புதுடெல்லி: சொத்து உரிமையாளருக்கு 15 நாட்களுக்கு முன் அறிவிப்பு வழங்காமல், சட்டவிதிகளை பின்பற்றாமல் கட்டிடங்களை இடிக்கக் கூடாது என்று 'புல்டோசர்’ வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாஜக ஆளும் உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்களில் விதிமீறிய கட்டிடங்கள் இடிக்கப்படும் விவகாரம் தொடர்பான வழக்கில்தான் இந்த முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
‘புல்டோசர்’ வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர். கவாய் மற்றும் கே.வி. விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று தீர்ப்பளித்தது. நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில், "சொத்து உரிமையாளருக்கு 15 நாட்களுக்கு முன் அறிவிப்பு வழங்காமல், சட்ட விதிகளை பின்பற்றாமல் கட்டிடங்களை இடிக்கக் கூடாது. பதிவு செய்யப்பட்ட தபால் மூலம், உரிமையாளருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட வேண்டும். அதில், அங்கீகரிக்கப்படாத கட்டுமானத்தின் தன்மை, விதிமீறலின் விவரங்கள் மற்றும் இடிப்புக்கான காரணங்கள் குறிப்பிடப்பட வேண்டும். கட்டிடம் இடிக்கப்படும்போது வீடியோ எடுக்கப்பட வேண்டும். வழிகாட்டுதல்கள் மீறப்படுமானால் அது நீதிமன்ற அவமதிப்பாக கருதப்படும்.
சட்டத்தின் ஆட்சியும், குடிமக்களுக்கான உரிமைகளும் நிர்வாகத்தின் தன்னிச்சையான நடவடிக்கைகளுக்கு எதிரானது. அத்தகைய நடவடிக்கைகளை சட்டம் மன்னிக்காது. சட்ட மீறல்கள் சட்டவிரோதத்தை ஊக்குவிக்கும். அரசியலமைப்பு ஜனநாயகத்தைப் பாதுகாக்க சிவில் உரிமைகளைப் பாதுகாப்பது அவசியம். ஒரு நிர்வாகி ஒரு நீதிபதியைப் போல் செயல்பட்டு, சட்டத்தின் செயல்முறைகளைப் பின்பற்றாமல் ஒரு வீட்டை இடிக்க உத்தரவிட்டால் அது சட்டத்தின் விதியை மீறுவதாகும். குற்றம் சாட்டப்பட்டவர் அல்லது குற்றவாளிக்கு எதிராக அரசு தன்னிச்சையாக நடவடிக்கை எடுக்க முடியாது. சில ஆக்கிரமிப்புகள் இருந்தாலும், இடிப்பது மட்டுமே அதற்கு ஒரே தீர்வு என்பதற்கான ஆதாரங்களை அதிகாரிகள் காட்ட வேண்டும்" என தெரிவித்தனர்.
விதிமீறிய கட்டிடங்கள் விஷயத்தில் அரசு பின்பற்ற வேண்டிய வழிகாட்டல்கள் சார்ந்த அனைத்து அறிவிப்புகளும் நகராட்சி அமைப்பின் நியமிக்கப்பட்ட போர்ட்டலில் வைக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் அறிவுறுத்தினர். மேலும், இது தொடர்பான புகார்களக்கு மாவட்ட ஆட்சியர்கள் பொறுப்புக்கூற வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
» ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தல் 9 மணி வாக்குப்பதிவு நிலவரம்: 13% வாக்குகள் பதிவு
» வயநாட்டில் வாக்குப்பதிவு தொடங்கியது: பிரியங்கா காந்தியின் தேர்தல் அரசியலுக்கு பரீட்சை!
இந்த விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள வேறு பல மனுக்களை நீதிமன்றம் விசாரித்தது. இதில் ஒரு மனுவில், "நாட்டில் அதிகரித்து வரும் சட்டவிரோத இடிப்பு கலாசாரம், சட்டத்துக்கு புறம்பான தண்டனையை வழங்குவதாக உள்ளது. சிறுபான்மையினர் மற்றும் விளிம்புநிலை சமூகங்களுக்கு எதிராக இத்தகைய தண்டனை ஒரு கருவியாகப் பயன்படுத்தப்படுவதால் அவர்கள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர்" என தெரிவிக்கப்பட்டிருந்தது.
