மகனை கருணை கொலை செய்யக் கோரிய பெற்றோரின் கண்ணீரை துடைக்கும் வகையில் ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தனது கடைசி பணி நாளில் தீர்ப்பு வழங்கினார்.
உச்ச நீதிமன்றத்தின் 50-வது தலைமை நீதிபதியாக சந்திரசூட் கடந்த 2022-ம் ஆண்டு நவம்பர் 9-ம் தேதி பதவியேற்றார். உச்ச நீதிமன்றத்தில் அவர் நீதிபதியாகவும் தலைமை நீதிபதியாகவும் பணியாற்றிய காலத்தில் பல்வேறு முக்கிய தீர்ப்புகளை வழங்கி உள்ளார். குறிப்பாக அயோத்தி ராமர் கோயில், காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கம், தேர்தல் நன்கொடை பத்திரம் உள்ளிட்ட வழக்குகளில் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்புகளை அவர் எழுதியுள்ளார். கடந்த 10-ம் தேதி சந்திரசூட் ஓய்வு பெற்றார். தனது கடைசி பணி நாளில் அவர் கருணை உள்ளத்துடன் முக்கிய தீர்ப்பினை வழங்கி உள்ளார்.
கருணை கொலை வழக்கு: உத்தர பிரதேசத்தின் காஜியாபாத்தை சேர்ந்தவர் அசோக் ராணா (60). இவரது மனைவி நிர்மலா தேவி (55). அவர்களது மூத்த மகன் ஹரிஷ் (30). கடந்த 2013-ம் ஆண்டில் சண்டிகர் பல்கலைக்கழகத்தில் கட்டுமான பொறியியல் பாடப்பிரிவில் ஹரிஷ் படித்து கொண்டிருந்தார். பல்கலைக்கழக விடுதியில் தங்கியிருந்த அவர், கடந்த 2013 ஆகஸ்ட் 5-ம் தேதி விடுதியின் 4-வது மாடி பால்கனியில் இருந்து தவறி கீழே விழுந்தார். உடனடியாக சண்டிகரில் உள்ள அரசு மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். கோமா நிலையில் இருந்த அவர் மேல்சிகிச்சைக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சுமார் 11 ஆண்டுகள் பல்வேறு அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் ஹரிஷ் கோமாவில் இருந்து மீளவில்லை. குழாய் வழியாகவே அவருக்கு உணவு வழங்கப்படுகிறது.
ஹரிஷின் தந்தை அசோக் ராணா ஓட்டலில் பணியாற்றினார். அவருக்கு மாதம் ரூ.28,000 ஊதியம் கிடைத்தது. இதில் ரூ.27,000-ஐ தனது மகனின் சிகிச்சைக்காக செலவு செய்து வந்தார். உறவினர்கள், நண்பர்கள் உதவியுடன் அவர் குடும்பத்தை நடத்தி வந்தார்.
» ஏஐ தொழில்நுட்பத்துக்கு மாறுவதில் இந்தியா முன்னிலை: ஆய்வில் தகவல்
» ஹிஸ்புல்லா மீதான தாக்குதல் தொடரும்: இஸ்ரேல் பாதுகாப்பு துறை அமைச்சர் அறிவிப்பு
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அசோக் ராணா பணியில் இருந்து ஓய்வு பெற்றார். தற்போது குடும்பத்தை நடத்த அவர் வீட்டில் தின்பண்டங்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறார். அதில் போதிய வருவாய் கிடைக்கவில்லை. மகனின் சிகிச்சைக்கு செலவு செய்ய பணம் இன்றி அவர் பரிதவித்தார்.
இந்த சூழலில் மகனை கருணை கொலை செய்ய அனுமதிக்குமாறு டெல்லி உயர் நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்தார். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதை எதிர்த்து கடந்த ஆகஸ்ட் மாதம் உச்ச நீதிமன்றத்தில் அசோக் ராணா மேல்முறையீடு செய்தார்.
அப்போதைய தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு வழக்கை விசாரித்தது. பணி ஓய்வுக்கு முன்பாக தீர்ப்பை வழங்க தலைமை நீதிபதி வழக்கை விரைவாக விசாரித்தார். கடந்த 10-ம் தேதி தனது கடைசி பணி நாளில் சந்திரசூட் தீர்ப்பினை வழங்கினார். அந்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது: கோமா நிலையில் இருக்கும் மகன் ஹரிஷை, உத்தர பிரதேசத்தின் காஜியாபாத்தில் உள்ள வீட்டில் வைத்து பெற்றோர் பராமரித்து வருகின்றனர். மகனின் மருத்துவச் செலவுக்கு அவர்களிடம் போதிய நிதி வசதி இல்லை.
இதை கருத்தில் கொண்டு ஹரிஷின் மருத்துவச் செலவு முழுவதையும் உத்தர பிரதேச அரசே ஏற்க வேண்டும். வீட்டில் வைத்தே அவருக்கு சிகிச்சை வழங்க வேண்டும். ஹரிஷின் உடல்நிலை மோசமானால் நொய்டாவில் உள்ள அரசு மருத்துவனையில் சேர்த்து உரிய சிகிச்சை அளிக்க வேண்டும். இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டு உள்ளது.
மகனை கருணை கொலை செய்யக் கோரிய பெற்றோரின் கண்ணீரை துடைக்கும் வகையில் தீர்ப்பு வழங்கிய சந்திரசூட்டுக்கு சமூக வலைதளங்களில் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago