ஜார்க்கண்ட் தேர்தலில் இண்டியா - என்டிஏ நேரடிப் போட்டி: 7 முன்னாள் முதல்வர்களுக்கு பெரும் சவால்

By ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தல் நவம்பர் 13 மற்றும் 20 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெறுகிறது. ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) தலைமையில் இண்டியா கூட்டணி மற்றும் எதிர்க்கட்சியான பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது.

இந்த 2 கூட்டணிகளிலும் போட்டியிடும் சில வேட்பாளர்களின் வெற்றியில் ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர்கள் 7 பேரின் கவுரவம் இருப்பதாகக் கருதப்படுகிறது.

ஜார்க்கண்டின் தற்போதைய முதல்வரும் ஜேஎம்எம் கட்சி தலைவருமான ஹேமந்த் சோரன் போட்டியிடுகிறார். சில காலமே முதல்வராக இருந்த சம்பை சோரன் பாஜக.வில் இணைந்து அதே தொகுதியான சராய்கேலாவில் மீண்டும் போட்டியிடுகிறார். முன்னாள் முதல்வரான சம்பையிடம் கடந்த தேர்தலில் சுமார் 15,000 வாக்குகளில் தோல்வியுற்றவர் பாஜகவின் கணேஷ் மஹாலி. இவர் இந்த தேர்தலில் ஜேஎம்எம் கட்சியில் இணைந்து சம்பையை எதிர்க்கிறார்.

சம்பையின் மகன் பாபுலால் சோரனும் இந்த தேர்தலில் கட்சிலா தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடுகிறார். இருவரும் வெற்றி பெற்றால்தான் அவர்களுக்கு அரசியல் எதிர்காலம் தொடரும் நிலை உள்ளது. ஜார்க்கண்டின் முதல் முதல்வரும் பாஜக மாநில தலைவருமான பாபுலால் மராண்டியும் இந்த தேர்தலில் தன்வார் தொகுதியில் போட்டியிடுகிறார். இங்கு ஜேஎம்எம் சார்பில் நிஜாமுதீன், சிபிஐ சார்பில் ராஜ்குமார் யாதவும் போட்டியிடுகின்றனர். எனவே, பாபுலால் மராண்டியின் வெற்றி சவாலாகி விட்டது.

மற்றொரு முன்னாள் முதல்வர் அர்ஜுன் முண்டா, இந்த தேர்தலில் போட்டியிடவில்லை. இவரது மனைவி மீரா முண்டா, போட்கா தொகுதியில் போட்டியிடுகிறார். இவர், ஜேஎம்எம் கட்சி எம்எல்ஏ சஞ்சீவ் சர்தாரை எதிர்த்து போட்டியிடுகிறார். தன் கணவர் அர்ஜுன் முண்டாவின் செல்வாக்கை நம்பியுள்ளார் மீரா முண்டா.

ஜார்க்கண்டில் பதவிக் காலத்தை முதல் முறையாகப் பூர்த்தி செய்தவர் பாஜக முதல்வர் ரகுவர் தாஸ். கடந்த 2019-ல் இவரது தோல்விக்கு பின் ஒடிசா ஆளுநராக்கப்பட்டார். இவரது செல்வாக்கை நம்பி அவரது மருமகள் பூர்ணிமா தாஸ் சாஹு பாஜக சார்பில் போட்டியிடுகிறார். இவர் தனது மாமனார் 5 முறை வென்ற ஜம்ஷெட்பூர் கிழக்கு தொகுதியில் போட்டியிடுகிறார்.

சிபு சோரனின் மகனும் முதல்வருமான ஹேமந்த் சோரன், மருமகள் கல்பனா சோரன், இளைய மகன் பஸந்த் சோரன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். சிபுவின் மூத்த மருமகள் சீதா சோரன் இந்த முறை ஜேஎம்எம் கட்சியிலிருந்து விலகி பாஜக சார்பில் போட்டியிடுகிறார்.

சுயேச்சையாக இருந்து முதல்வர் பதவியில் அமர்ந்தவர் மது கோடா. ஊழல் வழக்கில் சிறை சென்றதால் தேர்தலில் போட்டியிடவில்லை. இவரது மனைவி கீதா கோடா பாஜக.வுக்காக ஜெகன்நாத்பூர் நகர் தொகுதியில் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து அந்த தொகுதியின் எம்எல்ஏ சோனா ராம் சிங்கு போட்டியிடுகிறார். மக்களவை தேர்தலில் பாஜகவுக்காக ஜெகன்நாத்பூரில் போட்டியிட்டு தோல்வி அடைந்த கீதா கோடா தன் கணவர் மது கோடா பெயரால் வாக்கு சேகரிக்கிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

1 day ago

மேலும்