முக்கியக் கருத்துகள்: இந்த வழக்கின் விசாரணையின்போது, நீதிபதிகள் பி.ஆர்.கவாய், கே.வி. விஸ்வநாதன் அடங்கிய அமர்வு, “ஒருவர் குற்றம்சாட்டப்பட்டவராகவோ அல்லது குற்றவாளியாகவோ இருப்பதால், சொத்துகளை இடிப்பதற்காக அது ஒரு காரணமாக இருக்க முடியாது. சட்ட விரோதமாக ஒரு கட்டிடம் இடிக்கப்பட்டால்கூட அது அரசியலமைப்பின் ‘நெறிமுறைகளுக்கு’ எதிரானது.
இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு. இந்த வழக்கில் நாங்கள் என்ன தீர்வை முன்வைத்தாலும் அதை அனைத்து குடிமக்களுக்காகவும், அனைத்து நிறுவனங்களுக்காகவும் வைக்கிறோம். ஒரு குறிப்பிட்ட மதத்துக்கு ஒரு சட்டம் இருக்க முடியாது அதேநேரத்தில், தெருக்கள், நடைபாதைகள், ரயில் பாதைகள், நீர்நிலைகள் போன்ற பொது இடங்களில் அங்கீகாரம் இல்லாத கட்டமைப்பு இருந்தால், அவற்றை இடிக்கும் வழக்குகளுக்கு இந்த உத்தரவு பொருந்தாது. எங்கள் உத்தரவு எந்த பொது இடத்திலும் ஆக்கிரமிப்பாளர்களுக்கு உதவாது என்பதை நாங்கள் உறுதி செய்வோம்” என்று கூறியிருந்ததும் கவனிக்கத்தக்கது.
வழக்கின் பின்னணி என்ன? - பாஜக ஆளும் மாநிலங்களில் குற்றங்களில் ஈடுபடும் நபர்கள் சட்டவிரோதமாக கட்டப்பட்ட வீடுகளில் குடியிருந்தால் அவர்களது வீட்டை இடிக்கும் பணிகளை உள்ளாட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. இதுபோன்ற சம்பவங்கள் உத்தரப் பிரதேசத்தில் அதிகளவில் நடைபெறுகிறது. இதேபோல் குஜராத்தின் கேதா மாவட்டத்தில் உள்ள கத்லால் என்ற இடத்தில் ஒருவர் மீது குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவரின் வீட்டை புல்டோசர் மூலம் இடிக்கப்போவதாக மாநகராட்சி அதிகாரிகள் அச்சுறுத்தல் விடுத்தனர். இந்த முடிவை எதிர்த்து மனுதாரரும், மற்றொரு நில உரிமையாளரும் உச்ச நீதிமன்றத்தில் மனு செய்தனர்.
இந்த மனுக்கள் மீதான விசாரணையின்போது, ‘புல்டோசர் நீதி’ முறையை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஹிரிஷிகேஷ் ராய், சுதான்சு துலியா, எஸ்விஎன் பாட்டீ ஆகியோர் அடங்கிய அமர்வு கடுமையாக சாடியது. புல்டோசர் மூலம் குற்றவாளிகளின் வீடுகளை இடிக்கும் அரசின் செயலை அவர்கள் கடுமையாக விமர்சித்தனர். “சட்டம் முதன்மையாக உள்ள நாட்டில், வீடுகளை இடிக்கும் அச்சுறுத்தல் ஏற்றுக்கொள்ள முடியாதது. குடும்பத்தில் உள்ள ஒருவர் சட்டவிதிமுறைகளை மீறினார் என்பதற்காக, அவரது குடும்ப உறுப்பினர்கள் வசிக்கும் வீட்டை இடிக்க முடியாது. குற்றச்செயலில் ஈடுபட்டால், வீட்டை இடிக்க வேண்டும் என்பதற்கு எந்த அடிப்படையும் இல்லை” என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் காட்டமாக கூறியிருந்தது கவனிக்கத்தக்கது.
முக்கிய செய்திகள்
இந்தியா
3 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
5 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago