இஸ்ரோவுடன் இணைந்து விண்கல ஆராய்ச்சி மையத்தை தொடங்குகிறது சென்னை ஐஐடி

By செய்திப்பிரிவு

சென்னை: இஸ்ரோவுடன் இணைந்து விண்கலம் மற்றும் ஏவுவாகன வெப்ப மேலாண்மை தொடர்பான ஆராய்ச்சி மையத்தை தொடங்க இருப்பதாக சென்னை ஐஐடி தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை ஐஐடி வெளியிட்டுள்ள அறிக்கையில், “இஸ்ரோவுடன் இணைந்து விண்கலம் மற்றும் ஏவுவாகன வெப்ப மேலாண்மை (Spacecraft & Launch vehicle Thermal Management) தொடர்பான ஆராய்ச்சி மையத்தை சென்னை ஐஐடி தொடங்க இருக்கிறது. பல்வேறு கூறுகளின் வடிவமைப்பு, பகுப்பாய்வு, சோதனை தொடர்பான வெப்பச் சிக்கல்களை ஆய்வு செய்வதற்கான ஒருங்கிணைப்பு மையமாக இந்த ‘திரவ- வெப்ப அறிவியல் பற்றிய உயர் சிறப்பு மையம்’ செயல்படும்.

இஸ்ரோவின் விண்கலம் மற்றும் ஏவுவாகனம் தொடர்பான வெப்ப மேலாண்மை ஆராய்ச்சி நடவடிக்கைகளுக்கான ஒருங்கிணைப்பு மையமாக இந்த மையம் செயல்படும். சென்னை ஐஐடி ஆசிரியர்களின் நிபுணத்துவத்தை மேம்படுத்துவதன் மூலம், பல்வேறு கூறுகளின் வடிவமைப்பு, பகுப்பாய்வு, சோதனை தொடர்பாக ஏற்படும் வெப்பச் சிக்கல்களுக்கு தீர்வுகாண முடியும்.

இந்த ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் சென்னை ஐஐடி (தொழில்துறை ஆலோசனை மற்றும் நிதியுதவி ஆராய்ச்சி) டீன் பேராசிரியர் மனு சந்தானம், இஸ்ரோவின் தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் கண்டுபிடிப்பு இயக்குநரகத்தின் இயக்குநர் டி.விக்டர் ஜோசப் ஆகியோர் நவம்பர் 11, 2024 அன்று கையெழுத்திட்டனர். சென்னை ஐஐடி இயந்திரப் பொறியியல் துறையின் திட்ட ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் அரவிந்த் பட்டமட்டா, சென்னை ஐஐடி, இஸ்ரோ ஆகியவற்றில் இத்துறை சம்பந்தப்பட்டவர்கள் பலரும் இந்நிகழ்வின்போது உடனிருந்தனர்.

இந்த ஒத்துழைப்பின் முக்கிய அம்சங்கள்: வெப்ப மேலாண்மை ஆராய்ச்சி மையம்: விண்கலம் மற்றும் ஏவுவாகனத்திற்கான வெப்ப மேலாண்மையில் உள்ள சவால்கள் குறித்து ஆய்வு செய்வதுடன், இஸ்ரோவுக்கான முக்கிய ஆராய்ச்சித் தளமாக இந்த மையம் செயல்படும்.

நிதி ஒதுக்கீடு: ஆராய்ச்சி மையத்தை அமைப்பதற்கான அத்தியாவசிய உள்கட்டமைப்பு, உபகரணங்கள் போன்றவற்றுக்கு ரூ.1.84 கோடி தொடக்க நிதியையும், நுகர்பொருட்கள், பராமரிப்பு மற்றும் திரவ-வெப்ப அறிவியலின் எதிர்காலத் திட்டங்களுக்கான கூடுதல் தொகையையும் இஸ்ரோ வழங்கும்.

மேம்பட்ட ஆராய்ச்சித் திட்டங்கள்: விண்கலத்தின் வெப்ப மேலாண்மை, ஹைபிரிட் ராக்கெட்டுகளில் உறுதியற்ற எரிப்புத்தன்மை, கிரையோ டேங்க் வெப்ப இயக்கவியல் உள்ளிட்டவை இந்த ஆராய்ச்சித் திட்டத்தின் முக்கிய பகுதிகளாகும்.

தொழில்துறை-கல்வித்துறை ஒத்துழைப்பு: இஸ்ரோ விஞ்ஞானிகள், சென்னை ஐஐடி ஆசிரியர்களுக்கு இடையேயான ஒத்துழைப்பை மேம்படுத்துவதுடன், திரவ- வெப்ப அறிவியலில் புதிய கண்டுபிடிப்புகளையும் இந்த மையம் உருவாக்கும்.

‘திரவ- வெப்ப அறிவியலில்’ ஆராய்ச்சிக்காக சென்னை ஐஐடி நிறுவத் திட்டமிட்டுள்ள உயர் சிறப்பு மையம், இஸ்ரோவின் விண்கலம் மற்றும் ஏவுவாகனம் தொடர்பான வெப்ப மேலாண்மை ஆராய்ச்சி நடவடிக்கைகளுக்கு ஒருங்கிணைப்பு மையமாகவும் செயல்படும். ஆசிரியர்களின் நிபுணத்துவத்தை மேம்படுத்துவதன் மூலம், பல்வேறு கூறுகளின் வடிவமைப்பு, பகுப்பாய்வு, சோதனை தொடர்பாக ஏற்படும் வெப்பச் சிக்கல்களுக்கு தீர்வுகாண முடியும்.

இந்த முன்மொழிவை மதிப்பீடு செய்த இஸ்ரோ நிறுவனம், விண்கல வெப்ப மேலாண்மை, ஹைபிரிட் ராக்கெட்டுகளில் எரிப்பு உறுதியற்ற தன்மை, கிரையோ-டேங்க் தெர்மோடைனமிக்ஸ் ஆய்வுகள் போன்றவற்றில் இஸ்ரோவின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடுக்கான செயல்பாடுகளுக்கு புதிதாக உருவாக்கப்படும் மையம் உதவிகரமாக இருக்கும் என கண்டறிந்தது. மேலும், விண்வெளித் துறை, இஸ்ரோ ஆகியவை திரவ மற்றும் வெப்ப அறிவியல் தொடர்பான ஆராய்ச்சி நடவடிக்கைகளை விரிவுபடுத்தும்போது இந்த மையத்தை பயன்படுத்திக் கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை ஐஐடி இயந்திரப் பொறியியல் துறையின் பேராசிரியர் அரவிந்த் பட்டமட்டா, “இந்த மையம் தனித்துவமான தொழில்-கல்வி பயன்பாட்டை மேம்படுத்தும். இஸ்ரோ விஞ்ஞானிகள், சென்னை ஐஐடி ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோர் ஒருங்கிணைந்து முக்கிய பகுதிகளில் ஆராய்ச்சியை முன்னெடுக்க இந்த முயற்சி வகைசெய்கிறது. வெப்ப அறிவியலின் சிக்கலான சவால்களை எதிர்கொள்வதன் மூலம் நாட்டின் விண்வெளித் திட்டத்தில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கவும், விண்வெளித் தொழில்நுட்பங்களில் இந்தியாவின் தன்னம்பிக்கையை வலுப்படுத்தவும் இலக்கு நிர்ணயித்துள்ளோம்” என்றார்.

நாட்டின் உண்மையான தன்னம்பிக்கை, தன்முயற்சி விண்வெளித் திட்டத்தை செயல்படுத்த வேண்டுமெனில் மேம்பட்ட கல்வி ஆராய்ச்சி மூலம் அடிப்படை அறிவை உருவாக்க வேண்டும் என்ற உயரிய நோக்குடன் இஸ்ரோ, ஐஐடி மெட்ராஸ் ஆகியவை இணைந்து 1985-ம் ஆண்டில் ‘இஸ்ரோ-ஐஐடிஎம் ஸ்பேஸ் டெக்னாலஜி செல்’ என்ற பிரிவைத் தொடங்கியது குறிப்பிடத்தக்கது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 mins ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

மேலும்