராஜ் தாக்கரேவின் எம்.வி.ஏ, பிரகாஷ் அம்பேத்கரின் வி.பி.ஏ முன்னணியில் இருக்கின்றன.
மகாராஷ்டிர மாநிலத்தில் மொத்தம் 288 சட்டப்பேரைத் தொகுதிகளுக்கான ‘நீயா நானா’ போட்டியில் ஆளும் மகாயுதி கூட்டணியில் பாஜக 149 இடங்களிலும், ஷிண்டே அணி சிவசேனா 81 இடங்களிலும், அஜித் பவாரின் என்சிபி 59 இடங்களிலும், பிற கட்சிகள் 6 இடங்களிலும் போட்டியிடுகின்றன.
எதிர்க்கட்சிகளின் மகா விகாஸ் அகாடி கூட்டணியில் காங்கிரஸ் 101 இடங்களிலும், உத்தவ் அணி சிவசேனா 95 இடங்களிலும், சரத் பவாரின் என்சிபி 86 இடங்களிலும், பிற கட்சிகள் 7 இடங்களிலும் போட்டியிடுகின்றன.
இதில், பாஜக Vs காங்கிரஸ் 75 இடங்கள், சிவசேனா Vs சிவசேனா 53 இடங்கள், என்சிபி Vs என்சிபி 41 இடங்கள் என 169 தொகுதிகளில் நேரடியாக மோதுகின்றன. இவை, மொத்த தொகுதிகளில் 60 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.
மகாராஷ்டிரா மக்கள் தங்களை அடுத்து யார் ஆளவேண்டும் என்பதை அடுத்த வாரம் தீர்மானிக்க இருக்கிறார்கள். தற்போதைய நிலவரப்படி, மகா விகாஸ் அகாதி ஆட்சியைப் பிடிக்கும் எனவும், மகாயுதி மீண்டும் ஆட்சியைத் தக்கவைக்கும் என்றும், தொங்கு அரசு அமையும் என்றும் கலவையான கருத்துக்கணிப்புகளே நிலவுகின்றன.
சித்தாந்த யுத்தத்தையும், பங்காளிச் சண்டைகளையும் தன்னகத்தே கொண்டுள்ள இரு கூட்டணிகளில் மட்டுமின்றி, இந்தக் கூட்டணிகளில் யாருக்கு வாக்களிப்பது என்பதில் மகாராஷ்டிர வாக்காளர்களுக்கும் குழப்பம் நாளுக்கு நாள் அதிகரிப்பதுதான் மகாராஷ்டிர தேர்தல் களத்தின் ஹைலைட்.
இந்தத் தேர்தல் களத்தை நோக்கும்போது, கிறிஸ்டோஃபர் நோலனின் படம் பார்க்கும் சாமானிய ரசிகர்களின் மனநிலையில்தான் மகாராஷ்டிர வாக்காளர்களும் இருக்கிறார்களோ என்ற சந்தேகமும் எழலாம்.
நவம்பர் 20-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று, 23-ம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன. அதன்பிறகு மக்களின் விருப்பப்படி மாநிலத்தில் புதிய ஆட்சி அமையுமா அல்லது தேர்தலுக்கு பிந்தைய பேச்சுவார்த்தை மற்றும் அணி மாறுதல்களின்படி ஆட்சி அமையுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
59 mins ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago